காட்பாடி வள்ளிமலை ரோட்டில் உள்ள இளமின் பொறியாளர் அலுவலகத்தில் வசூல் வேட்டையில் ஈடுபடும் ஃபோர்மேன்!வேலூர், ஆக. 8-வேலூர் மாவட்டம், காட்பாடி வள்ளிமலை ரோட்டில் அன்னை நகர் பகுதியில் இளமின் பொறியாளர் அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்தில் ஃபோர்மேனாக சிவலிங்கம் என்பவர் பணியாற்றி வருகிறார். இந்த அலுவலகத்துக்கு புதிய மின் இணைப்பு பெறுவதற்கும் இன்னும் பிற தேவைகளுக்காக செல்லும் நுகர்வோர்களை மறித்து அவர்கள் கழுத்தில் துண்டைப் போட்டு இறுக்கி எப்படியாவது பணம் வசூல் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார் இந்த ஃபோர்மேன் சிவலிங்கம் என்று சொன்னால் அது மிகையாகாது. அத்துடன் இவருக்கு பதவி உயர்வுகள் கொடுத்து வேறு இடத்திற்கு பணியிட மாற்றம் செய்ய மின்வாரியம் எவ்வளவோ நடவடிக்கை எடுத்தும் இவர் நான் எங்கும் செல்ல மாட்டேன் என்றும், எனக்கு பதவி உயர்வும் வேண்டாம் என்றும் சொல்லிவிட்டு இதே அலுவலகத்தில் தொடர்ந்து கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. எப்படி இவரை மின்வாரியம் விடுவித்து இவரை கண்டும் காணாமல் இருப்பதற்கான காரணம் மற்றும் இவருக்கு பின்புலமாக இருப்பது யார்? என்பது போன்ற பல விடை தெரியாத கேள்விகள் இவரைச் சுற்றி வலம் வந்தபடி உள்ளன. பல்வேறு சிக்கல்கள் ஆன சட்ட ரீதியாக பிரச்சனைகள் உள்ள இடங்களில் கூட இவர் தனது அதிகாரத்தை பயன்படுத்தி புதிய மின் இணைப்புகள் கொடுப்பது மற்றும் பல்வேறு அதிகார துஷ்பிரயோகங்களில் இவர் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது. மின்வாரியத்தில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறையிலும் இவர் இதுநாள் வரை சிக்காமல் தப்பித்துக் கொண்டு வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. லஞ்சம் வாங்கிய பணத்தை பத்திரமாக வீட்டில் கொண்டு போய் பத்திரப்படுத்திவிட்டு வருவது தான் இவரது வழக்கமாக உள்ளது. இவரை பார்த்தால் பசு போன்று தெரியும். ஆனால் பாய்ந்தால் புலி. அதாவது வசூல் வேட்டை புலி என்று சொன்னால் அதற்கு இவரைத்தான் உதாரணமாக சொல்லலாம். அந்த அளவிற்கு இவரது பணி மிகவும் கேவலமாக உள்ளது. மின் நுகர்வோர்கள் இவரை பார்த்தாலே அஞ்சி அலறி அடித்து ஓடும் அவலம் அறுவெருக்கத்தக்க வகையில் உள்ளது. இந்த அலுவலகத்தை பொருத்தவரை இவர் நினைத்தது தான் சட்டம் என்று இளமின் பொறியாளரை ஓரங்கட்டி விட்டு இவரது ராஜ்ஜியத்தை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சிவலிங்கம் மீது வேலூர் மாவட்டத்தில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறையும், மின்வாரியத்தில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறையும் ஒரு கண் வைத்தால் அந்த பொறியில் இந்த திமிங்கலம் கட்டாயம் சிக்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. லஞ்ச ஒழிப்புத்துறையினர் மனது வைக்க வேண்டும் என்பதே மின் நுகர்வோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மற்றும் அவரால் பாதிக்கப்பட்ட பொதுமக்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாக மாறி உள்ளது குறிப்பிடத்தக்கது. லஞ்ச ஒழிப்புத்துறையினரின் செயல்பாடுகளை இனி பொறுத்தி ருந்துதான் பார்க்க வேண்டும்.

பறவைக் காவடி எடுத்து பக்தர்கள் ஸ்ரீ பாலமுருகனுக்கு நேர்த்திக்கடன்!வேலூர், ஆக. 8-வேலூர் மாவட்டம், அணைக்கட்டு வட்டம், அணைக்கட்டு அடுத்த மூலகேட் பகுதியில் வேலாடும் தணிகை மலையில் ஸ்ரீ பாலமுருகன் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்திற்கு ஆண்டுதோறும் பக்தர்கள் ஆடி மாத கிருத்திகையில் பறவைக்காவடி மற்றும் வேல் அலகு குத்தியும் மற்றும் பல்வேறு வேண்டுதல்களை நிறைவேற்றிக் கொள்ள தங்களது நேர்த்திக்கடனை வேண்டியது போல செலுத்தி வருவது வழக்கம். அதேபோன்று இந்த ஆண்டும் ஆடி மாத கிருத்திகையை முன்னிட்டு வேலாடும் தணிகை மலை ஸ்ரீ பாலமுருகன் ஆலயத்திற்கு பறவைக் காவடி எடுத்து பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். அணைக்கட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

மத்திய அமைச்சரை சந்தித்து வேலூர் விமான நிலையத்தை விரைவில் திறக்க கோரிக்கை: எல்.கே. சுதீஷ் எம்.பி. வலியுறுத்தல்வேலூர், ஆக. 8-தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் (தேமுதிக) பொருளாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான எல்.கே. சுதீஷ், எம்.பி., மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சரை வெள்ளிக்கிழமை நேரில் சந்தித்து, வேலூர் விமான நிலையத்தை விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வர தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கோரி மனு அளித்தார்.அவர் அளித்த மனுவில், RCS-UDAN-II திட்டத்தின் கீழ் 2017ஆம் ஆண்டு வேலூர் விமான நிலையம் தேர்வு செய்யப்பட்டதாகவும், தற்போது DGCA ஆய்வுப் பணிகள் நிறைவடைந்து, விமான நிலைய உரிமம் வழங்கும் இறுதிக்கட்ட நடைமுறைகள் நடைபெற்று வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.தற்போது BCAS-இன் இறுதி பாதுகாப்பு அனுமதி வழங்கப்பட வேண்டிய நிலையில் உள்ளதாகவும், அந்த அனுமதி கிடைத்தவுடன் DGCA உரிமம் வழங்கி, விமான நிலையத்தை உடனடியாக செயல்பாட்டிற்கு கொண்டு வர முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை உள்ளிட்ட வடதமிழக மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் கடந்த 9 ஆண்டுகளாக விமானப் போக்குவரத்து வசதிக்காக காத்திருப்பதாகவும், விமான நிலையம் செயல்பாட்டுக்கு வந்தால் மருத்துவ சுற்றுலா, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் (MSME), மாணவர்கள், தொழில் முனைவோர் மற்றும் பொதுமக்கள் பெரிதும் பயனடைவதுடன், வடதமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும் முக்கிய பங்காற்றும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.எனவே, BCAS மற்றும் DGCA அதிகாரிகளுக்கு தேவையான அறிவுறுத்தல்களை வழங்கி, இறுதி பாதுகாப்பு அனுமதி மற்றும் விமான நிலைய உரிமத்தை விரைந்து வழங்கி, UDAN திட்டத்தின் கீழ் வேலூர் விமான நிலையத்தில் விமான சேவைகளை உடனடியாக தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அமைச்சரிடம் எல்.கே. சுதீஷ் எம்.பி. கோரிக்கை விடுத்தார்.இந்த முயற்சியின் மூலம் வேலூர் விமான நிலையம் விரைவில் செயல்பாட்டுக்கு வந்து, வடதமிழகத்தின் விமானப் போக்குவரத்து இணைப்பு வலுப்பெறும் என்ற நம்பிக்கையை தேமுதிக தெரிவித்துள்ளது.

‘எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்தவர் கருணாநிதி’தி.மு.க., ஒன்றிய செயலாளர் என்.சங்கர் புகழாரம் !செய்யாறு, ஆக. 8 -செய்யாறு அடுத்த வெம்பாக்கம் கிழக்கு ஒன்றிய தி.மு.க., சார்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவுதினத்தையொட்டி அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. கிராம மக்கள் 500க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.வெம்பாக்கம் அடுத்த கனிகலுப்பை கிராமத்தில் நடந்த இந்நிகழ்ச்சிக்கு, வெம்பாக்கம் கிழக்கு ஒன்றிய செயலாளர் என்.சங்கர் தலைமை தாங்கினார். மாவட்ட அயலக அணி துணைத் தலைவர் எம்.கே. கார்த்திகேயன் முன்னிலை வகித்தார். கிராம நுழைவுவாயிலில் நிறுவப்பட்டிருந்த கருணாநிதியின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.அப்பொழுது வெம்பாக்கம் கிழக்கு ஒன்றிய செயலாளர் என்.சங்கர் பேசியதாவது; ‘தமிழகத்தில் 7 முறை முதல்வராக பதவி வகித்தவர் முன்னாள் முதல்வர் மறைந்த கருணாநிதி. இவரால், கொண்டுவரப்பட்ட எண்ணற்ற திட்டங்களால் இன்றும் பொதுமக்கள் பயனடைந்து வருகின்றனர்.‌ தமிழகத்தில் புதியதாக ஆட்சி பொறுப்பேற்றுள்ள த.வெ.க., அரசு அனைத்து வீடுகளுக்கும் 200 யூனிட் மின்சாரத்தை இலவசமாக கொடுக்கும் என கூறியுள்ளது. ஆனால், ஒரு யூனிட்டுக்கு ஒரு ரூபாய் 50 காசை கூடுதலாக உயர்த்தி விட்டு, இலவச மின்சாரத்தை கொடுக்கிறோம் என்று சொல்வதில் அர்த்தமே இல்லை. ஏமாற்று வேலையை செய்து வருகிறது இந்த புதிய அரசு;’ இவ்வாறு ஒன்றிய செயலாளர் என்.சங்கர் நிகழ்ச்சியில் பேசினார். இதையடுத்து மாவட்ட துணைத் தலைவர் எம்.கே. கார்த்திகேயன் பேசும்போது; ‘தி.மு.க., ஒரு ஆலமரம் போன்றது. ஆலமரம் பட்டுப் போனாலும் விழுதுகள் தாங்கிப் பிடிக்கும். அதுபோல தமிழகத்தில் தி.மு.க., மீண்டும் மலரும். அதுவரை காத்திருப்போம்; ‘இவ்வாறுஎம்.கே.கார்த்திகேயன் பேசினார். இதைத் தொடர்ந்து கிராம மக்கள் 500க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் விநியோகம் செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தி.மு.க., பொறுப்பாளர்களான பிரபு, அமல்ராஜ், தியாகு, சின்னதுரை, தர்மலிங்கம், துரை உள்ளிட்ட ஏராளமான கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

ஆடி மாத கிருத்திகையை முன்னிட்டு காட்பாடி செங்குட்டையில் அன்னதானம் வழங்கல்!வேலூர் ,ஆக.8-வேலூர் மாவட்டம், காட்பாடி செங்குட்டை பகுதியில் திரௌபதி அம்மன் கோயில் எதிரில் சித்தூர்- கடலூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலை ஓரம் சாமியானா பந்தல் அமைத்து ஆகஸ்ட் மாத (ஆடி) கிருத்திகையை முன்னிட்டு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த அன்னதானம் நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை இடைவிடாது ஒரு மணி நேரம் வழங்கப்பட்டது. இந்த நன்னாளில் முருக பக்தர்களுக்கு வேலூர் செங்குட்டை மாடு விடும் தெருவைச் சேர்ந்த பாரத் காஸ் அச்சுதன் -அமுதா தம்பதியர் அன்னதானம் வழங்கினர். இந்த அன்னதானத்தில் கேசரி மற்றும் மதிய உணவாக சாம்பார் சாதம், ரசம் சாதம், வாழைப்பழம், மசால் வடை ஆகியன வழங்கப்பட்டது. சுமார் 500க்கும் மேற்பட்ட முருக பக்தர்கள் வரிசையில் நின்று இந்த அன்னதானத்தை பெற்று உண்டு மகிழ்ந்து தங்களது பசியாற்றி கொண்டனர்.இந்த அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை அச்சுதன் தனது திருக்கரங்களால் தொடங்கி வைத்தது குறிப்பிடத்தக்கது. முதலாவதாக ஸ்ரீ பாலமுருகன் திருவுருவப் படத்துக்கு மலர்களால் அலங்காரம் செய்து வழிபாடு நடந்தது. இதையடுத்து அன்னதானம் நடந்தது. இந்த அன்னதானத்துக்கான அனைத்து ஏற்பாடுகளையும் அச்சுதன் -அமுதா தம்பதியருடன் அவரது குடும்பத்தினர் மற்றும் அவரது நண்பர்கள், நெருங்கிய உறவினர்கள் வெகு விமரிசையாக செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியில் அச்சுதனுக்கு உதவியாக தெலுங்கானா நக்சலைட் தேடுதல் வேட்டை பிரிவு உதவி ஆய்வாளர் ரவி, அதிமுக முன்னாள் கவுன்சிலர் காட்பாடி செங்குட்டை குமார், தொழிலதிபர் நந்தகுமார் பேருதவி புரிந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

காட்பாடி – வேலூர் பாலாறு ரயில்வே மேம்பாலம் மீது ரயிலில் சிக்கி ஒருவர் பலி!வேலூர், ஆக. 6-வேலூர் மாவட்டம், காட்பாடி ரயில் நிலையத்தில் இருந்து வேலூர் கண்ட்டோன்மெண்ட் ரயில் நிலையம் செல்லும் பாதையில் பாலாற்றின் மீதுள்ள ரயில்வே மேம்பாலத்தின் தண்டவாளத்தில் ரயிலில் சிக்கி உயிரிழந்த நிலையில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இது குறித்துதகவல் அறிந்து அங்கு சென்ற காட்பாடி இருப்பு பாதை போலீசார் இறந்து கிடந்தவரின் உடலைக் கைப்பற்றி வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.காட்பாடி இருப்புப் பாதை போலீசார் இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து உயிரிழந்தவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? இவர் ரயிலில் இருந்து தவறி விழுந்தாரா? , தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கவனக்குறைவாக தண்டவாளத்தை கடக்கும்போது ரயிலில் சிக்கி உயிரிழந்தாரா? என பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்யாறில் குப்பை கிடங்காக மாறிவரும் ‘வாணிய குளத்தை’மீட்கக் கோரி காமராஜர் நகர் பொது மக்கள் சப் – கலெக்டரிடம் புகார் மனு!செய்யாறு, ஆக. 6 -செய்யாறு காமராஜர் நகரில் ‘குப்பை கிடங்கு – கழிவுகள் கொட்டும் இடமாக’ மாறி வரும் வாணிய குளத்தை மீட்க வேண்டும் என, பொதுமக்கள் செய்யாறு சப் – கலெக்டரிடம் புகார் மனுவை கொடுத்துள்ளனர்.செய்யாறில் அமைந்துள்ளது காமராஜர் நகர். இங்கு பழமையான வாணியக்குளம் மக்கள் பயன்பாட்டில் இருந்து வந்தது. ஒரு ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த குளத்தின் கரைகளைச் சுற்றி 20க்கும் மேற்பட்ட வெவ்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் ஆக்கிரமித்து வீடுகளை கட்டி வசித்து வருகின்றனர். எஞ்சியுள்ள குளத்தை கழிவுநீர் – கழிவுப் பொருட்கள், குப்பைகளையும் கொட்டி கொஞ்சம் கொஞ்சமாக மூடி தூர்ந்து போகச் செய்து வருகின்றனர்.இந்த நிலை தொடர்ந்தால் குளமே காணாமல் போய்விடும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. இந்த குளத்தை முழுமையாக மீட்க வேண்டும் என, காமராஜர் நகரைச் சேர்ந்த பொது மக்கள் நேற்று செய்யாறு சப் – கலெக்டர் அம்பிகா ஜெயினிடம் புகார் மனுவை கொடுத்துள்ளனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது; ‘திருவத்திபுரம் நகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள வாணியக்குளம் குப்பை கொட்டும் கிடங்காக மாறிவிட்டது. இந்த குளத்தை மீட்டெடுத்தால் இங்கு நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்தே இருக்கும். இங்குள்ள ஆக்கிரமிப் பாளர்களை வேறு இடத்திற்கு மாற்றம் செய்து குளத்தை முழுமையாக மீட்டெடுத்து, நடைபாதை, பூங்கா உள்ளிட்ட வசதிகளை நகராட்சி நிர்வாகம் செய்து கொடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந்த புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அலுவலக உதவியாளரை 7 நாட்களும் வேலைக்கு வருமாறு கூறி அவரை டார்ச்சர் செய்யும் கணியம்பாடி வட்டார வளர்ச்சி அலுவலர்!வேலூர், ஆக. 5-வேலூர் மாவட்டம், வேலூர் வட்டம், கணியம்பாடி வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றுபவர் ரமேஷ்குமார். இவர் என்றைக்கு கணியம்பாடி வட்டார வளர்ச்சி அலுவலராக பணிக்கு வந்தாரோ அன்று முதல் இன்று வரை கணியம்பாடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பணிபுரியும் யாரிடமும் சரியாக பேசுவது கிடையாது. இவருக்கும் இங்கு பணியாற்றும் அனைத்து பணியாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கும் இடையில் ஒரு பணிப்போர் அமைதி கரமாக நடந்து வருகிறது. இந்த பணிப் போருக்கு காரணமே பிடிஓ ரமேஷ் குமார் தான் என்று சொன்னால் அது மிகையாகாது. இந்த வட்டார வளர்ச்சி அலுவலராக உள்ள ரமேஷ் குமார் கணியம்பாடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் அலுவலக உதவியாளராக பணிபுரியும் ஒரு நபரை தினசரி டார்ச்சர் செய்வது, அவரை பணி செய்ய விடாமல் தடுப்பது, அவரை மன உளைச்சலுக்கு உள்ளாக்குவது என்று விதவிதமாக அவரை கொடுமைப்படுத்தி ரசித்து வருகிறார் வட்டார வளர்ச்சி அலுவலர் ரமேஷ் குமார் என்று சொன்னால் அது மிகையாகாது. அத்துடன் ஒரு படி மேலே சென்று பிடிஓ அந்த அலுவலக உதவியாளரை நீ ஒருநாளும் ஓய்வு எடுக்கக் கூடாது, வார விடுமுறை எடுக்கக் கூடாது 7 நாட்களும் தினசரி அலுவலகத்திற்கு வந்து செல்ல வேண்டும் என்று அவருக்கு வாய்மொழி உத்தரவு கொடுத்து அவரை டார்ச்சர் டார்ச்சர் செய்து வருகிறார். ஒருமையில் திட்டுகிறார். இப்படி வார விடுமுறை எடுத்துக் கொண்டு, ஓய்வு எடுத்துக் கொண்டால் இங்கு யார் வேலை பார்ப்பது என்று கேள்வி கேட்கிறார். பணிக்கு வராமல் நீ என்ன வீட்டில் செய்கிறாய் என்று ஒருமையில் பேசி அவரை கடும் மன உளைச்சலுக்கு உள்ளாக்கி வருகிறார் வட்டார வளர்ச்சி அலுவலர் ரமேஷ் குமார். இவர் குறித்து மேல் அதிகாரிகளுக்கு தகவல்கள் தெரிவித்த பிறகும் மேலதிகாரிகள் வட்டார வளர்ச்சி அலுவலர் ரமேஷ் குமார் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அமைதி காத்த வண்ணம் உள்ளனர். ஆதலால் இந்த புகாரின் மீது உரிய விசாரணை நடத்தி வட்டார வளர்ச்சி அலுவலர் ரமேஷ் குமார் மீது துறை ரீதியான சட்ட நடவடிக்கையை விரைந்து எடுக்க வேண்டும் என்று கணியம்பாடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் பணியாளர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டுள்ளனர். மாவட்ட ஆட்சியர் பிடிஓ மீது என்ன நடவடிக்கை எடுக்கிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.