செம்பராயநல்லூர் ஊராட்சியில் கிராம சபை கூட்டம்!வேலூர், ஆக. 16-வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டம், செம்பராயநல்லூர் ஊராட்சியில் ஊராட்சி மன்ற அலுவலக மேல் தளத்தில் சுதந்திர தின சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு ஊராட்சி மன்ற தலைவி ஜீவிதா ரமேஷ் தலைமை வகித்தார். ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் செம்பராயநல்லூர் கிராம பொதுமக்கள் மற்றும் பல்வேறு அரசு துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்த கிராம சபை கூட்டத்தில் செம்பராயநல்லூர் கிராமத்திற்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து விரிவாக ஆலோசித்து முடிவெடுக்கப்பட்டது. கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் தேநீர் விருந்து அளித்து உபசரிக்கப்பட்டது.

காட்பாடியில் நடந்த விவசாயிகள் குறை தீர்வு கூட்டத்தை புறக்கணிப்பு செய்த விவசாயிகள்: காட்பாடி வட்டாட்சியர் மகேஸ்வரி மீது அடுக்கடுக்கான புகார்களை கூறும் விவசாய சங்கங்கள்!வேலூர்,ஆக.15-வேலூர் மாவட்டம், காட்பாடி கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் காட்பாடி தாலுகா அலுவலகத்தில் வட்டாட்சியர் மகேஸ்வரி தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் சிறிது நேரம் கூட இருக்கையில் அமராமல் கூட்டத்தை புறக்கணித்துவிட்டு அனைவரும் வெளிநடப்பு செய்தனர். இதனால் அந்த பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து விவசாயிகள் தரப்பில் கூறப்பட்ட புகார்கள் விவரம் வருமாறு: காட்பாடி பகுதியில் வேளாண் கோட்ட அலுவலகம் இல்லை. வேளாண் துணை இயக்குநர் மற்றும் வேளாண் கோட்ட அலுவலர் போன்ற பதவிகளுக்கு இதுவரை பொறுப்பாளர்கள் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளனர், நிரந்தரமாக யாரையும் அரசு நியமிப்பதில்லை. விவசாயிகள் பிரச்சனைகள் குறித்து புகார் தெரிவித்தால் அதிகாரிகள் நேரில் அழைத்து விசாரித்து நடவடிக்கை எடுப்பதில்லை. அலட்சியப் போக்குடனும், தெனாவெட்டுடனும் செயல்படுகின்றனர். அரசு அலுவலகங்களில் யாரும் லஞ்சம் கொடுக்க தேவையில்லை என்று தமிழக அரசின் உத்தரவுக்கு பிறகு விவசாயிகளின் குழந்தைகள் கல்லூரி படிப்புக்கு சேர வருமானம், சாதி, இருப்பிடம், முதல் பட்டதாரி உள்ளிட்ட சான்றிதழ்கள் பெறுவதற்கு தாலுகா அலுவலகத்திற்குச் சென்றால் அலைக்கழிக்கப்படுகின்றனர். விவசாயிகளை ஒரு சராசரி மனிதர்களாக கூட வட்டாட்சியர் மகேஸ்வரி மதிப்பது கூட கிடையாது. கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர் கையெழுத்திட்ட பின்னர் பல நாட்களாக எங்களது குழந்தைகளின் கல்வி சான்றிதழ்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இவை காட்பாடி வட்டாட்சியர் மகேஸ்வரி மேசையின் மீது கிடப்பில் போடப்பட்டு பத்து நாட்களுக்கும் மேலாக சான்றிதழ்கள் வழங்கப்படாமல் உள்ளது கண்டிக்கத்தக்கது. இதுநாள் வரை இதுபோன்று காட்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் சான்றிதழ்கள் வழங்குவதில் காலதாமதம் நடந்ததே கிடையாது. அத்துடன் மாதாந்திர விவசாயிகள் கூட்டங்கள் சரியாக நடத்தப்படுவதில்லை. விவசாயிகள் பிரச்சனை குறித்து எந்தவித நடவடிக்கையும் எடுப்பது இல்லை. அதைப்பற்றி கண்டு கொள்வதே இல்லை. இவ்வாறு அலட்சிய போக்கில் நடந்து கொள்கிறார் வட்டாட்சியர் மகேஸ்வரி. குறிப்பாக விவசாயிகள் கொடுக்கும் புகார்களை அலட்சியத்துடன் கையாள்வதுடன் அவர்களை ஒருமையில் பேசுவது, நீங்கள் என் மீது புகார் கொடுத்தால் கூட என்னை ஒன்றும் ஆட்டவோ, அசைக்கவோ முடியாது. நீங்கள் எங்கு வேண்டுமென்றாலும் போய் புகார் கொடுத்துக் கொள்ளுங்கள். ஏன் தமிழக முதல்வரிடம் கூட கொடுங்கள். என்னை முதல்வர் கூட ஒன்றும் செய்ய இயலாது என்று தெனாவெட்டாக பதில் அளிக்கிறார் இந்த வட்டாட்சியர் மகேஸ்வரி என்று சொன்னால் அதுதான் நிதர்சன உண்மை. காட்பாடியில் விவசாயிகளின் நலனுக்காக நாற்றுப்பண்ணை அமைக்க வேண்டும். பூமி ஆதார் எனப்படும் விவசாயிகளின் தனித்துவ அடையாள அட்டை வழங்க காலதாமதம் ஆகி வருகிறது. இதில் வருவாய்த் துறையினர் மெத்தனப் போக்கை கடைபிடிக்கின்றனர். கோட்டாட்சியரிடம் புகார் தெரிவித்தால் அவர்கள் சங்கம் அமைத்துள்ளனர். அதனால் அவர்கள் மீது எந்தவிதமான ஒழுங்கு நடவடிக்கையும் என்னால் எடுக்க இயலாது என்று கூலாக பதில் அளிக்கிறார் கோட்டாட்சியர் ராம்குமார். ஆந்திர மாநில எல்லையை ஒட்டியுள்ள உள்ளிபுதூர் பகுதியில் அமைந்துள்ள மாங்கூழ் தொழிற்சாலையின் கழிவுநீர் விவசாய நிலங்களில் பாய்ந்து ஓடி கலப்பதை நிரந்தரமாக தடுத்து நிறுத்த வேண்டும். இதற்கு வருவாய்த்துறையினர் அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும். வள்ளிமலை, கொல்லப்பள்ளி பகுதியில் உள்ள ஏரி மதகுகளை சீரமைக்க வேண்டும். மா விவசாயிகளின் நலனுக்காக மாங்கூழ் தொழிற்சாலையை இந்த பகுதியில் அமைக்க வேண்டும். அதேபோன்று கணியம்பாடி பகுதியில் செயல்படும் கல்குவாரிகளை தடுத்து நிறுத்த வேண்டும். குறிப்பாக இந்த பகுதியில் நிலத்தடி நீர் குறைந்து வருகிறது. இதனால் எலாநினோ தாக்கம் குறையும் வரை தற்போது கல்குவாரிகளை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகள் கடந்த காலங்களில் காட்பாடி வருவாய் வட்டாட்சியராக வருபவர்கள் அவர்களை தனியாக அழைத்துப் பேசி அவர்களது குறைகளை தீர்த்து வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். ஆனால் தற்போது வட்டாட்சியராக வந்துள்ள மகேஸ்வரியின் போக்கு மிகவும் விவசாயிகளுக்கு எதிரான போக்காக மாறி உள்ளது. அவரது விவசாயிகளின் விரோதப் போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும். இல்லை என்றால் விவசாயிகளை ஒன்று திரட்டி மாவட்ட அளவில் போராட்டம் நடத்தக்கூட விவசாயிகள் சங்கங்கள் தயங்காது என்று தெரிவித்துள்ளனர். இவ்வாறு பல்வேறு புகார்கள் வட்டாட்சியர் மகேஸ்வரி மீது கூறப்பட்டும் அவர் மீது மாவட்ட நிர்வாகமும், வருவாய்த்துறை அமைச்சரும் நடவடிக்கை எடுக்காமல் காலம் கடத்துவது ஆரோக்கியமானதாக இருக்காது என்று விவசாயிகள் தரப்பிலும், சமூக ஆர்வலர்கள் தரப்பிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே தமிழக அரசு காட்பாடி வட்டாட்சியர் மகேஸ்வரி மீது என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.