கூகுள் பே மூலம் ரூ.1 லட்சம் பணப் பரிவர்த்தனை? கண்காணிப்பாளரிடம் தீவிர விசாரணை
திருப்பத்தூர் நகராட்சி அலுவலகம் அருகே மாவட்ட சுகாதார அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் லஞ்சம் பெறப்படுவதாகத் திருப்பத்தூர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
தகவலின் பேரில் லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜன் தலைமையில், ஆய்வாளர் கௌரி, உதவி ஆய்வாளர் கணேசன் உள்ளிட்ட போலீசார் நேற்று மாலை 3 மணி முதல் இரவு 8.45 மணி வரை அலுவலகத்தில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
சோதனையின்போது, நாட்றம்பள்ளி அடுத்த பச்சூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கண்காணிப்பாளராகப் பணியாற்றி வரும் ரஜினி என்பவர், சென்னையைச் சேர்ந்த மருந்து கொள்முதல் ஒப்பந்ததாரர்களிடமிருந்து கூகுள் பே வாயிலாக ஒரு லட்சம் ரூபாய் பெற்றதாக பணப் பரிவர்த்தனை தொடர்பான விவரங்கள் விசாரணையில் தெரியவந்த தகவல் வெளியாகியுள்ளது.
இதனைத் தொடர்ந்து, பணப் பரிவர்த்தனை நடைபெற்ற விதம், அதற்கான காரணம் மற்றும் தொடர்புடைய விவரங்கள் குறித்து ரஜினியிடம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாவட்ட சுகாதார அலுவலகத்தில் பல மணி நேரம் நடைபெற்ற இந்தச் சோதனையால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.











Leave a Reply