செய்யாறில் புதிய அதிகாரி பொறுப்பேற்ற பிறகு கீழ்புதுப்பாக்கம் பகுதி தூய்மை பெறுகிறது !

செய்யாறு, நவ.3 –
செய்யாறு வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் புதியதாக பொறுப்பேற்றுள்ள மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலரால், கீழ்புதுப்பாக்கம் ஊராட்சியின் விரிவாக்கப் பகுதியில் குப்பைகள் அகற்றப்பட்டு புதுப்பொலிவு பெற்றுள்ளது.
செய்யாறு வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலராக கௌரி, கடந்த வாரம் பதவி உயர்வு பெற்று பொறுப்பேற்றுள்ளார்.‌ செய்யாறு நகரை ஒட்டியுள்ளது கீழ்புதுப்பாக்கம் ஊராட்சி. இதன் விரிவாக்கப் பகுதியில் 2 ஆயிரம் குடியிருப்புக்கள் உள்ளன.
இங்கு குடிநீர், தெரு விளக்குகள், குப்பைகள் அகற்றுவது உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளும் நிறைவேறவில்லை என, இங்குள்ள மக்களின் நீண்ட நாட்களாக குற்றச்சாட்டாக முன் வைத்து வந்தனர். இதற்கு தீர்வு காணும் வகையில், கடந்த 4 நாட்களாக ஒவ்வொரு தெருவின் நுழைவுவாயிலில் கொட்டப்பட்டு வரும் குப்பைகள் அகற்றும் பணிகள், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கெளரி மேற்பார்வையில், துப்புரவு பணியாளர்கள் மூலம் அகற்றப்பட்டு வருகிறது.
இதுகுறித்து, கீழ்ப்புதுப்பாக்கம் விரிவாக்கப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சிலர் கூறும்போது: ‘நாங்கள் வசித்து வரும் இங்கு அடிப்படை வசதிகள் சொல்லும் அளவிற்கு இல்லை. செய்யாற்று குடிநீரை பார்த்து பல மாதங்கள் ஆகிறது. வீடுகளில் சேகரமாகும் குப்பைகளை பெறுவதற்கு துப்புரவு பணியாளர்கள் வருவதில்லை. இதனால், அந்தந்த தெருவில் நுழைவுவாயிலில் குப்பைகளை கொட்ட வேண்டிய சூழல் உள்ளது. எங்கள் பகுதிக்கு புதியதாக பொறுப்பேற்றுள்ள மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கௌரி, எங்களது பகுதிக்கு தினமும் நேரடியாக வந்து குறைகளை கேட்டு, அடிப்படை வசதிகளை நிறைவேற்றி வருகிறார்.
அந்த இடங்களில் குப்பைகளை கொட்டக் கூடாது என, எச்சரிக்கை பெயர் பலகைகளை வைக்கவும் திட்டமிட்டுள்ளார். இதேபோல், நகரில் முக்கிய இடங்களில் ‘சிசிடிவி’ கேமராக்கள் பொருத்தி குப்பை கொட்டுபவர்களை கண்டறிந்து அவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளையும் அவரிடம் முன் வைத்துள்ளோம். இந்தப் புது அதிகாரியால், எங்கள் பகுதி புதுப்பொலிவு பெற்றுவிடும் என, எங்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது’. இவ்வாறு
கீழ்புதுப்பாக்கம் விரிவாக்க பகுதி பொதுமக்கள் கூறினர்.