சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் மருத்துவமனைக்கு தானமாக வழங்கல்!வேலூர், ஜூன் 2-ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு, விளாப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த 34 வயதான ராஜ்குமார் சதாநந்தம், கடந்த மே 29 அன்று விளாப்பாக்கம் கிராமம் அருகே சாலையில் இருசக்கர வாகனத்தில் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். இந்நிலையில் கடந்த மே 31 அன்று அவர் மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர். அவரது குடும்ப உறுப்பினர்கள் அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்தனர். இந்நிலையில் அவரது நுரையீரல்கள் மற்றும் ஒரு சிறுநீரகம் சென்னை காவேரி மருத்துவமனையிலும் , மற்றொரு சிறுநீரகம் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவமனைக்கும் வழங்கப்பட்டது. அவரது மனைவி பெயர் அன்பரசு . அவரது தந்தை சதானந்தன் ஒரு தச்சர் மற்றும் அவரது தாய் காஞ்சனா, இவர்களுக்கு நான்கு வயது மகன் ராக்கி மற்றும் இரண்டு வயது மகள் ராணியா என இரண்டு குழந்தைகள் உள்ளனர். இத்தகவலை வேலூர் சிஎம்சி மருத்துவமனையின் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் துரை ஜாஸ்பர் விடுத்துள்ள பத்திரிகை செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

அரசு நிலத்தை தனியாருக்கு தாரை வார்த்த அணைக்கட்டு முன்னாள் வட்டாட்சியர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப் பதிவு!வேலூர்,ஜூன் 2-வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுகா, வேப்பங்குப்பம் பகுதியில் சுமார் ரூ.20 லட்சம் மதிப்பிலான 1700 சதுர அடி இடத்தை கடந்த 2023/24 ஆம் ஆண்டில் தனிநபர் ஒருவரின் பெயரில் அப்போதைய அணைக்கட்டு வட்டாட்சியராக இருந்த வேண்டா, வேப்பங்குப்பம் கிராம நிர்வாக அலுவலர் சுரேஷ் ஆகியோர் பட்டா வழங்கியுள்ளனர்.இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் அரசு நிலத்தை தனிநபர் ஒருவருக்கு முறைகேடாக பட்டா வழங்கியது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து வட்டாட்சியர் வேண்டா, கிராம நிர்வாக அலுவலர் சுரேஷ் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து லஞ்ச ஒழிப்புதுறை போலீசார் விசாரித்து வருகின்றனர் .இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டதிலிருந்து வட்டாட்சியர் வேண்டா தற்போது மாவட்ட வருவாய் அலுவலர் அலுவலகத்தில் நில எடுப்பு பிரிவில் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கூறியதாவது: அணைக்கட்டு அடுத்த வேப்பங்குப்பம் கிராமத்தில் 1700 சதுர அடி இடத்தை போலீஸ் குடியிருப்பு கட்ட ஊராட்சி மன்ற தலைவர் சுகன்யாவின் கணவர் உமாபதி என்பவர் கடந்த 2023 ஆம் ஆண்டு பட்டா கேட்டு விண்ணப்பித்துள்ளார். இதை தொடர்ந்து கடந்த 2023 ஆம் ஆண்டு நா.கா.எண்: A1/2521 /2023ன் படி மேற்கண்ட சர்வே எண்களில் இருந்து சர்வே எண்கள் 130/ 3B மற்றும் 130/ 93B என்ற அங்கீகரிக்கப்படாத உட்பிரிவுகளை உருவாக்கி உமாபதி என்பவருக்கு சுமார் ரூ. 20 லட்சம் மதிப்பிலான 1700 சதுர அடிக்கு நத்தம் பட்டா வழங்கப்பட்டது. முதல் கட்ட விசாரணையில் வழங்கப்பட்ட பட்டாவிற்கு ஒரு தனி கோப்பு எண்ணை உருவாக்கி கிராம நிர்வாக அலுவலக பதிவேடுகளில் நத்தம் நிலவரித் திட்ட தூய அடங்கல் பதிவேடு மற்றும் களப்பதிவேட்டில் பதிவுகளை செய்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. இந்நிலையில் இது குறித்து வேலூர் கோட்டாட்சியர் விசாரணை நடத்தி கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வட்டாட்சியர் வேண்டா வழங்கிய பட்டாவை ரத்து செய்து உத்தரவிட்டார். மேலும் உமாபதி இலவச பட்டா பெற தகுதியற்றவர் என்பதும், அணைக்கட்டு வட்டாட்சியர் வேண்டா, கிராம நிர்வாக அலுவலர் சுரேஷ் ஆகியோர் பதவியை தவறாக பயன்படுத்தி தனிநபருக்கு அரசு நிலம் தொடர்பாக பட்டா வழங்கியது தெள்ளத் தெளிவாக தெரியவந்துள்ளது. இதையடுத்து வட்டாட்சியர் வேண்டா, கிராம நிர்வாக அலுவலர் சுரேஷ் ஆகியோர் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறோம். இவ்வாறு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தெரிவித்துள்ளனர். இது குறித்து சமூக ஆர்வலர் ஒருவர் கூறும்போது, அணைக்கட்டு வட்டாட்சியராக இருந்தபோது அப்போதைய திமுக ஆளுங்கட்சி முக்கிய பிரமுகர்களுடன் சேர்ந்து கொண்டு இது போன்று பல்வேறு முறைகேடுகளில் வட்டாட்சியர் வேண்டா ஈடுபட்டு வந்ததாகவும் தெரிவித்தார். இதனால் அவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்து இருப்பதாகவும், எனவே அவரது அசையும், அசையா சொத்துக்கள் மற்றும் இவரது ரத்த உறவு சம்பந்தப்பட்டவர்களின் ஆவணங்களின் அடிப்படையில் விசாரணையை துரிதப்படுத்தினால் பல்வேறு முறைகேடுகள் வெட்ட வெளிச்சத்துக்கு வரும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள். லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இதையும் கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர் தெரிவித்தார். குறிப்பாக அணைக்கட்டு தொகுதி எம்எல்ஏவாக இருந்த நந்தகுமார் வட்டாட்சியர் வேண்டாவுடன் சேர்ந்து கொண்டு பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக தெரியவந்துள்ளது என்று பொதுமக்கள் தரப்பில் கூறப்படுகிறது. இவ்வாறு பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்ட வட்டாட்சியர் வேண்டா மற்றும் கிராம நிர்வாக அலுவலர் சுரேஷ் ஆகியோர் மீது விரைந்து நடவடிக்கை எடுத்து அவர்களுக்கு தண்டனையை பெற்றுத் தர வேண்டும் என்று ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளனர். இது ஒன்றுதான் என்று இல்லை இது போன்று பல்வேறு முறைகேடுகள் அணைக்கட்டு வட்டாட்சியராக இருந்தபோது வேண்டா செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அரசு அதிகாரிகள் அரசியல்வாதிகளுடன் சேர்ந்து கொண்டு இப்படி ஆட்டம் போட்டால் இதுதான் தண்டனை என்பது அனைவருக்கும் உணர்த்தும் வகையில் வேண்டாவின் மீது அரசு எடுக்கும் நடவடிக்கை மற்றவர்களுக்கு ஒரு பாடமாக அமைய வேண்டும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள் மற்றும் அணைக்கட்டு தொகுதி பொதுமக்கள். வேண்டா மீது அரசு எடுக்கும் நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

காட்பாடி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் திருட்டு சம்பவம் நடந்ததால் சாலையோர தள்ளுவண்டிக்காரர்களை கடை வைக்க விடாமல் விரட்டியடித்த போலீசார்!வேலூர், ஜூன் 1-வேலூர் மாவட்டம், காட்பாடியில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி சித்தூர் -கடலூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது. இந்தப் பள்ளியில் கடந்த வாரம் பூட்டை உடைத்து பள்ளியில் இருந்த 28 லேப்டாப்கள் மற்றும் ரூபாய் 25 ஆயிரம் ரொக்கப் பணம் ஆகியவற்றை யாரோ மர்ம ஆசாமிகள் திருடிக் கொண்டு சென்று விட்டனர். செல்லும் போது அந்த அறையில் இருந்த பூட்டை உடைத்ததற்கு பதிலாக மாற்று பூட்டு போட்டுவிட்டுச் சென்றுவிட்ட நூதன சம்பவம் அரங்கேறியுள்ளது. அத்துடன் பள்ளியில் இருந்த சிசிடிவி கேமராக்களின் ஹார்ட் டிஸ்கையும் அவர்கள் கைப்பற்றிச் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் காட்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து பள்ளியில் திருடிச் சென்ற மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க காட்பாடி சித்தூர்- கடலூர் தேசிய நெடுஞ்சாலை ஓரம் தள்ளு வண்டிகளில் கடை வைத்துள்ளவர்களை அழைத்து இனிமேல் யாரும் இங்கு கடை நடத்த கூடாது என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர் காட்பாடி காவல் நிலைய உதவி ஆய்வாளர் மணிகண்டன், நிலைய எழுத்தர் வினோத். இதுநாள் வரை உழைத்து பிழைப்பு நடத்தி வந்த தள்ளுவண்டிக்காரர்களை விரட்டி அடித்துள்ளனர் போலீசார். இங்கு கடைகளை வைத்துள்ளவர்கள் 40 ஆண்டுகள், 30 ஆண்டுகள், 20 ஆண்டுகள் என இதை நம்பியே வாழ்ந்து வருகின்றனர். பள்ளியில் நடந்த திருட்டுக்கும் தள்ளு வண்டிகளில் வியாபாரம் செய்வோருக்கும் எவ்விதமான தொடர்பும் இல்லை என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இது மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுவது போல் உள்ளது. கடைகளை அடைக்குமாறு போலீசார் வியாபாரிகளை தொந்தரவு செய்யக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் பள்ளியில் நடந்த திருட்டுக்கும் இவர்களுக்கும் என்ன தொடர்பு என்பது சிதம்பர ரகசியமாக உள்ளது. தள்ளுவண்டிக்காரர்களை அப்புறப்படுத்திய காவல் துறை கடைகளை காலி செய்யுமா?. தள்ளுவண்டிக்காரர்களை காவல் துறை ஏளனமாக பார்க்கிறதா என்ற கேள்வி எழுகிறது அனைவரது உள்ளங்களிலும் என்று சொன்னால் அது மிகையாகாது. பாவம் ஒரு இடம் பழி ஒரு இடம் என்ற ரீதியில் இந்த திருட்டு வழக்கு சென்று கொண்டுள்ளது. உழைத்து பிழைப்பு நடத்தி வருகிறவர்களை தொந்தரவு செய்கிறபடியினால் குற்றம் பெருகவே வாய்ப்பு அதிகம் உள்ளது என்கின்றனர் சமூக ஆர்வலர்கள். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவராமன் இந்த பிரச்சனையை உரிய முறையில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தங்களின் வாழ்வாதார த்தை காக்க காவல் துறை ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் வியாபாரிகள் ஒட்டுமொத்தமாக கோரிக்கை விடுத்துள்ளனர். இனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவராமன் என்ன நடவடிக்கை எடுக்கிறார் என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

கன்னியாகுமரி மாவட்டம் முளகுமூட்டில் மாணவ- மாணவி களுக்கான பிளாக் பெல்ட் நிகழ்வானது நடைபெற்றது.வேலூர், மே 31-கன்னியாகுமரி மாவட்டம், முளகுமூட்டில் Shaolin kungfu wusu leo lee karate school of shotokan federation நடத்திய கருப்பு பட்டை வழங்கும் விழாவானது சனிக்கிழமை காலை 10 மணி அளவில் நிகழ்ச்சியானது நடை பெற்றது. இந்த நிகழ்வில் மாணவ, மாணவிகளின் பல்வேறு வகையான படைப்பாற்றலை வெளிப்படுத்தினர். கராத்தே, சிலம்பம், நிஞ்ஜா கட்டா டபுள் ஸ்டிக் டிரிபிள் ஸ்டிக், ஒற்றை கம்பு, வாள் யோகா என பல்வேறு பிரிவுகளின் அடிப்படையில் மாணவ மாணவிகள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில் இன்றைய தலைமுறையினர் கண்டிப்பாக தங்களை தற்காத்துக் கொள்ள கராத்தே மிகவும் அவசியம் என்றும் தினமும் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள சத்தாண உணவுகளை உட்கொண்டு தினமும் பயிற்சி மேற்கொள்ள வேண்டும். பயிற்சி ஒன்று தான் சிறப்பான மாணவ மாணவியரை ஊக்குவிக்கும் உந்து சக்தியாக அமையும் என்றும் அவர் குறிப்பிட்டார். தற்காப்பு கலையின் அவசியத்தையும் அவர் எடுத்துரைத்தார்.இந்த கராத்தே நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர்கள் x dan black Belt sijo. Master. L.fransis, master. Selvasingh5th dan black Belt chief insector and controller, master. Sensivinothraj, 3th dan black Belt master. Selva jayakumar. 2nd dan black Belt master. Sensi rajesh ஆவர்.சிறப்பு விருந்தினராக father. Gilbert lingson, மற்றும் dr. Karthick மரியம் மருத்துவமனை டீன், வர்த்தக அணி தலைவர் சிவகுமார், ex. Army 5th dan black Belt ajikumar , John bright tiruvalur sount indian secretary, ex. Chairman lenin மற்றும் மாணவ மாணவியரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். மேலும் முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ் மாணவ மாணவியருக்கு black Belt certificate மற்றும் கோப்பை வழங்கி கௌரவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

காட்பாடி கெங்கையம்மன் கோயில் திருவிழாவில் டிஜே இசை நிகழ்ச்சிக்கு காவல்துறை தடை விதிப்பு: ஆத்திரமடைந்த இளைஞர்கள் திடீர் சாலை மறியல்!வேலூர், மே 31-வேலூர் மாவட்டம், காட்பாடி தாராபடவேடு கெங்கையம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு டிஜே இசை நிகழ்ச்சிக்கு காவல் துறை அனுமதி தராததால் ஊர் பொதுமக்கள் அனைவரும் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காட்பாடி போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட இளைஞர்களை அடித்து விரட்டினர். இதையடுத்து தடைபட்ட போக்குவரத்தை சரி செய்வதற்கு சுமார் 2 மணி நேரத்திற்கு மேல் ஆனது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக சித்தூர் -கடலூர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் திணறியவாறு வாகனங்களை இயக்க வேண்டி இருந்தது குறிப்பிடத்தக்கது. இது போன்ற கோவில் நிகழ்ச்சிகள் என்ற பெயரில் கூம்பு வடிவ ஒலி பெருக்கிகளை வைத்து பாடல்களை அதிக சத்தத்துடன் ஒளிபரப்புவதால் நோயாளிகள், வயதானவர்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதும் குறிப்பிடத்தக்கது .இதனையும் காவல்துறை கண்டித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் தரப்பில் கோரிக்கையாக விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதை காட்பாடி காவல் நிலையத்தில் உள்ள போலீசார் செய்கிறார்களோ இல்லையோ, வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவராமன் இதற்காக தனி உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டுள்ளனர். மாவட்ட காவல்துறை நடவடிக்கை எடுக்குமா? இல்லை கண்டும் காணாமல் விட்டு விடுமா? என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

50 ஆண்டுகளாக திறக்கப்படாமல் இருந்த காட்பாடி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் திறப்பு விழா!வேலூர், மே 31-கடந்த தேர்தலில் காட்பாடி சட்டமன்ற உறுப்பினராக தவெக கட்சியின் வேட்பாளர் டாக்டர் சுதாகர் வெற்றி பெற்றார். இந்நிலையில் காட்பாடி சட்டமன்ற அலுவலகம் புனரமைக்கப்பட்டது. கடந்த 50 ஆண்டுகளாக சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் பூட்டிய நிலையில் பயன் பாடின்றி கிடந்தது. இந்த அலுவலகத்தை சீரமைப்பு செய்து கூட்டுறவுத் துறை அமைச்சர் காந்திராஜ் தலைமை வகித்து திறந்து வைத்தார். இந்த திறப்பு விழாவில் எம் எல் ஏக்கள் காட்பாடி டாக்டர் சுதாகர், வேலூர் ராஜேஷ் கண்ணன், குடியாத்தம் சிந்து, கே. வி. குப்பம் தென்றல் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேலூர் மாவட்ட செயலாளர்கள் மேற்கு வேல்முருகன், கிழக்கு நவீன் கலந்து கொண்டு சிறப்பித்தனர். அமைச்சர் காந்திராஜ் ரிப்பன் வெட்டியும், குத்துவிளக்கேற்றியும் திறந்து வைத்தார். இவ்விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு இனிப்பு மற்றும் தேநீர் விருந்து அளித்து உபசரிக்கப்பட்டது.

வேலூரில் விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டத்தை புறக்கணித்து தரையில் புரண்டு ஆர்ப்பாட்டம்!வேலூர் மே 31-தவெக சார்பில் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்தபடி விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்ய வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டத்தை தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் புறக்கணிப்பு செய்து தரையில் உருண்டு புரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். இதனால் அங்கு திடீர் பரபரப்பு நிலவியது. இந்நிலையில் அங்கு இருந்த சில விவசாயிகள் தரையில் உருண்டு புரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அந்த விவசாயிகளை சக விவசாயிகளே தூக்கி எழுப்பி தண்ணீர் கொடுத்தனர். இதையடுத்து அந்த பகுதியில் திடீர் பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்தப் போராட்டம் நடந்த போது விவசாயிகளை மாவட்ட நிர்வாகமும், மற்ற அரசு அலுவலர்களும் யாரும் ஒரு பெரிய பொருட்டாகவே கருதவில்லை என்பது வேதனைக்குரிய விஷயமாகும். குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் போராட்டம் நடத்திய விவசாயிகளை யாரும் மனிதர்களாகவே மதிக்கவில்லை என்பது வெட்கப்பட வேண்டிய வேதனைக்குரியதாக மாறி உள்ளது குறிப்பிடத்தக்கது.