மேட்டுப்பாளையம் ரயில் நிலையம் மற்றும் ரயில்களில் பெண் பயணிகளுக்கு ரயில்வே காவல்துறையினரும் சிங்கப்பெண் காவலர்களும் இணைந்து விழிப்புணர்வு

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் ரயில் நிலையம் மற்றும் அங்கு இயக்கப்படும் ரயில்களில், ரயில்வே காவல்துறையினரும் சிங்கப்பெண் காவலர்களும் இணைந்து பெண் பயணிகளுக்கான பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர்.
கோவை வட்ட ரயில்வே காவல் ஆய்வாளர் பிரியா சாய் ஸ்ரீ தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், சிங்கப்பெண் காவலர் உதவி ஆய்வாளர் பேபி, காவலர்கள் பவித்ரா, அனிதா உள்ளிட்டோர் கலந்து கொண்டு பெண் பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
அப்போது, பெண்கள் தன்னம்பிக்கையுடனும் அச்சமின்றியும் ரயில்களில் பயணம் மேற்கொள்ள வேண்டும் என்றும், பயணத்தின் போது ஏதேனும் அவசர நிலை ஏற்பட்டால் ரயில்வே காவல்துறையினருடன் இணைந்து சிங்கப்பெண் காவலர்களும் உடனடி உதவி வழங்க எப்போதும் தயாராக இருப்பதாக தெரிவித்தனர்.
மேலும், பயணத்தின் போது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியவை, அந்நியர்களிடம் தேவையற்ற தகவல்களை பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது, சந்தேகத்திற்கிடமான நபர்கள் அல்லது சம்பவங்கள் குறித்து உடனடியாக ரயில்வே காவல்துறையினருக்கு தகவல் தெரிவிப்பது, அவசர உதவி எண்களை பயன்படுத்துவது உள்ளிட்ட பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.
அத்துடன், பெண்கள் தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ளும் வழிமுறைகள், தற்காப்பு விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பான பயண நடைமுறைகள் குறித்தும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி ரயில் நிலைய வளாகத்திலும், ரயில்களிலும் நடைபெற்றது. இதில் ஏராளமான ரயில்வே பயணிகள், குறிப்பாக பெண் பயணிகள் ஆர்வமுடன் பங்கேற்று பாதுகாப்பான பயணம் தொடர்பான ஆலோசனைகளை பெற்றுக்கொண்டனர்.