வேப்பங்கநேரி பொன்னியம்மன் கோயில் அருகே பொலேரோ லோடு வேன் கவிழ்ந்து விபத்து!

இருசக்கர வாகன ஓட்டியைக் காப்பாற்ற முயன்றபோது விபத்து – ஓட்டுநர், உதவியாளர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர்!
வேலூர், அக்.24-
வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம் தாலுகா, வேப்பங்கநேரி ஊராட்சி, பொன்னியம்மன் கோயில் அருகே காட்பாடி – குடியாத்தம் சாலையில், சன் பீம் பள்ளிக் குழுமத்திற்குச் சொந்தமான TN 22 BL 0628 என்ற பதிவு வாகன எண் கொண்ட பொலேரோ லோடு வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. காட்பாடியில் இருந்து குடியாத்தம் நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, எதிரே இருசக்கர வாகனத்தில் தாறுமாறாக வந்த நபரைக் காப்பாற்ற முயன்றதில் வேன் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த விபத்தில் வேன் ஓட்டுநர் மற்றும் உதவியாளர் சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். விபத்தைப் பார்த்த அப்பகுதி பொதுமக்கள், ஓட்டுநர் மற்றும் உதவியாளரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க முன்வந்தபோது, அவர்கள் மருத்துவமனைக்குச் செல்ல மறுத்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. இது குறித்து தகவலறிந்த சன் பீம் பள்ளிக் குழுமத்தினர் உடனடியாக விபத்து நடந்த இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டு, காயமடைந்தவர்களுக்கு முதலுதவி அளித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து தகவலறிந்த கே.வி.குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.