கூட்டுறவு வங்கியில் போலி நகைகளை மாற்றி ஒரிஜினலை அபேஸ் செய்து 3.50 கோடி ரூபாய் கபளீகரம்… 2 ஊழியர்கள் சஸ்பெண்ட்

கூட்டுறவு வங்கி என்பது, பொதுமக்களுக்கு ஒரு அவசர பணத்தேவை என்றால், அதை உடனே பூர்த்தி செய்யும் மிக முக்கிய வாழ்வாதார மையமாக திகழ்ந்து கொண்டிருக்கிறது.. தங்களின் அவசரக் கால நிதி நெருக்கடிகளை சமாளிக்க உதவும், நம்பகமான இடமாகவும் விளங்குவது, இந்த கூட்டுறவு வங்கிகள்தான்.. அப்படிப்பட்ட ஒரு பொதுத்துறை நிறுவனத்தில் ஒரு அதிர்ச்சி சம்பவம் வேலூரில் நடந்துள்ளது.

ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களின் அவசர தேவைகளைப் பூர்த்தி செய்வதில் கூட்டுறவு சங்கங்கள் முக்கியமான பங்கை வகிக்கின்றன. வணிக வங்கிகளுடன் ஒப்பிடும்போது, கூட்டுறவு சங்கங்களில் நகைக் கடன்களுக்கான வட்டி விகிதம் மிகவும் குறைவாகவும், வசதியாகவும் இருப்பதுதான் இதன் ஸ்பெஷாலிட்டியாகும்.

இங்கு நகைகளின் தரம் மற்றும் எடைக்கு ஏற்ப நியாயமான கடன் தொகை உடனடியாக வழங்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் விவசாயம் மற்றும் அதனைச் சார்ந்த தொழில்களில் ஈடுபடுபவர்களுக்கு சிறப்புச் சலுகைகளுடன் கூடிய மிகக் குறைந்த வட்டி அல்லது வட்டி இல்லா நகைக்கடன்களும் சில காலகட்டங்களில் கூட்டுறவு வங்கிகள் மூலம் அரசு வழிகாட்டுதலின்படி வழங்கப்படுவது பொதுமக்களுக்கு உண்மையிலேயே ஒரு வரப்பிரசாதம் என்று சொல்லலாம்.

இந்த சங்கங்களில் கடன் பெறுவதற்கான நடைமுறைகள் மிகவும் எளிமையாக உள்ளன.. வெளிப்படையாகவும் உள்ளன.. தனியார் நிதி நிறுவனங்களைப் போல மறைமுக கட்டணங்கள் எதுவுமே இங்கு வசூலிக்கப்படுவதில்லை. நகைகளைத் திருப்புவதற்கான கால அவகாசமும் ஒரு வருடத்துக்கு வழங்கப்படுகிறது.

அத்துடன், அசலையும் வட்டியையும் சேர்த்து ஒரே தவணையாகவோ அல்லது தங்களால் இயன்ற சிறு தொகைகளாக பிரித்தோ செலுத்தும் வசதிகளும் இதில் உள்ளன. அனைத்துக்கும் மேலாக, அரசு கட்டுப்பாட்டில் இயங்கும் இந்த சங்கங்களில் பொதுமக்கள் அடகு வைக்கும் தங்க நகைகளுக்கு முழுமையான பாதுகாப்பு மற்றும் காப்பீடு உத்தரவாதம் அளிக்கப்படுவதால், மக்கள் எந்தவிதமான பயமும் இல்லாமல் தங்கள் நகைகளை ஒப்படைத்து அவசர காலத்துக்கு நிதி உதவியையும் பெற்றுக் கொள்ள முடிகிறது.

இப்படிப்பட்ட சூழலில் தான், வேலூர் மாவட்டத்தில் ஒட்டுமொத்த கூட்டுறவுத் துறையை ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

வேலூர் மாவட்டம், காட்பாடி காந்தி நகரில் 1947-ம் ஆண்டு கூட்டுறவு நகரமைப்புச் சங்கம் (டவுன்ஷிப்) தொடங்கப்பட்டது. இந்தச் சங்கம், வீட்டு வசதிக்கான உள்கட்டமைப்புகளை உருவாக்கி மனைகளை விற்பனை செய்வதோடு, அடமானக் கடன், நகைக் கடன், நிலையான முதலீடு, கடை வாடகைக்கு விடுதல் போன்ற சேவைகளையும் வழங்குகிறது. இந்த நிலையில், ‘வளர்ச்சிப் பாதையில் சென்றிருக்கவேண்டிய இந்தச் சங்கத்தை, ஊழல் பெருச்சாளிகள் கடித்துக் குதறிக்கொண்டிருப்பதாக’ குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன.

வேலூர் மாவட்டம், காட்பாடி காந்திநகரில் உள்ள வேலூர் மண்டல அலுவலகத்தில், சில நாட்களுக்கு முன்பு திடீரென உள் தணிக்கை நடத்தப்பட்டுள்ளது. அங்குள்ள அதிகாரிகள் ஒவ்வொரு கணக்குகளையும், லாக்கரில் இருந்த நகைகளையும் சோதித்து பார்த்து கொண்டிருந்தனர்.. அப்போது வங்கியில் அடமானம் வைக்கப்பட்ட நகைகளில் பல நகைகள் முற்றிலும் போலியானவை என்பது தணிக்கையின்போது தெரியவந்தது.

இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அதிகாரிகள், உடனடியாக விசாரணையில் இறங்கினார்கள்.. அப்போது சுமார் 3.50 கோடி ரூபாய் மதிப்பிலான போலி நகைகளை லாக்கரில் வைத்து, கூட்டுறவு வங்கியில் மிகப்பெரிய அளவில் மோசடி நடந்து இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த விவகாரம் குறித்து கூட்டுறவுத் துறை உயர் அதிகாரிகள் நடத்திய முதற்கட்ட விசாரணையில், அந்த வங்கியில் பணியாற்றி வந்த 2 அலுவலர்கள் தான் இந்த விவகாரத்தின் பின்னணியில் இருந்தது தெரியவந்தது. அவர்கள் கடந்த 6 மாதங்களாக யாருக்கும் சந்தேகம் வராதபடி, கொஞ்சம் கொஞ்சமாக போலி நகைகளை வங்கியின் லாக்கருக்குள் புகுத்தி, ஒரிஜினல் நகைகளை கபளீகரம்
செய்துள்ளதையும் அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

இதனைத் தொடர்ந்து, மோசடியில் தொடர்புடைய அந்த 2 அலுவலர்களையும் அதிகாரிகள் உடனடியாக சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளனர். அதேசமயம், வங்கி பணிகள் எதுவும் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக, அவர்களுக்குப் பதிலாக, வெளி மாவட்டங்களில் பணியாற்றிய 2 புதிய அலுவலர்கள் உடனடியாக அந்த பணியில் நியமிக்கப்பட்டனர்.

இந்த மோசடி சம்பவம் கூட்டுறவு வங்கியில் பணியாற்றும் ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமில்லாமல், இதேபோல வேறு சில கூட்டுறவு வங்கிகளிலும் ஏதாலது மோசடி நடைபெற்று உள்ளதா என்ற கோணத்தில் அதிகாரிகள் தற்போது தீவிரமாக ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

ஏழைகளின் நம்பிக்கையாக இருக்கும் கூட்டுறவு வங்கியில், ஊழியர்களே போலி நகைகளை வைத்து மோசடி செய்துள்ள விவகாரம் வேலூர் சுற்றுவட்டாரப் பகுதியில் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.