செய்யாறு, ஏப். 21 –
செய்யாறு சட்டமன்ற தொகுதியின் அ.தி.மு.க., வேட்பாளர் முக்கூர் சுப்பிரமணியத்துக்கு, 10வது வார்டு கவுன்சிலர் நித்யா பிரகாஷ் தலைமையில் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.
செய்யாறு சட்டசபை தொகுதியில் அ.தி.மு.க., – தி.மு.க., – த.வெ.க., என, மும்முனைப் போட்டிகளாக நிலவி வருகிறது. நாளை மறுநாள் ( 23ம் தேதி ) ஓட்டுப்பதிவு என்பதால் மேற்கண்ட கட்சிகளின் வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அ.தி.மு.க., வேட்பாளர் முக்கூர் சுப்பிரமணியன் 10வது வார்டில் நகர செயலாளர் வெங்கடேசன், கூட்டணி கட்சியான பா.ஜ.க.,வின் மாவட்ட செயலாளர் கே.வி.ஆர்., ( எ ) கே.வெங்கட்ராமன், வழக்கறிஞர் முனுசாமி உள்ளிட்ட பொறுப்பாளர்களுடன் திறந்த வெளி ஜீப்பில் நேற்று ஓட்டு சேகரிக்க வருகை தந்தார். இவருக்கு வார்டின் நுழைவு வாயிலான ஓட்டுநர் அணியின் பொறுப்பாளர் முகுந்தன்,10வது வார்டு கவுன்சிலர் நித்யா பிரகாஷ் மற்றும் வார்டு மக்கள், மகளிர் குழுக்களைச் சேர்ந்தவர்கள் ஒன்றிணைந்து பட்டாசு வெடித்து, மலர் தூவி, ஆளுயர மாலை அணிவித்தும், ஆரத்தி எடுத்தும் உற்சாகமாக வரவேற்றனர்.
இதையடுத்து வேட்பாளர் முக்கூர் சுப்பிரமணியன் திறந்தவெளி ஜீப்பிலும் – நடந்து சென்றும் வாக்காளர்களிடம் ஓட்டுக்களை சேகரித்தார். அ.தி.மு.க.,வில் முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவரும் – மாவட்ட இணைச் செயலாளருமான விமலா மகேந்திரனின் வீடும் 10வது வார்டில் உள்ளதால், வேட்பாளர் முக்கூர் சுப்பிரமணியன், பொறுப்பாளர்களுடன் விமலா மகேந்திரன் வீட்டிற்கு சென்று சிறிது நேரம் வார்டு மக்களின் நிலவரம் குறித்து கேட்டறிந்தார். இந்த வார்டில் 60 சதவீதம் வாக்காளர்களின் ஓட்டுக்களை நான் பெற்று தருவேன் என, விமலா மகேந்திரன், வேட்பாளரிடம் நம்பிக்கையுடன் கூறினார்.
இதனால், மகிழ்ச்சி அடைந்த வேட்பாளர், வார்டின் வட்ட செயலாளர் பழக்கடை முருகன், செய்யாறு கிழக்கு ஒன்றிய செயலாளர் மகேந்திரன் உள்ளிட்ட பொறுப்பாளர்களிடம், ,இன்னும் இரண்டு நாட்கள் தூக்கத்தை மறந்து பணியாற்றினால் நாம் பெருவாரியான ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, செய்யாறு தொகுதியை கைப்பற்றி விடலாம் என, கூறிவிட்டு அடுத்த வார்டுக்கு ஓட்டு சேகரிக்க சென்றார்.















Leave a Reply