ரூ.1.60 கோடி பொது நிதி மாயமானதாகப் புகார் – ஊழல் முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்தக் கோரிக்கை!
வேலூர், அக்.25-
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுகா, பள்ளிகொண்டா பேரூராட்சியில் ரூ.1 கோடியே 60 லட்சம் பொது நிதி காணாமல் போனதாகக் கூறப்படும் புகார் மற்றும் 15-வது நிதிக்குழு மானியம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களில் நடைபெற்றுள்ளதாகக் கூறப்படும் நிதி முறைகேடுகளைக் கண்டித்து, பள்ளிகொண்டா பேருந்து நிலையம் அருகே காங்கிரஸ் கட்சியினர் 100-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பள்ளிகொண்டா நகர காங்கிரஸ் கமிட்டித் தலைவர் சிக்கந்தர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், வேலூர் மத்திய மாவட்ட காங்கிரஸ் தலைவர் சுரேஷ்குமார் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டார். கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்று, பேரூராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து கண்டனக் கோஷங்களை எழுப்பினர்.
18 வார்டுகளைக் கொண்ட பள்ளிகொண்டா பேரூராட்சியில் ரூ.1.60 கோடி பொது நிதி தொடர்பாக முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும், இதுகுறித்து 18 வார்டு உறுப்பினர்களும் மன்றக் கூட்டங்களில் தொடர்ந்து வலியுறுத்தி வந்ததாகவும் ஆர்ப்பாட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
மேலும், பேரூராட்சிகள் இணை இயக்குநர் அலுவலகத்தினர் நடத்திய ஆய்வில், ரூ.1.60 கோடி நிதி தொடர்பான புகார் மட்டுமின்றி, பல்வேறு திட்டங்களிலும் நிதி முறைகேடுகள் நடைபெற்றிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகக் காங்கிரஸ் கட்சியினர் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக பள்ளிகொண்டா நகர காங்கிரஸ் கமிட்டித் தலைவர் சிக்கந்தர், லஞ்ச ஒழிப்புத் துறையினரிடம் புகார் அளித்துள்ளார். காங்கிரஸ் கட்சியினரின் தொடர் வலியுறுத்தலின் காரணமாக, பேரூராட்சி செயல் அலுவலராகப் பணியாற்றி வந்த உமாராணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்த விவகாரத்தில் தொடர்புடைய அதிகாரிகள் மற்றும் அவர்களுக்கு உடந்தையாக இருந்ததாகக் கூறப்படும் அரசியல்வாதிகள் யார்? என்பதை முழுமையாகக் கண்டறிந்து, உரிய விசாரணை நடத்தி, தவறு செய்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷங்களை எழுப்பினர்.











Leave a Reply