வேலூர், அக்.28-
வேலூர் மாவட்டம், பனமடங்கி காவல் நிலையம் அருகில் உள்ளது காளாம்பட்டு கிராமம். இந்த நிலையில் எங்கிருந்தோ மருத்துவக் கழிவுகளை ஒரு டிராக்டரின் ட்ரெய்லரில் கொண்டு வந்து ஊருக்கு ஒதுக்குப்புறமான பகுதியில் (மருத்துவக் கழிவுகளை) கொட்டி அதை பள்ளம் தோண்டி புதைத்து விட்டு சென்றது ஒரு சமூக விரோத கும்பல். இதனை பார்த்து சில கிராம பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இந்நிலையில் பனமடங்கி போலீசார் விரைந்து வந்து அந்த டிராக்டர் ஓட்டுநரிடம் விசாரணை நடத்திவிட்டு ஒன்றும் நடவாதது போல அமைதியாக கலைந்து சென்று விட்டனர். இதை தொடர்ந்து அந்த காளாம்பட்டு கிராம பொதுமக்கள் காவல்துறையினரிடம் விசாரித்த போது ஒன்றுமில்லை என்று சொல்லிவிட்டு நைசாக நழுவிச் சென்று விட்டனர் காவல்துறையினர். கண்ணால் கண்டும் சம்பந்தப்பட்ட மருத்துவ கழிவுகளை கொட்டி புதைத்த சமூக விரோத நபர்களை பிடித்தும் விட்டு விட்டுச் சென்ற போலீசாரின் நடவடிக்கையை பார்த்தால் சிதம்பர ரகசியமாக உள்ளது. இடையில் நடந்தது என்ன? என்பது புரியாத புதிராகவே உள்ளது. கணிசமாக ஒரு தொகையை பெற்றுக் கொண்டு அவர்களை தப்ப விட்டு விட்டதாக பனமடங்கி போலீசார் மீது கிராம பொதுமக்கள் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை சுமத்துகின்றனர். இந்நிலையில் ஊராட்சி மன்ற தலைவராக இருந்த பானுப்பிரியாவும் கண்டும் காணாமல் அமைதியாக விட்டுவிட்டார். இதிலிருந்து திரை மறைவு வேளையில் என்ன நடந்தது என்பதை சொல்லித் தெரிய வேண்டிய அவசியம் இல்லை போலிருக்கிறது. கிராமம் எப்படி போனால் நமக்கு என்ன என்ற ரீதியில் காவல் துறையும், ஊராட்சி மன்ற தலைவியும் நடந்து கொண்ட விதம் கிராம பொதுமக்களுக்கு பல்வேறு சந்தேகங்களையும், கேள்விக்கணைகளையும் எழுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த விடை தெரியாத புதிருக்கு வேலூர் மாவட்ட காவல் துறையும், ஊராட்சி மன்ற தலைவி பானுப்பிரியாவும் பதில் சொல்லி ஆக வேண்டிய நிர்பந்தத்தில் தற்போது சிக்கிக் கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு கிராம நலன் கருதி செயல்படாமல் அதாவது பொதுநலம் கருதாமல் சுயநலத்துடன் செயல்படும் பனமடங்கி போலீசாரின் போக்கும், ஊராட்சி மன்ற தலைவியின் போக்கும் கண்டிக்கத்தக்கது என்று கிராம பொதுமக்கள் சொல்லி அங்கலாய்கின்றனர். இந்நிலையில் இந்த மருத்துவக் கழிவுகளை அகற்றுவதற்கு யார் தான் நடவடிக்கை எடுப்பார்கள் என்பது தெரியவில்லை. ஆக மொத்தத்தில் நிலத்தடி நீர் மாசுபடவும் இது வழிவகை செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன் கிராம பொதுமக்களுக்கு பல்வேறு நோய்கள் பரவவும் இது வாய்ப்பை ஏற்படுத்தும் என்பதிலும் எவ்வித ஐயமும் இல்லை என்று சில விவரம் அறிந்த சமூக ஆர்வலர்களும், கிராம பொதுமக்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்துள்ளனர். ஆக மொத்தத்தில் மாவட்ட நிர்வாகமும், மாவட்ட காவல்துறையும் இணைந்து இதுபோன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு தயவு தாட்சண்யம் காட்டாமல் அவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே கிராம பொது மக்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாக உள்ளது. மாவட்ட நிர்வாகமும், மாவட்ட காவல்துறையும் இது போன்ற விஷயங்களில் என்ன நடவடிக்கையை எடுக்க போகிறார்கள் என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.













Leave a Reply