தமிழ்நாடு ஒருங்கிணைந்த பத்திரிகையாளர்கள் சங்கத்தின் சிறப்பு மலரை மாண்புமிகு சபாநாயகர் வெளியிட்டார்!

வேலூர், அக். 10-
‘தமிழ்நாடு ஒருங்கிணைந்த பத்திரிகையாளர்கள் சங்கத்தின்’ 4-ஆம் ஆண்டுத் தொடக்க விழாவையொட்டி மாநிலம் தழுவிய அளவில் சிறப்பு மலர் தயாரிக்கப்பட்டது.
இளம் பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கும் பயன்படத்தக்க வகையில் உருவாக்கப்பட்ட அந்த மலரின் முதல் பிரதியை, மாண்புமிகு சபாநாயகர் ஜே.சி. டி. பிரபாகரன் தலைமைச் செயலக வளாகத்தில் உள்ள தனது அறையில் வெளியிட்டார் .
முதல் பிரதியை சங்கத்தின் நிறுவனர் ஜி.கே. ஸ்டாலின், மற்றும் சங்கத்தின் மாநிலத் தலைவர் சந்திரசேகரன், மாநிலப் பொதுச் செயலாளர் ப.வீரராகவன், மாநிலப்பொருளாளர் இந்திரகுமார் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். அப்போது சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவர் , கருணாநிதி, மாநிலத் துணைச் செயலாளர் சிதம்பரம், சென்னை நிர்வாகிகள் பாலச்சந்தர், மணிகண்டன் ஆகியோர் உடன் இருந்தனர்.
இதனைத் தொடர்ந்து மக்கள் தொடர்பு மற்றும் தமிழ் வளர்ச்சித் துறையின் கூடுதல் இயக்குனர் இரா. பாஸ்கரன் அவர்களை அவரது அலுவலகத்தில் நேரில் சந்தித்து பத்திரிகையாளர்களின் நீண்டநாள் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
அந்த மனுவில்,
‘ மாநிலம் தழுவிய அளவில், மாவட்ட / தாலுகாக்களில் பணிபுரியும் பத்திரிகையாளர்களுக்கு வீட்டுமனை, இலவசப் பேருந்துப் பயண அட்டை, பத்திரிகையாளர் நல வாரியத்தில் சங்கத்தின் பிரதிநிதி ஒருவரை நலவாரிய உறுப்பினராக சேர்த்தல்’ உள்ளிட்ட 7 அம்சக் கோரிக்கைகள் வேண்டுகோளாக விடுக்கப்பட்டன.
மனுவைப் படித்துப் பார்த்த கூடுதல் இயக்குனர் உரிய நடவடிக்கை எடுப்பதாக பதிலளித்தார் .
மாநில பொதுச் செயலாளர்
ப.வீரராகவன் ஏற்பாடுகளை செய்திருந்தார்.