செய்யாறில் வி. தி .லீடர்ஸ் கட்சி சார்பில் தனியார் பள்ளிக்குமரக்கன்றுகள் வழங்கும் விழா!செய்யாறு, ஆக. 9 -செய்யாறில் வி. தி. லீடர்ஸ் கட்சி சார்பில் தனியார் பள்ளிக்கு மரக்கன்றுகளை பொறுப்பாளர்கள் வழங்கி மகிழ்ந்தனர்.பாரதிய ஜனதா கட்சியிலிருந்து விலகிய அண்ணாமலை கடந்த ஜூன் மாதம் வி. தி. லீடர்ஸ் என்ற புதிய கட்சியை தொடங்கினார். அப்பொழுது ஒரு சில வாரங்களிலே 20 லட்சத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள், இளம் பெண்கள், பல்வேறு கட்சியைச் சேர்ந்த பொறுப்பாளர்கள், நிர்வாகிகள் என அண்ணாமலையின் புதிய கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர். இந்த தகவல் மற்ற கட்சிகளைச் சேர்ந்தவர்கள் திரும்பிப் பார்க்கும் வகையில் இருந்தது குறிப்பிடத்தக்கது.தமிழகத்தில் ‘போதை – கஞ்சா’ ஆகியவற்றை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என, அண்ணாமலை தனது கட்சி தொண்டர்களுடன் உறுதிமொழியும் எடுத்துக் கொண்டார்கடந்த மாதம் பொள்ளாச்சியில் நடந்த கட்சி மாநாட்டிலும் இது குறித்து விவரமாக அண்ணாமலை பேசினார். ஆகஸ்ட் மாதம் முழுவதும் கட்சியில் இணைந்தவர்கள் அனைவரும் தங்களது மாவட்டங்களில் மரக்கன்றுகளை நடவு செய்து சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டும் என்ற கருத்தையும் அண்ணாமலை பதிவு செய்தார். இதை ஏற்றுக் கொண்ட வி. தி. லீடர்ஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் கடந்த 1ம் தேதி முதல் அந்தந்த மாவட்டங்களில் மரக்கன்றுகளை பொதுமக்களுக்கு வழங்கி வருகின்றனர்.இதேபோல் பொது இடங்களிலும் மரக்கன்றுகளை நடவு செய்யும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர். அந்த வரிசையில் செய்யாறைச் சேர்ந்த ஆ.சரவணன், முனைவர் சக்தி நாராயணன், ஜெயராஜ் ஆகியோர் இணைந்து செய்யாறு தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு அருகே உள்ள விஸ்டம் வித்யாசாகர் என்ற தனியார் சி.பி.எஸ்.சி., பள்ளிக்கு புங்கன், மா, நாவல், பூவரசன் உள்ளிட்ட பத்து வகையான 100 மரக்கன்றுகளை நேற்று வழங்கி மகிழ்ந்தனர்.இந்த மரக்கன்றுகளை பள்ளியின் முதல்வர் அருள் பெற்றுக்கொண்டு, பள்ளி வளாகத்தில் நடவு செய்தார். அத்துடன் இந்த மரக்கன்றுகளை தினமும் தண்ணீர் ஊற்றி வளர்த்தெடுத்து மரமாக்குவோம் என, முதல்வர் அருள், வி. தி .லீடர்ஸ் கட்சியைச் சேர்ந்தவர்களுக்கு உறுதி அளித்தார். இந்நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் என, பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.