பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வைக் கண்டித்து தொழிலாளர் விரோத போக்கை கண்டித்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

உதகை,
ஒன்றிய அரசு பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலைகளை தொடர்ந்து உயர்த்தி வருவதைக் கண்டித்தும், 44 தொழிலாளர் நலச் சட்டங்களை நான்கு தொழிலாளர் சட்டத் தொகுப்புகளாக (Labour Codes) சுருக்கியதை திரும்பப் பெற வலியுறுத்தியும், விவசாய விளைபொருட்களுக்கு சட்டப்பூர்வமான குறைந்தபட்ச ஆதார விலையை உறுதி செய்யக் கோரியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

அதன் ஒரு பகுதியாக நீலகிரி மாவட்டம் உதகை ஏடிசி திடல் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உதகை தாலுகா செயலாளர் தோழர் ஏ. நவீன்சந்திரன் தலைமை தாங்கினார்.

ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் தோழர் ஆசரா மற்றும் தோழர் எல். சங்கரலிங்கம் ஆகியோர் கண்டன உரையாற்றினர். அவர்கள் தங்களது உரையில், ஒன்றிய அரசின் மக்கள் விரோத பொருளாதாரக் கொள்கைகள், தொழிலாளர் விரோத சட்டத் திருத்தங்கள் மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் நடவடிக்கைகளை கடுமையாக விமர்சித்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்டக் குழு உறுப்பினர் பி. கணேசன், தாலுகா குழு உறுப்பினர்கள் ராஜரத்தினம், புட்டுசாமி, தமிழ்மணி, ஹரிபாபு உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு ஒன்றிய அரசைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.

இறுதியாக தாலுகா குழு உறுப்பினர் ஓ. குமார் நன்றி கூறி ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்தார்.