
காணாமல் போன மாட்டை தேடிச் சென்ற முதியவரை சரமாரியாக தாக்கி கொலை செய்த பரிதாபம்: நாலு பேர் கொண்ட கும்பலுக்கு போலீஸ் வலை!வேலூர், மே 29-வேலூர் மாவட்டம், அலமேலுமங்காபுரம் அடுத்த பழைய வசூரைச் சேர்ந்தவர் ஜே. பாஸ்கரன் (49). இவர் மாடுகளை வளர்த்து வந்தார். இந்நிலையில் இவரது மாடு ஒன்று வழி தவறி காட்பாடி வட்டம், பிரம்மபுரம் அடுத்த சேவூர் அருகே சென்று விட்டது. இதை தேடிக்கொண்டு பாஸ்கரன் சென்றுள்ளார். அப்போது எதிரில் வந்த சேவூரைச் சேர்ந்த பட்டாபி என்பவரிடம் மாடு ஒன்று இந்த பக்கம் ஏதாவது வந்ததா? என்று பாஸ்கரன் கேட்டுள்ளார். மாடு பார்ப்பதா எனக்கு வேலை என்று பட்டாபி கூறியுள்ளார். இதையடுத்து பட்டாபிக்கும் பாஸ்கரனுக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஆனது. இதில் இரு தரப்பிலும் ஆபாசமான வார்த்தைகளால் திட்டி ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். இந்நிலையில் இந்த தாக்குதல் நடந்து கொண்டிருந்த வேளையில் பட்டாபியின் நண்பர்கள் ஆன மேலும் மூவர் அங்கு வந்து பட்டாபியுடன் சேர்ந்து கொண்டு பாஸ்கரனை கண்மூடித்தனமாகவும், கொடூரமாகவும் தாக்கியுள்ளனர். இதில் மயங்கி அதே இடத்தில் சரிந்த பாஸ்கரனை நான்கு பேரும் தூக்கிக்கொண்டு சென்று அருகில் இருந்த மாட்டுப்பட்டியில் வீசி விட்டுச் சென்று விட்டனர். இந்நிலையில் பட்டாபியின் தந்தை அந்த வழியாக வந்துள்ளார். அவர் மயங்கி கிடந்த பாஸ்கரனுக்கு தண்ணீர் கொடுத்துள்ளார். பின்னர் அவர் கொடுத்த தகவலின் பேரில் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக பாஸ்கரன் கொண்டு சேர்க்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கழுத்தில் இருந்த எலும்புகள் நொறுங்கியதால் இவர் உயிர் பிழைப்பது சிரமம் என்று தெரிவித்துள்ளனர். இந்நிலையில் காவல்துறையினரிடம் பாஸ்கரன் மரண வாக்குமூலம் அளித்துள்ளார். இதையடுத்து போலீசார் அடிதடி வழக்குப் பதிவு செய்து விசாரணையை நிறுத்தி வைத்திருந்தனர். இந்நிலையில் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டிருந்த பாஸ்கரன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார் .இந்நிலையில் இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றம் செய்து பாஸ்கரனை கொடூரமாக தாக்கி கொலை செய்த பட்டாபி உள்ளிட்ட சேவூரைச் சேர்ந்த 4 பேரை போலீசார் தீவிரமாக வலைவீசி தேடி வருகின்றனர்.










Leave a Reply