செங்கல் சூளை உரிமையாளர்களிடம் ரூ. 1 லட்சம் மாமூல் கேட்டு மிரட்டிய தவெக நிர்வாகி கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கம்!வேலூர் ,மே 27 -தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தமிழக வெற்றிக்கழகம் தலைமையிலான ஆட்சி அமைந்துள்ளது. தற்போது தமிழ்நாடு முதலமைச்சராக ஜோசப் விஜய் பொறுப்பேற்றுள்ளார். இந்நிலையில் அமைச்சர்கள் தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் அரசு மருத்துவமனைகள், கல்குவாரிகள், அம்மா உணவகங்கள் உள்ளிட்ட இடங்களில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் கட்சி நிர்வாகிகள் ஆய்வு நடத்த அனுமதிக்கப்படுவதில்லை. இந்நிலையில் வேலூர் மாவட்டம், கணியம்பாடி தவெக கிழக்கு ஒன்றிய செயலாளர் விஜயகுமார் தலைமையிலான நிர்வாகிகள் லோகேஷ், ஈஸ்வரன் உள்ளிட்டோர் செங்கல் சூளை உரிமையாளர்களை மிரட்டி மாதந்தோறும் ரூ.1 லட்சம் மாமூல் கேட்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக கடந்த 22ஆம் தேதி செங்கல் சூளை பகுதிக்குச் சென்றி ருந்த தவெக ஒன்றிய செயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கும் செங்கல் சூளை உரிமையாளர்கள் மற்றும் அவர்களது ஆதரவாளர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதமும் கைகலப்பும் ஏற்பட்டுள்ளது. அன்றைய தினமே தவெக நிர்வாகிகள் மீது செங்கல் சூளை உரிமையாளர்கள் வேலூர் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். பதிலுக்கு தவெகவினர் இந்த பகுதிகளில் தொடர்ந்து கனிம வள கொள்ளை நடைபெறுகிறது. இதனை தடுக்கவே நாங்கள் சென்றோம். மாமூல் எதுவும் கேட்கவில்லை என புகார் அளித்தனர். இந்த சம்பவம் திடீர் சர்ச்சையை ஏற்படுத்தியது. செங்கல் சூளை உரிமையாளர்களிடம் ரூ.1 லட்சம் மாமூல் கேட்டும், மிரட்டல் விடுத்த விவகாரம் தொடர்பாக கணியம்பாடி தாலுகா கிழக்கு ஒன்றிய செயலாளர் விஜயகுமார் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அதிரடியாக நீக்கி தவெக தலைமை நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பாக தவெக தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அரசு விவகாரங்களில் தவெகவினர் தலையிடுதல் கூடாது. தங்களின் எல்லை என்ன என்பதை அறிந்து தவெகவினர் செயல்பட வேண்டும். மக்கள் பிரதிநிதிகள் அல்லாதோர் அரசு சார்ந்த விவகாரங்களில் தலையிடுதலோ, ஆய்வுகள் மேற்கொள்ளவோ கூடாது .பொது மக்களுக்கும், அரசு அதிகாரிகளுக்கும் எவ்வித இடையூறும் இன்றி கண்ணியத்துடன் செயல்பட வேண்டும் .கட்சியின் பெயரையோ அல்லது கட்சி பதவிகளையோ பயன்படுத்தி எவரும் தன்னிச்சையான அதிகார மையங்களாக செயல்படக்கூடாது. குறிப்பாக அரசு அலுவலகங்கள், காவல் நிலையங்கள் மற்றும் பொது இடங்களுக்கு செல்லும்போது கட்சியின் மாண்பை குறைக்கும் வகையில் எவ்வித செயல்பாடுகளிலும் ஈடுபடக்கூடாது என கட்சி தலைமை வலியுறுத்தியுள்ளது. இதற்கிடையே செங்கல் சூளை உரிமையாளர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள், செங்கல் சூளையில் பணிபுரிபவர்கள், பொதுமக்கள் என சுமார் 500க்கும் மேற்பட்டோர் கணியம்பாடி பேருந்து நிறுத்தம் அருகே கடந்த 2 5 ஆம் தேதி திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் குவிக்கப்பட்டனர். அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தியும் அவர்கள் கலைந்து செல்ல மறுத்தனர். இதையடுத்து வேலூர் கோட்டாட்சியர் செந்தில்குமார் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதை தொடர்ந்து அவர்கள் அனைவரும் கலந்து சென்றனர் .இந்நிலையில் தவெக நிர்வாகி விஜயகுமார் மீது தவெக தலைமை அதிரடி நடவடிக்கை எடுத்து அவரை கட்சியில் இருந்து நீக்கி உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.