‘தமிழிலக்கியங்களில் கதைமாந்தர்கள்’ பன்னாட்டு ஆய்வுக் கருத்தரங்கம்



வெகு சிறப்பாக நடந்தது
செய்யாறு, மே 19 –
செய்யாறு, அடுத்த வடமாவந்தல் ஏ.என்.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழிலக்கியத்துறை சார்பில் ‘தமிழிலக்கியங்களில் கதைமாந்தர்கள்’ எனும் தலைப்பில் ஒருநாள் பன்னாட்டு ஆய்வுக் கருத்தரங்கம் வெகு சிறப்பாக நடந்தது. நிகழ்ச்சியை ஸ்ரீ மீனாட்சி கல்விக் குழுமத்தின் தலைவர் கோ.இரா.கோகுல் தொடங்கி வைத்தார். கல்லூரி முதல்வர் முனைவர் வெ.இராமு வரவேற்புரை ஆற்றினார். நிகழ்ச்சியில் 62 பேராளர்கள் வெவ்வேறு ஆய்வுத் தலைப்புகளில் எழுதிய ஆய்வுக் கட்டுரைகள் அடங்கிய, 530 பக்க ஆய்வுக்கோவையை, கல்விக்குழுமத் தலைவர் கோ.இரா.கோகுல், இயக்குநர் நா.ரெங்கராஜன் மற்றும் கு.கண்ணன் ஆகியோர் வெளியிட்டனர். நூலின் முதல் பிரதியை சென்னை, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர் முனைவர் இரா.வெங்கடேசன் பெற்றுக்கொண்டு - பேசியதாவது; 'பழந்தமிழ் இலக்கியங்கள் தொடங்கி இன்றைய நவீன இலக்கியங்கள் வரை கதைமாந்தர்கள் முக்கிய இடம் வகிக்கின்றனர். சங்க அக இலக்கிய மாந்தர்களின் பெயர்கள் சுட்டப்படவில்லை என்றாலும், அதன் பின் வந்த அனைத்து இலக்கியங்களிலும் கதைமாந்தர்கள் வழியாகவே படைப்பாளிகள் சமூகத் தொடர்பையும் சமூக மாற்றத்தையும் ஏற்படுத்துகின்றனர். இன்று வெளியிடப்பட்டுள்ள இந்த ஆய்வு நூல், அத்தகைய கதைமாந்தர்களின் தவிர்க்க முடியாத இடத்தை பல்வேறு கோணங்களில் ஆராய்ந்து விளக்குகிறது' என்றார்.
பிற்பகலில் நடந்த நிகழ்ச்சியில் – சென்னை, புதுச்சேரி, திருவண்ணாமலை, வேலூர், கன்னியாகுமரி, தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து பேராளர்கள் கலந்துகொண்டனர். இதைத் தொடர்ந்து ஆய்வுக் கட்டுரைகள் மீதான விளக்கங்களும் கலந்துரையாடல்களும் நடைபெற்றன. காஞ்சிபுரம் அந்திரசன் மேல்நிலைப் பள்ளியின் உதவித் தலைமை ஆசிரியர் ஜோ.கிருபானந்தம் சிறப்புரை ஆற்றினார். கல்லூரி முதல்வர் வெ.இராமு மற்றும் நிர்வாக அலுவலர் முனியப்பன் ஆகியோர் பேராளர்களை வாழ்த்திப் பேசினர்.
நிறைவாக, ஆய்வுக் கட்டுரைகளை வழங்கிய பேராளர்களுக்கு ஆய்வுச் சான்றிதழ்களும் ‘ஆய்வுச்சுடர்’ விருதுச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. நிகழ்ச்சி ஏற்பாடுகளை தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் ச.அன்பு, பேராசிரியர்கள் சாம்ராஜ் மற்றும் சுகுமார் ஆகியோர் செய்திருந்தனர். கல்லூரி மாணவ – மாணவியர், பிறத்துறை பேராசிரியர்கள் திரளாகக் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
படவிளக்கம் :
செய்யாறு அடுத்த வடமாவந்தல் ஏ.என்.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ’தமிழிலக்கியங்களில் கதைமாந்தர்கள்’ பன்னாட்டு ஆய்வு கருத்தரங்கில் – ஆய்வுக் கட்டுரை வெளியிட்டப் போது எடுத்தப் படம்.










Leave a Reply