வேலூர் மாவட்டம், காட்பாடியை அடுத்த மெட்டுக்குளம் பகுதியில் உள்ள சன் பீம் பள்ளிக்கு எதிரே பாரத ஸ்டேட் வங்கி (SBI) ஏடிஎம் மையம் இயங்கி வருகிறது. நேற்று நள்ளிரவு, தெள்ளூர் கொல்லைமேடு பகுதியைச் சேர்ந்த சரத்குமார் (35) என்பவர் பணம் எடுப்பதற்காக இந்த ஏடிஎம் மையத்திற்குச் சென்றுள்ளார்.
அவர் உள்ளே நுழைந்தபோது, ஏடிஎம் இயந்திரத்தில் ஏற்கனவே யாரோ பணம் எடுப்பதற்காக முயற்சி செய்திருப்பது தெரியவந்தது. இயந்திரத்திலிருந்து பணம் வருவதற்கு முன்பாகவே, சம்மந்தப்பட்ட நபர் அங்கிருந்து கிளம்பிச் சென்றதாகத் தெரிகிறது. இதனால் இயந்திரத்தில் இருந்து வெளிவந்த ரூபாய் 10,000 ரொக்கப் பணம் அங்கேயே இருந்துள்ளது.

இயந்திரத்தில் கிடந்த அந்தப் பணத்தைப் பத்திரமாக எடுத்துக்கொண்ட சரத்குமார், இன்று காலை காட்பாடி காவல் நிலையத்திற்கு நேரில் சென்றார். அங்கு பணியில் இருந்த காட்பாடி காவல் ஆய்வாளர் தயாளன் அவர்களிடம் நடந்த விவரங்களைக் கூறி, அந்த 10,000 ரூபாய் பணத்தை ஒப்படைத்தார்.
பணத்தை ஒப்படைத்த சரத்குமார், தனியார் நெடுஞ்சாலை அமைக்கும் நிறுவனம் ஒன்றில் மேற்பார்வையாளராக (Supervisor) பணிபுரிந்து வருகிறார். இக்காலக்கட்டத்திலும் அவரது நேர்மையான செயலைக் கண்டு நெகிழ்ந்த காவல்துறையினர், அவருக்குப் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்தனர்.
தவறவிட்ட உரிய நபரை அடையாளம் கண்டு பணத்தை ஒப்படைக்கத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.










Leave a Reply