காட்பாடி கல்புதூர் பகுதியில் கெங்கையம்மன் கோயில் திருவிழாவில்இளைஞர்களிடையே மோதல்: ஒருவர் அடித்துக் கொலை- கொலையாளிகள் 9 பேர் கைது- 6 பேருக்கு போலீஸ் வலை!வேலூர், ஜூன் 26-காட்பாடி கல்புதூர் பகுதியில் நடைபெற்ற கெங்கையம்மன் கோயில் திருவிழாவின் போது கல்புதூர், வண்டறந்தாங்கல் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த இருவேறு பிரிவு இளைஞர்களுக்கு இடையே முன்விரோதம் தொடர்பாக கடுமையான மோதல் ஏற்பட்டது. இந்த மோதலின் போது உருட்டு கட்டைகள், இரும்பு ராடுகளால் தாக்கி கொண்டனர். இந்த மோதலின் போது தினகரன் என்ற இளைஞரை ரௌடி ஜானி உட்பட ஒரு கும்பல் விரட்டி சென்று அடித்து கொலை செய்து அருகில் இருந்த தரை கிணற்றில் வீசி விட்டு சென்று விட்டனர். இந்நிலையில் காணாமல் போன நிலையில் தேடப்பட்டு வந்த இளைஞர் தினகரன் முகத்தில் காயங்களுடன் கல்புதூர் பகுதியில் கிணற்றில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். இறந்தவர் உடலை காட்பாடி போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் காட்பாடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கொலை வழக்கு தொடர்பாக 15 பேர் மீது காட்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்த கொலை தொடர்பாக ரௌடி கௌதம்(எ) ஜானி, நரசிம்மன், ஜீவா உட்பட 9 குற்றவாளிகளை காட்பாடி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மீதமுள்ள 6 குற்றவாளிகளை போலீசார் தீவிரமாக வலைவீசி தேடி வருகின்றனர்.

வேலூர் ஏஞ்சல்ஸ் ரோட்டரி சங்கத்தின் சார்பில் காட்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகம் சீரமைப்பு!வேலூர், ஜூன் 25-ரோட்டரி டிஸ்ட்ரிக் 3231 மூலம் ரோட்டரி வேலூர் ஏஞ்சல்ஸ் சங்கத்தின் சார்பாக, காட்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கழிவு நீர் வடிகால் வசதி, கழிப்பறை சீரமைப்பு மற்றும் பள்ளி வளாகம் முழுவதும் சீரமைக்கப்பட்டது. இதன் நிறைவு விழா பிற்பகல் 11:30 மணிக்கு நடைபெற்றது. விழாவில் மாவட்ட ஆளுநர் சுரேஷ் தலைமையில், காட்பாடி சட்டமன்ற உறுப்பினர் சுதாகர் சிறப்பு விருந்தினராகவும் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியை சரளாவும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். மேலும் ரோட்டரி டிஸ்ட்ரிக் செயலாளர் கஜேந்திரன், பொருளாளர் ராஜராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர். வேலூர் ரோட்டரி லிட்டரசி சேர்மன் அருளரசி மகிழ்வான பள்ளி பற்றிய விளக்க உரையினை வழங்கினார். விழாவில் இறுதியாக பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது. இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த வேலூர் ஏஞ்சல்ஸ் சங்கத்தின் தலைவர் விஜயபாரதி அனைவரையும் வரவேற்று பேசினார். மாவட்ட ஆளுநர் மற்றும் சிறப்பு விருந்தினர் ஏற்புரை வழங்கினர். தலைமை ஆசிரியை நன்றி தெரிவித்து பேசினார். இறுதியாக. இப்பள்ளி மகிழ்வான பள்ளியாக அறிவிக்கப்பட்டது. (ஹேப்பி ஸ்கூல்)ஏஞ்சல்ஸ் சங்கத்தின் செயலாளர் கவிதா நன்றி உரை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் ஏஞ்சல்ஸ் சங்கத்தின் உறுப்பினர்கள், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மாணவிகள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.