வேலூரில் 300-க்கும் மேற்பட்ட கிராம சுகாதார செவிலியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்: இடைநிலை சுகாதாரப் பணியாளர்களை துணை சுகாதார நிலையங்களில் இருந்து அப்புறப்படுத்தக் கோரிக்கை!

வேலூர், நவ. 4-
வேலூர் சத்துவாச்சாரி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே, தமிழ்நாடு அரசு கிராமப்புற சமுதாய சுகாதார செவிலியர் கூட்டமைப்பு சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்டம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அரசு ஊழியர் சங்க ஓய்வூதிய மாநில நிர்வாகிகள் டி.பூசாமி, ஆர்.செண்பகவல்லி, சாவித்திரி, செல்வம், பி.மல்லிகா உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் 300-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், இடைநிலை சுகாதாரப் பணியாளர்கள், கிராமப்புற சுகாதார செவிலியர்கள் மேற்கொண்டு வரும் தாய்-சேய் நலன் மற்றும் குடும்ப நலப் பணிகளைத் தாங்களே செய்வதாக உண்மைக்குப் புறம்பான தகவல்களைத் தெரிவிப்பதாகக் குற்றம் சாட்டினர். இதனைத் தடுத்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
மேலும், துணை சுகாதார நிலையங்களில் இருந்து இடைநிலை சுகாதாரப் பணியாளர்களை அப்புறப்படுத்த வேண்டும், கிராம சுகாதார செவிலியர்களின் பணிகளை இடைநிலை சுகாதாரப் பணியாளர்கள் மேற்கொள்வதாகத் தவறான அறிக்கைகள் அனுப்புவதை நிறுத்த வேண்டும், செய்யாத பணிகளுக்காக ஊடகங்களில் பேட்டி அளிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், விசாரணை நடவடிக்கைகளின்போது செவிலியர்களை மிரட்டி ரூ.90 ஆயிரம் முதல் ரூ.1.60 லட்சம் வரை செலவு செய்ய வற்புறுத்துவதைத் தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தனர்.
அதேபோல், பணி மூப்பு அடிப்படையில் பதவி உயர்வு வழங்கும்போது மதிப்பெண்களுடன் கூடிய பணி மூப்புப் பட்டியலை வெளியிட வேண்டும், பாலினப் பாகுபாடின்றி நிலை-1 பதவி உயர்வு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
கிராமப்புறங்களில் மக்களுடன் இணைந்து தமிழக அரசின் சுகாதாரத் திட்டங்களை உடனுக்குடன் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் கிராமப்புற சமுதாய சுகாதார செவிலியர்களின் பங்கு முக்கியமானது. ஆனால், தங்களது பணிகளுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்காமல் மன உளைச்சலுக்கு ஆளாகி வருவதாகவும் தெரிவித்தனர்.
தங்களது கோரிக்கைகள் குறித்து முதலமைச்சர், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மற்றும் துறைச் செயலாளர் ஆகியோரைச் சந்தித்துப் பேசுவதற்கு நேரம் ஒதுக்கித் தர வேண்டும் என்றும் வலியுறுத்தினர். மேலும், கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், வரும் 16.11.2026 அன்று சென்னையில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும் கூட்டமைப்பினர் தெரிவித்தனர். கொரோனா காலத்தில் கடவுளாய் திகழ்ந்த செவிலியர்கள் இன்று போராட்டக் களத்தில்! தெய்வப் பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுமா தமிழக அரசு..?