வேலூர், அக்.22-
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுகா அலுவலகம் அடுத்த அப்புக்கல் பகுதியில் பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. எதிர்பாராத விதமாகத் திடீரென பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டு இருவர் உயிரிழந்துள்ளனர். சம்பவ இடத்திலேயே பெண் ஒருவர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற பட்டாசு தொழிற்சாலைப் பணியாளர்களைத் தீவிர சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருந்த நிலையில், இன்னொரு பெண்ணும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் வேலூர் மாவட்டத்தில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், அரசு ஊழியர்கள் மற்றும் அணைக்கட்டு தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் வேலழகன் ஆகியோர் தீ விபத்து ஏற்பட்ட பட்டாசு தொழிற்சாலையைப் பார்வையிட்டு விபத்தில் சிக்கியவர்களுக்கு முதலுதவிகளை செய்யும் பணியில் ஈடுபட்டனர். அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் வேலழகன், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து, தீ விபத்தில் சிக்கிய பணியாளர்களை மருத்துவமனையில் நேரில் சென்று பார்வையிட்டு ஆறுதல் தெரிவித்துள்ளார்.
அணைக்கட்டு பகுதியைச் சேர்ந்த ஹரிபிரசாத் (32) என்பவர் அதே பகுதியில் சொந்தமாகப் பட்டாசுக் கடை நடத்தி வருகிறார். மேலும், சின்ன அணைக்கட்டு பகுதியில் பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலையையும் நடத்தி வருகிறார். இந்தத் தொழிற்சாலையில் பத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், 21.10.2026 புதன்கிழமை காலை சுமார் 10 மணியளவில் தொழிற்சாலையின் தொழிலாளர்கள் வழக்கம்போல் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென அங்கு தீ விபத்து ஏற்பட்டு, தீ மளமளவெனப் பரவியது. இதனால் தொழிற்சாலையில் பணியில் இருந்த 6 பேர் அங்கிருந்து தப்பி வெளியேறியுள்ளனர். ஆனால், கொட்டாவூர் பகுதியைச் சேர்ந்த காயத்ரி என்ற பெண் தொழிலாளி கட்டடத்திற்குள் சிக்கிக் கொண்டதால், அவரால் வெளியே வர முடியவில்லை. இதனால் தீயில் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அதே பகுதியைச் சேர்ந்த சங்கீதா (36) என்ற பெண்ணும் தீயில் சிக்கிக் கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் பள்ளிகொண்டா தீயணைப்புத் துறையினர், தீயில் சிக்கிய சங்கீதாவை மீட்டு, உடனடியாக அணைக்கட்டு அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி சங்கீதாவும் உயிரிழந்தார்.
இந்தத் தீ விபத்து குறித்து தகவல் அறிந்த மாவட்ட ஆட்சியர் லீலா அலெக்ஸ், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சிவராமன், டிஎஸ்பி நந்தகுமார், அணைக்கட்டு வட்டாட்சியர் மகேஸ்வரி உள்ளிட்ட அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, தீ விபத்து ஏற்பட்ட பட்டாசு தொழிற்சாலையை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். உயிரிழந்த காயத்திரியின் உடலைக் கைப்பற்றிய போலீசார், பிரேதப் பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தீ விபத்தில் சிக்கிய தொழிலாளர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை. பட்டாசு தயாரிக்கும் பணியின்போது ஏற்பட்ட தீப்பொறி காரணமாக விபத்து நேரிட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.










Leave a Reply