கோவை மாவட்டத்தின் பிரதான நுழைவு வாயிலாகவும், நீலகிரி மலையின் அடிவார நகரமாகவும் திகழும் மேட்டுப்பாளையம் நகராட்சியில் மொத்தம் 33 வார்டுகள் உள்ளன. இங்கு சுமார் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். நாள்தோறும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள், அரசு உயர் அதிகாரிகள், அமைச்சர்கள் கடந்து செல்லும் முக்கிய வழிகாட்டி நகரமாக இது விளங்குகிறது.
இருப்பினும், சமீபகாலமாக நகராட்சியின் பல்வேறு பகுதிகளில் குப்பைகள் முறையாக அப்புறப்படுத்தப்படாமலும், சாக்கடைகள் தூர்வாரப்படாமலும் துர்நாற்றம் வீசி சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக டெங்கு, மலேரியா உள்ளிட்ட கொடிய தொற்றுநோய்கள் பரவும் அபாயம் உருவாகியுள்ளது. காய்ச்சல் மற்றும் பல்வேறு உபாதைகளால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள், நாள்தோறும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காகக் குவிந்து வருகின்றனர்.
பிரதான சுற்றுலாப் பாதையில் கழிவுநீர் பெருக்கெடுப்பு
நகரத்தின் மையப்பகுதியும், போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியுமான சக்கரவர்த்தி துணிக்கடை எதிர்ப்புறம் உள்ள மும்முனைச் சாலையில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பாதாள சாக்கடை அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதிலிருந்து வெளியேறும் கழிவுநீர், சாலையில் ஆற்று வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடுகிறது.
”தொழில்நுட்பத்திலும் உள்கட்டமைப்பிலும் வளர்ச்சியைப் பற்றிப் பேசும் சூழலில், நகரத்தின் மையப் பகுதியில் உள்ள ஒரு சாக்கடை அடைப்பைக் கூட சரிசெய்ய முடியாமல் நகராட்சி நிர்வாகம் தடுமாறுவது பெரும் வேதனையளிக்கிறது.அப்பகுதி சமூக ஆர்வலர் DDH ஹபிபுல்லா கூறியதாவது
இச்சாலையைப் பயன்படுத்திதான் தினமும் ஆயிரக்கணக்கான அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளும், பிரசித்தி பெற்ற வனபத்ரகாளியம்மன் கோயிலுக்குச் செல்லும் பக்தர்களும் நடந்து செல்ல வேண்டியுள்ளது. துர்நாற்றம் வீசும் கழிவுநீரைக் காலால் மிதித்துக் கொண்டு செல்ல வேண்டிய அவல நிலை நீடிக்கிறது என்று கூறினார்
மேலும் மேட்டுப்பாளையம் நகராட்சி பகுதிகளில்
குடிநீர் தட்டுப்பாடும், விபத்து அபாயத்தை உயர்த்தும் கால்நடைகளும்
நகரத்தின் சுகாதாரச் சீர்கேடு மட்டுமின்றி, மக்களின் அன்றாட அடிப்படைத் தேவைகளிலும் பல்வேறு முடக்கங்கள் காணப்படுகின்றன
உதாரணமாக மேட்டுப்பாளையம் நகராட்சி பவானி ஆற்றின் கரையோரம் அமைந்திருந்தும் நகரின் பெரும்பாலான குடியிருப்புப் பகுதிகளில் நடூர் டேங்க்மேடு சாந்தி நகர் பாரதி நகர் உள்ளிட்ட பகுதிகளில்
முறையான கால இடைவெளியில் குடிநீர் விநியோகம் செய்யப்படுவதில்லை. பத்து நாட்களுக்கு ஒரு முறை தான் குடிநீர் வருகிறது அதையும் பிடிப்பதற்கு பொதுமக்கள் மணி கணக்கில் காத்திருக்கும் சூழல் நிலவுகிறது.
சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகள் மேட்டுப்பாளையம் பிரதான சாலைகள், மார்க்கெட் பகுதிகள் மற்றும் குடியிருப்பு வீதிகளில் உரிமை கோரப்படாத கால்நடைகள் மாடுகள் ஆடுகள் கட்டுப்பாடின்றி சுற்றித்திரிகின்றன. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு, இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயமும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க கோரிக்கை!
தற்போது பொறுப்பேற்றுள்ள புதிய அரசு, விரைவில் உள்ளாட்சித் தேர்தலைச் சந்திக்க உள்ள சூழலில், நகராட்சி நிர்வாகத்தின் இத்தகைய மெத்தனப் போக்கு அரசுக்கு அவப்பெயரையும், மக்களிடையே பெரும் அதிருப்தியையும் உண்டாக்கும் என சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
எனவே, மாவட்ட நிர்வாகமும் நகராட்சி அதிகாரிகளும் உடனடியாகத் தலையிட்டு:
முக்கிய வீதிகள் மற்றும் வார்டுகளில் உள்ள சாக்கடை அடைப்புகளை போர்க்கால அடிப்படையில் சரிசெய்ய வேண்டும்.
குப்பைகளை உடனுக்குடன் அப்புறப்படுத்தி, கிருமிநாசினி தெளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சீரான குடிநீர் விநியோகத்தை உறுதி செய்து, சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளைக் கட்டுப்படுத்த வேண்டும்.
நகரின் சுகாதாரத்தை மீட்டெடுத்து, பொதுமக்களின் நலனைப் பாதுகாக்கவும், அரசுக்கு ஏற்படும் அவப்பெயரைத் தவிர்க்கவும் நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மேட்டுப்பாளையம் மக்களின் கோரிக்கையாக உள்ளது.












Leave a Reply