பேரணாம்பட்டு அருகே 6 வயது சிறுவன் கொடூர கொலை? – பாட்டி, அத்தை கைது. நரபலி கோணத்தில் போலீசார் விசாரணை

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே மேல்பட்டி பகுதியில் 6 வயது சிறுவன் கொடூரமாக கொலை செய்யப்பட்டதாக எழுந்த புகாரில், சிறுவனின் பாட்டி மற்றும் அத்தை கைது செய்யப்பட்டு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேல்பட்டியை சேர்ந்த ராஜேஷ் – ஆஷா தம்பதியின் மகன் முகிலன். குடும்ப பிரச்சனை காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்த பெற்றோர், பின்னர் சமரசம் செய்யப்பட்டு ஒன்றாக வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது.

திருப்பூரில் வேலைக்கு சென்ற நிலையில், முகிலனை அவரது பாட்டி விஜயா வீட்டில் விட்டுச் சென்றுள்ளனர். இந்நிலையில், சிறுவன் திடீரென உயிரிழந்ததாக கூறி வீட்டில் சடலமாக வைத்திருந்ததாக உறவினர்களுக்கு தகவல் கிடைத்தது.

சம்பவ இடத்திற்கு சென்ற மேல்பட்டி போலீசார் சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

முதல் கட்ட விசாரணையில் சிறுவனின் உடலில் சூடு வைத்ததற்கான காயங்கள் மற்றும் தலையில் தாக்கிய காயங்கள் இருந்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து சிறுவனின் அத்தை ரேவதி மற்றும் பாட்டி விஜயா ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், பாட்டி விஜயா மாந்திரீகம் செய்வதாக கூறப்படும் நிலையில், சிறுவன் நரபலி கொடுக்கப்பட்டாரா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பின்னரே முழு விவரங்கள் தெரியவரும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

6 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பேரணாம்பட்டு – குடியாத்தம் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.