10ம் வகுப்பு பொதுத் தேர்வு தேர்ச்சி விகிதத்தை அதிகரித்த மேனல்லூர் அரசு பள்ளி தலைமை ஆசிரியருக்கு பாராட்டு !செய்யாறு, மே 21 -செய்யாறு அடுத்த மேனல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 98 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.திருவண்ணாமலை மாவட்டத்தில் கடை கோடியில் அமைந்துள்ளது மேனல்லூர் கிராமம். இங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் நடப்பாண்டு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை 62 மாணவ – மாணவிகள் எழுதினர். தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. இதில், 60 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். பள்ளியின் தேர்ச்சி விகிதம் 98 சதவீதமாகும். தமிழ்ச்செல்வன் என்ற மாணவன் 500க்கு 479 மதிப்பெண்கள் பெற்று முதல் இடத்தை பிடித்துள்ளார். இந்துமதி என்ற மாணவி 469 மதிப்பெண்கள் பெற்று 2ம் இடத்தையும், பவனிஷா என்ற மாணவி 456 மதிப்பெண்கள் எடுத்து 3ம் இடத்தையும் பிடித்துள்ளார்.தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் பள்ளி தலைமை ஆசிரியர் தயாளன் இனிப்பு வழங்கி பாராட்டினார். இதேபோல் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர், உறுப்பினர்கள், எஸ்.எம்.சி., தலைவர், உறுப்பினர், ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்ற மாணவ – மாணவிகளை பாராட்டினர். இந்த நிகழ்ச்சியில் மாணவர்களின் பெற்றோரும் கலந்து கொண்டு தலைமை ஆசிரியர் தயாளனுக்கும் – சக ஆசிரியர்களுக்கும் தங்களது நன்றியை தெரிவித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.