செய்யாறில் கேஸ் சிலிண்டர் வழங்குவதில் அலைகழிப்பு -ஆத்திரமடைந்த வாடிக்கையாளர்கள் திடீர் சாலை மறியல் !செய்யாறு, மே 19 -செய்யாறில் கேஸ் சிலிண்டர் வழங்குவதில் அலைகழிப்பு – குளறுபடியால் புகார் ஏற்பட்டுள்ளதாக கூறி வாடிக்கையாளர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து ஸ்தம்பித்தது. போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி மறியலை கைவிடச் செய்தனர்.ஈரானில் போர் தொடங்கிய நாள் முதல் செய்யாறில் கடந்த 2 மாதங்களாக கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ‘தலைவிரித்து’ ஆடுகிறது. இதை சரி செய்ய முடியாமல் கேஸ் விநியோகிஸ்தர்கள் தடுமாறி வருகின்றனர். செய்யாறு நகரில் ‘இண்டேன் கேஸ்’ – ‘பாரத் கேஸ்’ என, 2 கேஸ் விநியோகஸ்தர்கள் இருந்து வருகின்றனர். இவர்களது ஏஜென்சி மூலமாக செய்யாறு மற்றும் சுற்றியுள்ள கிராமங்களுக்கு ஒரு நாளைக்கு, தலா 600 சிலிண்டர்கள் விநியோகம் செய்ய வேண்டும்.கேஸ் ‘டெலிவரி பாய்கள்’ பகுதி – பகுதியாக சென்று வாடிக்கை யாளர்களுக்கு – சிலிண்டரை வழங்கி வரும் பணிகளை செய்து வருகின்றனர். கடந்த இரண்டு மாதங்களாக இவர்களது பணி சரிவரவில்லை என, வாடிக்கையாளர்கள் பரவலாக பேசி வருகின்றனர். இது தொடர்பான புகார்களும் கேஸ் விநியோகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. நடவடிக்கை எடுக்க வேண்டிய கேஸ் விநியோகிஸ்தர்கள் இதுகுறித்து, ‘செவி சாய்க்காமல்’ மெத்தனமாக இருந்து வருவதாக கூறப்படுகிறது.சில வாடிக்கையாளர்களுக்கு 50 நாட்கள் ஆகியும் கூட சிலிண்டர் வழங்கப்படவில்லை என, தெரிகிறது. தங்களது சிலிண்டர் வீடுகளுக்கும் வந்து சேரவில்லை. நாங்களே கேஸ் குடோன்களுக்கு எடுத்து வந்தாலும் எங்களை பற்றி கண்டு கொள்வதில்லை என்ற குற்றச்சாட்டை வாடிக்கையாளர்கள் முன் வைக்கின்றனர். நேற்று காலை 6 மணி அளவில் இண்டேன் கேஸ் குடோன் – பாரத் கேஸ் குடோன் என, இரண்டு இடங்களிலும் தல 30க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் வந்து சிலிண்டர்களுக்காக காத்திருந்தனர். இரண்டு இடங்களிலும் 10 மணி வரை வாடிக்கையாளர்களை காத்திருந்தனர். அந்தந்த ‘டெலிவரி பாய்கள்’ இந்த வாடிக்கை யாளர்களை கண்டு கொள்ளவில்லை என, கூறப்படுகிறது.இதனால், ஆத்திரமடைந்த 60க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் ஒன்று திரண்டு செய்யாறு பஸ் நிலையம் அருகே உள்ள ஆற்காடு சாலையில் சிலிண்டர்களுடன் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். எங்களுக்கு வழங்க வேண்டிய சிலிண்டரை வழங்காமல் அலைகழித்து வரும் விநியோகஸ்தர்கள் மீது, அந்தந்த ஆயில் நிறுவன உயரதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோஷங்களையும் எழுப்பினர். இத்தகவல் அறிந்த செய்யாறு காவல் நிலைய எஸ்.ஐ., வரதராஜன் – தனிப்பிரிவு காவலர் முருகன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட கேஸ் சிலிண்டர் வாடிக்கையாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர். இதனால், முக்கிய சாலையான இங்கு போக்குவரத்து ஸ்தம்பித்தது.

உள்ளாட்சி நிதி தணிக்கை துறையில் பணியாளர் விரோதப் போக்கை கடைப்பிடித்து பெண் பணியாளர்களை ஒருமையில் தரக்குறைவாக பேசி இழிவாக நடத்தி வரும் தலைமை இயக்குநரை உடனடியாக பணியிட மாற்றம் செய்யக்கோரி தமிழ்நாடு உள்ளாட்சி நிதி தணிக்கை மற்றும் மாநில அரசு தணிக்கை துறை ஆய்வாளர் மன்றம் நிதித்துறை அமைச்சர் கே. ஏ. செங்கோட்டையனிடம் புகார் மனு அளிப்பு!வேலூர், மே 19-மாநில அரசின் உள்ளாட்சி அமைப்புகளின் நிதி நிலையை சீராய்வு செய்து அரசின் வருவாயை ப் பாதுகாப்பதில் மிக முக்கிய பங்காற்றி வரும் உள்ளாட்சி நிதி தணிக்கை துறையின் பணியாளர்களின் தற்போதைய அவல நிலையை அமைச்சர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு வந்து அவசர தீர்வு காண வேண்டி கடிதத்தை சமர்ப்பித்துள்ளனர்.தலைமை செயலக நிதித்துறை செயலாளரின் அலுவலக முற்றுகைப் போராட்டம்: பெண் பணியாளர்களிடம் மிக மட்டமான, சுயமரியாதையைக் காயப்படுத்தும் முறையற்ற வார்த்தைகளைப் பேசுவதும், ஒருமையில் பேசி அவமதிப்பதும் இவரின் வாடிக்கையாக இருந்த காரணத்தினால் இத்தகைய அநாகரிகப் போக்கைக் கண்டித்து, கடந்த 08.07.2025 அன்று தலைமைச் செயலக நிதித்துறைப் பணியாளர்கள் மற்றும் பெண் பணியாளர்கள் ஒன்றிணைந்து நிதித்துறை செயலாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் பிரம்மாண்ட போராட்டம் நடத்தியது. இவரின் நிர்வாகச் சீர்கேட்டிற்கு மிக முக்கியச் சான்றாகும்.கடந்த ஆட்சியில் கருப்புப் பட்டை அணிந்து பணி செய்யும் போராட்டம்: மேற்கண்ட பணியாளர் விரோத போக்கை கண்டித்தும் CAMS முறையில் விடுப்பு எடுக்கும் அடிப்படை உரிமைகளை கூட வழங்காத போக்கினை கண்டித்தும், பெண் பணியாளர்களிடம் மரியாதை குறைவாக நடத்தும் போக்கினை கண்டித்தும், தமிழ்நாடு உள்ளாட்சி நிதித் தணிக்கை மற்றும் தமிழ்நாடு உள்ளாட்சி நிதித் தணிக்கை ஆய்வாளர் மன்றம் இணைந்து கடந்த 14.07.2025 அன்று கருப்பு பட்டை அணிந்து பணி செய்யும் மாபெரும் கண்டன போராட்டத்தை நடத்தினோம்.​அதிகார மற்றும் அரசியல் பின்னணி :இவர் முன்னாள் நிதித்துறை செயலாளர் உதயசந்திரனின் தீவிர சிஷ்யனாக இருந்த காரணத்தினால் இவர் மீது பலமுறை மேனாள் நிதியமைச்சர் அவர்களிடமும், முன்னாள் நிதித்துறை செயலாளர் உதயசந்திரனிடமும் நேரில் புகார் அளித்தும், பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் உதயசந்திரனிடம் இருந்த நெருக்கத்தின் காரணமாக எவ்வித நடவடிக்கையும் இவர் மீது எடுக்கப்படவில்லை.அரசின் வருவாயைப் பெருக்கவும், நிதி ஒழுங்கை நிலைநாட்டவும் அர்ப்பணிப்புடன் உழைக்கும் தணிக்கைத் துறை பணியாளர்களின் சுயமரியாதையையும், பெண் பணியாளர்களின் கண்ணியத்தையும் காப்பது அரசின் கடமையாகும்..எனவே, பெண்களின் பாதுகாப்பிலும், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலனை காப்பதிலும் முக்கிய இலக்காக கொண்டு செயல்படும் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் ஆட்சியிலும், கடந்த அரசின் இத்தகைய போக்கு தொடராத வண்ணம் தலைமை தணிக்கை இயக்குநர் முன்னாள் கூடுதல் பொறுப்பு வகித்த அருண் சுந்தர் தயாளனை அப்பொறுப்பிலிருந்து விடுவித்து தணிக்கை துறையில் சுமூகமான பணி சூழல் நடவடிக்கை எடுக்குமாறு இந்த புகார் மனுவில் குறிப்பிட்டிருந்தனர். இந்த புகார் மனுவை மாநில தலைவர் பா. ஐயப்பன், மாநில பொதுச் செயலாளர் பிரகாஷ், மாநில துணைத்தலைவர் த. ஞானவேல் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் நிதித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனிடம் புகார் மனுவை அளித்தனர். உள்ளாட்சி நிதி தணிக்கை துறை ஆய்வாளர் மன்றம் மற்றும் உள்ளாட்சி நிதி தணிக்கை துறை ஊழியர் சங்கத்தின் கோரிக்கையை ஏற்று அருண் சுந்தர் தயாளனை நிதித்துறை சிறப்பு செயலாளர் பதவியில் இருந்து பணியிட மாறுதல் செய்து உத்தரவிட்டது. இதற்கு இச்சங்கம் மாண்புமிகு தமிழக முதல்வர் ஜோசப் விஜய்க்கும், மாண்புமிகு நிதித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாக சங்கத்தின் சார்பில் வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வணக்கம் சார்…. பேரூர் உட்கோட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் அவர்கள் பேரூர் உட்கோட்ட பகுதிகளில் இருக்கும் டாஸ்மார்க் மற்றும் பார்களை இரவு 10 மணிக்கு மேல் பார் செயல்படுகிறதா என்று சோதனை செய்யும் காட்சி… அதேபோல் ஆலந்துறை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட டாஸ்மார்க் கடைகளின் மேற்பார்வையாளர் மற்றும் பார் உரிமையாளர்களை அழைத்து அரசு விதிமுறைகள்படி மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே டாஸ்மார்க் கடைகள் மற்றும் பார்கள் செயல்பட வேண்டும் என்றும் மற்றும் மது விற்பனை எதுவும் கள்ளச் சந்தைகளில் 10 மணிக்கு மேல் விற்பனை செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆலந்துறை காவல் நிலைய ஆய்வாளர் திரு. முத்துக்குமார் அவர்கள் அறிவுரைகள் வழங்கினார்….

ஒடுகத்தூரில் பெண் தூக்கு மாட்டி தற்கொலை!வேலூர், மே 19 -வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் அடுத்த தென்புதூரைச் சேர்ந்தவர் மணிகண்டன் (33). இவரது மனைவி அம்பிகா (30). மணிகண்டன் பெங்களூருவில் வேறொரு பெண்ணுடன் குடும்பம் நடத்தி வருகிறார். இதனால் கணவன் ,மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்து வந்த அம்பிகா வீட்டில் தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த வேப்பங்குப்பம் போலீஸார் அம்பிகா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம் பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வேப்பங்குப்பம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வைகாசி மாத கிருத்திகையை முன்னிட்டு காட்பாடி செங்குட்டையில் அன்னதானம் வழங்கல்!வேலூர் ,மே 18-வேலூர் மாவட்டம், காட்பாடி செங்குட்டை பகுதியில் திரௌபதி அம்மன் கோயில் எதிரில் சித்தூர்- கடலூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலை ஓரம் சாமியானா பந்தல் அமைத்து மே மாத (வைகாசி) கிருத்திகையை முன்னிட்டு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த அன்னதானம் நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை இடைவிடாது ஒரு மணி நேரம் வழங்கப்பட்டது. இந்த நன்னாளில் முருக பக்தர்களுக்கு வேலூர் செங்குட்டை தொழிலதிபர் அச்சுதன் -அமுதா தம்பதியர் அன்னதானம் வழங்கினர். இந்த அன்னதானத்தில் கேசரி மற்றும் மதிய உணவு தயிர் சாதம், ஊறுகாய் வழங்கப்பட்டது. சுமார் 500க்கும் மேற்பட்ட முருக பக்தர்கள் வரிசையில் நின்று இந்த அன்னதானத்தை பெற்று உண்டு மகிழ்ந்து தங்களது பசியாற்றி கொண்டனர்.இந்த அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை அச்சுதன் தனது திருக்கரங்களால் தொடங்கி வைத்தது குறிப்பிடத்தக்கது. முதலாவதாக முருகன் திருவுருவப் படத்துக்கு மலர்களால் அலங்காரம் செய்து சிறப்பு வழிபாடு நடந்தது. இதையடுத்து அன்னதானம் நடந்தது. இந்த அன்னதானத்துக்கான அனைத்து ஏற்பாடுகளையும் அச்சுதன் -அமுதா தம்பதியருடன் அவரது குடும்பத்தினர் மற்றும் அவரது நண்பர்கள், நெருங்கிய உறவினர்கள் விமரிசையாக செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியில் அச்சுதனுக்கு உதவியாக தெலுங்கானா நக்சலைட் தேடுதல் வேட்டை பிரிவு உதவி ஆய்வாளர் ரவி, தொழிலதிபர் நந்தகுமார், முன்னாள் அதிமுக கவுன்சிலர் காட்பாடி செங்கோட்டை குமார், அதிமுக பிரமுகர் சிவாஜி உள்ளிட்டோர் பேருதவி புரிந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

திருவண்ணாமலைஅ.ம.மு.க., வடக்கு மாவட்ட செயலாளர் மா.கி.வரதராஜன்,அமைச்சர் செங்கோட்டையன் முன்னிலையில் த.வெ.க.,வில் ஐக்கியம் !செய்யாறு, மே 17 -திருவண்ணாமலை அ.ம.மு.க.,வின் வடக்கு மாவட்ட செயலாளர் மா.கி.வரதராஜன், த.வெ.க.,வில் நேற்று இணைந்தார். இவருக்கு, த.வெ.க.,வின் ஒருங்கிணைப் பாளரும் – அமைச்சருமான செங்கோட்டையன் ‘கட்சி வேட்டியை’ வழங்கி தவெகவில் அன்புடன் வரவேற்று இணைத்துக் கொண்டார்.திருவண்ணாமலை அ.ம.மு.க.,வின் வடக்கு மாவட்ட செயலாளராக பதவி வகித்து வந்தவர் மாமண்டூர் கிராமத்தைச் சேர்ந்த மா.கி.வரதராஜன் ( 68 ). இவர் கடந்த 2017ம் ஆண்டு முதல் மேற்கண்ட பதவியை வகித்து வந்தார். கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக அரசியல் அனுபவம் உள்ள இவர், அ.தி.மு.க.,வில் பொறுப்பு வகித்த போது, கடந்த 2006ம் ஆண்டு செய்யாறு சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட வெம்பாக்கம் ஒன்றியக் குழு துணைத் தலைவராக பதவி வகித்து வந்தார். இதுதவிர, இவருக்கு அ.தி.மு.க.,வில் தொடர்ந்து 5 முறை ஒன்றிய செயலாளராக பதவியும் வழங்கப்பட்டது. இவரது மூத்த – இளைய மகன்களும் அரசியலில் இருந்து வருகின்றனர். மூத்த மகன் வசந்தராஜ் ( 37 ) முன்னாள் ஒன்றிய கவுன்சிலராகவும் பொறுப்பு வகித்து வந்தார். இளைய மகன் வினோத் பிசாத் ( 35 ). அ.ம.மு.க.வில் மாவட்ட மாணவர் அணி இணைச் செயலாளராகவும் பதவி வகித்து வந்தார். மொத்தத்தில் இவரது குடும்பமே அரசியலில் ஈடுபட்டு வருகின்றனர்.தற்பொழுது தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் சூழல் மாற்றம் காரணமாகஅ.ம.மு.க.,வின் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளர்மா.கி.வரதராஜன் நேற்று முன்தினம் வியாழக்கிழமை சென்னையில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப் பாளரும், அமைச்சருமான செங்கோட்டையனை நேரில் சந்தித்து அவரது முன்னிலையில் த.வெ.க.,வில் தன்னை இணைத்து கொண்டார். இவருக்கு அமைச்சர் செங்கோட்டையன் ‘கட்சி வேட்டியை’ வழங்கி வரவேற்று தவெகவில் இணைத்துக் கொண்டார். மா.கி.வரதராஜனின் இரு மகன்களும் த.வெ.க.,வில் இணைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.