அண்ணாமலையின்புதிய கட்சிக்கான தினமும் ஒரு நிகழ்ச்சி: செய்யாறில் சரவணன் தலைமையில் நடந்து வருவதாக தகவல் !செய்யாறு, ஜூலை 11 -அண்ணாமலை தொடங்கியுள்ள புது கட்சி தொடர்பாக செய்யாறில் தினமும் ஒரு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகின்றது. ‘போதை இல்லா தமிழகத்தை உருவாக்குவோம்’ என்ற வாசகங்கள் அடங்கிய ‘ஸ்டிக்கரை’ ஆட்டோக்களில் ஒட்டும் பணியில் தொண்டர்கள் நேற்று ஈடுபட்டனர்.செய்யாறு பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் அண்ணாமலை கட்சியில் இணையதளம் மூலமாக விரைவாக இணைந்து வருகின்றனர். இதற்கான விழிப்புணர்வை செய்யாறு வெங்கட்ராயன் பேட்டை பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலரும் – அண்ணாமலை தொடங்கியுள்ள புது கட்சியின் தொண்டருமான சரவணன் தலைமையில், இளம் தொண்டர்கள் ஒத்துழைப்புடன் தினமும் ஒரு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. ‘மாறுவோம் மாற்றுவோம்’ – இளைஞர்கள் அழிவதற்கு காரணமாக இருந்து வரும் போதைப் பழக்கத்தை ‘தமிழகத்தை விட்டு விரட்டியடிப்போம்’ என்ற வாசகங்கள் அடங்கிய ‘ஸ்டிக்கரை’ 40க்கும் மேற்பட்ட ஆட்டோக்களில் ஒட்டி, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.செய்யாறு பெரியார் சிலை அருகே நடந்த இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி பஜார் வீதி வரை சென்றது. ‘ஸ்டிக்கர்’ ஒட்டப்பட்ட ஆட்டோக்கள் அணி வகுத்தபடி சென்று, தொண்டர்கள், போதை ஒழிப்பு குறித்த வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினர். அண்ணாமலையின் புது கட்சி தொடர்பாக தினமும் ஒரு நிகழ்ச்சி சரவணன் ஏற்பாட்டில் நடத்தப்படுவதால், புதிய உறுப்பினர்கள் சேர்க்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
Leave a Reply