உதகை, ஜூன் 29:


உதகை நகராட்சியில் பணியாற்றும் தொழிலாளர்களின் நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி, சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தின் சார்பில் இன்று (29.06.2026) முதல் காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, உதகை வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தையில் நிர்வாகம் தொழிலாளர்களின் கோரிக்கைகளை விரைவில் நிறைவேற்ற உறுதியளித்ததையடுத்து போராட்டம் முடிவுக்கு வந்தது.
தொழிலாளர்களுக்கு பணிக்குத் தேவையான துப்புரவு மற்றும் பராமரிப்பு உபகரணங்கள் (கூடை, துடைப்பம், மண்வெட்டி, கத்தி, கால்வாய் சுத்தம் செய்யும் ரேக் உள்ளிட்டவை) உடனடியாக வழங்க வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், தற்செயல் விடுப்பு (CL), மருத்துவ விடுப்பு (ML), ஈட்டிய விடுப்பு (EL) வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும், ஓய்வு பெற்ற மற்றும் பணிக்காலத்தில் உயிரிழந்த பணியாளர்களுக்கான ஓய்வூதியம், பணிக்கொடை மற்றும் மரண பலன்களை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
மேலும், CPS திட்டத்தின் கீழ் உள்ள 10 பணியாளர்களின் நிலுவை ஓய்வூதிய பலன்களை வழங்குதல், பழுதடைந்த நகராட்சி வாகனங்களை சீரமைத்தல், ஒப்பந்தத் தொழிலாளர்களை 8 மணி நேரத்திற்கும் மேலாக வேலை செய்ய நிர்பந்திப்பதை நிறுத்துதல், கடந்த ஓராண்டாக செலுத்தப்படாத ESI மற்றும் EPF தொகைகளை உடனடியாக செலுத்துதல், தொழிலாளர்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்யப்பட்ட PF தொகைகளை EPFO-வில் வரவு வைப்பது, மாவட்ட ஆட்சியர் நிர்ணயித்த ஊதியத்தை வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளும் வலியுறுத்தப்பட்டன.
பேச்சுவார்த்தையில் நகராட்சி ஆணையாளர், மருத்துவ மற்றும் சுகாதார அலுவலர், காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் ஆகியோர் நிர்வாக தரப்பில் பங்கேற்றனர். தொழிற்சங்க தரப்பில் சி.ஐ.டி.யு. மாவட்டச் செயலாளர் சி. வினோத், மாவட்டப் பொருளாளர் அ. நவீன்சந்திரன், நகராட்சி ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் சேகர், செயலாளர் பழனிச்சாமி, பொருளாளர் ரவிகுமார், சிலம்பரசன், சந்தோஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பேச்சுவார்த்தையில் தொழிற்சங்கம் முன்வைத்த அனைத்து கோரிக்கைகளின் நியாயத்தையும் நிர்வாகம் ஏற்று, அவற்றை மிக விரைவாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தது. இதனையடுத்து, சி.ஐ.டி.யு. அறிவித்திருந்த காத்திருப்பு போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது.










Leave a Reply