மாங்காய் பறிக்க மரத்தில் ஏறிய நபர் கீழே விழுந்து உயிரிழந்த பரிதாபம்!வேலூர், ஜூன் 21-வேலூர் மாவட்டம், காட்பாடி வள்ளிமலை சாலையில் உள்ள பழைய போன் மில் காமராஜ் நகர் பகுதியைச் சேர்ந்தவர் மணி (57). இவர் முன்பு தனியார் நிறுவனம் ஒன்றில் ஊழியராகப் பணியாற்றினார். அவர் தனது வீட்டில் உள்ள மா மரத்தில் மாங்காய்களைப் பறிப்பதற்காக மரத்தின் மீது ஏறியுள்ளார். அப்போது அவர் நின்றுகொண்டிருந்த ஒரு சிறிய மரக்கிளை எதிர்பாராதவிதமாக திடீரென முறிந்தது.இதனால் நிலைதடுமாறி மரத்திலிருந்து மணி கீழே விழுந்தார். இதில் அவருக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.போலீசார் மணியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து காட்பாடி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..வீட்டில் இருந்த மாமரத்தில் மாங்காய் பறிக்கச் சென்றவர் மரத்திலிருந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.