அரசு இ-சேவை மைய உரிமையாளர்களுக்கு ஆலோசனைக் கூட்டம்

விண்ணப்பங்களை பிழையின்றி பதிவேற்றம் செய்ய வட்டாட்சியர் அறிவுரை

திருப்பத்தூர் வட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு இ-சேவை மைய உரிமையாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் வட்டாட்சியர் அலுவலகத்தில், வட்டாட்சியர் திரு. நவநீதம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் தலைமையிடத்து துணை வட்டாட்சியர் திருமதி. வனிதா அவர்கள் முன்னிலை வகித்தார்.

மேலும், மண்டல துணை வட்டாட்சியர்கள் திரு. வேணுகோபால், திரு. செல்வராஜ், வட்ட துணை ஆய்வாளர் திரு. சிங்காரவேலன் ஆகியோர் கலந்து கொண்டு, அரசு இ-சேவை மைய உரிமையாளர்களுக்கு பல்வேறு வழிகாட்டுதல்களையும் அறிவுரைகளையும் வழங்கினர்.

இக்கூட்டத்தில் திருப்பத்தூர் வட்டத்திற்குட்பட்ட அரசு இ-சேவை மைய உரிமையாளர்கள் பலர் கலந்து கொண்டனர். பொதுமக்கள் அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் சான்றிதழ்கள் தொடர்பாக சமர்ப்பிக்கும் விண்ணப்பங்கள் எவ்வித பிழைகளும் இன்றி பதிவேற்றம் செய்யப்பட வேண்டும் என்றும், தேவையான ஆவணங்கள் முழுமையாக சரிபார்க்கப்பட்ட பின்னரே விண்ணப்பங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.

குறிப்பாக, பெயர், முகவரி, ஆதார் எண், குடும்ப அட்டை விவரங்கள், வருமானம் மற்றும் பிற விவரங்கள் சரியானவையாக உள்ளனவா என்பதை கவனமாக ஆய்வு செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. தவறான தகவல்கள் அல்லது முழுமையற்ற ஆவணங்களுடன் பதிவேற்றப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவதுடன், பொதுமக்கள் தேவையற்ற சிரமங்களையும் காலதாமதத்தையும் எதிர்கொள்ள நேரிடும் என்பதால், மிகுந்த பொறுப்புணர்வுடன் செயல்படுமாறு இ-சேவை மைய உரிமையாளர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.

மேலும், அரசின் மின்னணு சேவைகள் பொதுமக்களுக்கு எளிதாகவும் விரைவாகவும் சென்றடைவதற்காக, சேவை மையங்களில் தரமான சேவையை வழங்குதல், பொதுமக்களிடம் மரியாதையுடன் நடந்து கொள்ளுதல், சேவை கட்டணங்களை அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு வசூலித்தல் மற்றும் விண்ணப்பங்களின் நிலை குறித்து உரிய விளக்கங்களை வழங்குதல் போன்ற அம்சங்களிலும் ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

அரசு இ-சேவை மையங்கள் பொதுமக்களுக்கும் அரசுக்கும் இடையேயான முக்கிய இணைப்புப் பாலமாக விளங்கி வருவதால், விண்ணப்பங்களை பிழையின்றி பதிவேற்றம் செய்து, பொதுமக்கள் குறித்த காலத்திற்குள் அரசு சேவைகளைப் பெறுவதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று வட்டாட்சியர் திரு. நவநீதம் அவர்கள் கேட்டுக் கொண்டார்.