அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் ஈடுபடவுள்ள களப்பயிற்சியாளர்கள் 22 நபர்களுக்கு 11.06.2026 முதல் 13.06.2026 வரையிலான மூன்று நாட்கள் பயிற்சி வகுப்பினை மாவட்ட ஆட்சித்தலைவர் ந.மிருணாளினி, தொடங்கி வைத்தார்.

மக்கள் தொகை கணக்கெடுப்பு இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. இணையதளத்தின் மூலம் முதல்முறையாக டிஜிட்டல் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட உள்ளது. அரியலூர் மாவட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு முதல் பணியான வீட்டுப்பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பு வருகிற ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை முப்பது நாட்களுக்கு மேற்கொள்ளப்படவுள்ளது. மக்கள் தொகை சுய கணக்கெடுப்பு (Self enumerator) அடுத்த மாதம் ஜூலை 17ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை மேற்கொள்ளப்பட உள்ளது.

எனவே வீட்டுப்பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பு பணிகள் தொடர்பாக கணக்கெடுப்பாளர்கள், மேற்பார்வையாளர்களுக்கு பயிற்சி அளிக்க ஏதுவாக ஆசிரியர்கள் மற்றும் புள்ளியில் துறையை சேர்ந்த 22 அலுவலர்கள் களப்பயிற்றுனர்களாக மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் மக்கள் தொகை இயக்குனரக அலுவலர் மற்றும் மாவட்ட புள்ளியியல் துறை துணை இயக்குனர் ஆகியோர் முதன்மை பயிற்றுனர்களாக சென்னை மக்கள் தொகை இயக்குனரகத்தால் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.