தமிழக அரசால் உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்திற்கு விரிவான அரசாணை வெளியிட தமிழக அரசை தமிழ்நாடு அரசு அனைத்து துறை பணியாளர்கள் சங்கம் வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றம்!வேலூர், ஏப். 13-தமிழ்நாடு அரசு அனைத்து துறை பணியாளர்கள் சங்கத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட தலைவர் தி .கா.ரமேஷ் தலைமையில், மாநில கௌரவ தலைவர் சி. ராஜவேலு முன்னிலையில் நடந்தது. இந்த மாவட்ட செயற்குழு கூட்டத்தில் மாவட்ட கௌரவ தலைவர் தாண்டவமூர்த்தி, மாவட்ட நிர்வாகிகள் பாலகிருஷ்ணன், முனுசாமி, நந்தகுமார், ரவி, மணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மதன்குமார் வரவேற்றார். பின்னர் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் மத்திய அரசு பணியாளர்களுக்கு 1.1.2026 முதல் 8வது ஊதியக்குழு அமைத்து அதன் பலன்களை பணியாளர்களுக்கு வழங்க உள்ளது. அதுபோல தமிழக அரசும் உடனடியாக 8வது நிதி குழு அமைத்து 1.1.2026 முதல் பணியாளர்களுக்கு பலன்களை வழங்க தமிழக அரசை இந்த செயற்குழு வேண்டுகிறது. கடந்த 2006 ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசு அனைத்து துறை பணியாளர்கள் சங்கத்தால் பணி நிரந்தரம் செய்யப்பட்ட பேரூராட்சி பணியாளர்களுக்கு தற்போது பழைய ஓய்வூதியம் பற்றிய ஒரு அரசாணை ஒன்று வந்துள்ளது. ஆனால் அது அனைத்து பணியாளர்களுக்கும் பழைய ஓய்வூதியம் வழங்க தமிழக அரசை இந்த செயற்குழு வேண்டிக் கேட்டுக் கொள்கிறது. அரசு தோட்டக்கலை துறையை விவசாயத்துறையுடன் இணைத்ததால் அவர்களுக்கு கூலி உயர்வு, பணி நிரந்தரம், ஓய்வூதிய பயன்கள் பெற முடியாத நிலையில் உள்ளனர். இது பற்றி அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக அனைத்து பயன்களும் வழங்க வேண்டும் என்று இந்த செயற்குழு கேட்டுக் கொள்கிறது. தமிழக அரசால் உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்திற்கு விரிவான அரசாணை வெளியிட தமிழக அரசை இந்த செயற்குழு வேண்டுகிறது. 2006 ஆம் ஆண்டில் பணி நிரந்தரம் செய்யப்பட்ட பேரூராட்சி பணியாளர்களுக்கு பழைய ஓய்வூதியம் வழங்கும்போது அதே பேரூராட்சியில் 2006 ஆம் ஆண்டு முதல் பணி அமர்த்தப்பட்ட வரித்தண்டலர்கள் மற்றும் இளநிலை உதவியாளர்களுக்கும் இந்த பழைய ஓய்வூதியம் அளிக்க இந்த செயற்குழு வேண்டுகிறது. தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 4 லட்சம் பணியிடங்களை நிரப்ப இந்த செயற்குழு வேண்டுகிறது. காலி பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்களை நியமிப்பதை இந்த செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இறுதியாக மாவட்டத் துணைத் தலைவர் ஜெயபால் நன்றி கூறினார். இதை தொடர்ந்து மாநில செயற்குழுவில் கலந்து கொண்ட அனைவருக்கும் அறுசுவை மதிய உணவு பரிமாறப்பட்டது குறிப்பிடத்தக்கது.