காட்பாடியில் மது போதையில் உணவகத்தை அடித்து நொறுக்கிய நேபாளத் தொழிலாளர்கள்: கைது செய்யாமல் தப்பி ஓடிய போலீஸார்!வேலூர், மே 3-வேலூர் மாவட்டம், காட்பாடி கல்புதூர் பகுதியில் இயங்கி வரும் பிரபல உணவகத்தை, அங்கேயே பணிபுரியும் நேபாள நாட்டைச் சேர்ந்த தொழிலாளர்கள் அடித்து நொறுக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.வேலூர் மாவட்டம், காட்பாடி கல்புதூர் பகுதியில் முரளி என்பவருக்குச் சொந்தமான ‘MRM பாஸ்புட் கடை இயங்கி வருகிறது. இந்தக் கடையில் நேபாள நாட்டைச் சேர்ந்த பரத், வாஞ்சி, சோட்டு ஆகிய மூன்று பேர் தொழிலாளர்களாகப் பணியாற்றி வருகின்றனர்.நேற்று முன்தினம் (மே 1) தொழிலாளர் தினத்தை முன்னிட்டு கடைக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மது அருந்திவிட்டு போதையில் கடைக்கு வந்த அந்த மூன்று தொழிலாளர்களும்அங்கிருந்த தட்டுகள், சமையல் உபகரணங்கள் மற்றும் கண்ணாடிப் பொருட்களை சரமாரியாக அடித்து நொறுக்கி அட்டகாசம் செய்துள்ளனர்.இந்தத் தாக்குதலில் கடையில் இருந்த சுமார் ரூ. 50,000 மதிப்பிலான பொருட்கள் முழுமையாகச் சேதமடைந்தன. கடையில் பொருட்களை அடித்து நொறுக்கும் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் மற்றும் பொதுமக்கள் விரைந்து வந்து ரகளையில் ஈடுபட்ட மூன்று பேரையும் மடக்கிப் பிடித்து காட்பாடி காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.இது குறித்து தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், பிடிபட்டவர்களிடம் விசாரணை நடத்தினர். அவர்கள் நேபாள நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று தெரிந்தவுடன், அவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்காமல் போலீசார் மெத்தனமாகச் செயல்பட்டு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அங்கிருந்து தப்பியோடிச் சென்றதாகக் கூறப்படுகிறது. போலீசாரின் இந்த அணுகுமுறை பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.வெளிநாட்டிலிருந்து பிழைப்பு தேடி வந்து, தங்களுக்கு வாழ்வாதாரம் கொடுத்த கடையையே அடித்து நொறுக்கிய செயல் கண்டிக்கத்தக்கது. அவர்கள் வெளிநாட்டவர்கள் என்பதற்காகத் தப்பிக்க விடக்கூடாது. உரிய விசாரணை நடத்தி, சேதத்திற்குத் தக்க இழப்பீடு பெற்றுத் தருவதோடு அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வேலூர் மாவட்ட காவல்துறை என்ன நடவடிக்கை எடுக்கிறது என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

.

கோவை: தொழிலாளர் தினத்தை முன்னிட்டு கோவையில் செஞ்சட்டை பேரணி நடைபெற்றது இதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். மே ஒன்றாம் தேதி வருடம் தோறும் தொழிலாளர் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன் படி இன்று தொழிலாளர் தினம் கடைபிடிக்கப்பட்டது காலை முதல் பல்வேறு பகுதிகளில் தொழிலாளர் தினமானது கொண்டாடப்பட்டு வருகிறது. பல்வேறு பகுதிகளில் தொழிலாளர் தினம் கொண்டாடப்படுவதன் ஒரு பகுதியாக கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தொழிலாளர் அமைப்பின் சார்பில் செஞ்சட்டை பேரணியானது தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக கோவை மாநகர் சித்தாபுதூர் பகுதியில் செஞ்சட்டை பேரணி நடைபெற்றது இதில் சிபிஐ, சிஐடியு ஏஐடியுசி தொழிற்சங்கத்தை சேர்ந்த 1000க்கும் மேற்பட்டோர் சிவப்பு நிற உடை அணிந்து செஞ்சட்டை பேரணி மேற்கொண்டனர். சித்தாபுதூர் பகுதியில் துவங்கிய இந்த பேரணி லட்சுமி மேல் பகுதியில் நிறைவடைந்தது.

வேலூரில் ஆடுகள் திருட்டு: பரதராமி சந்தையில் விற்க முயன்ற இருவர் கைது!வேலூர்,மே 2-வேலூர் மாவட்டம், காட்பாடி பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவர் ஆடுகளை விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார். இந்நிலையில் இவரது ஆட்டு கொட்டையிலிருந்து ஆடுகள் அடிக்கடி திருடு போனது. இதையடுத்து விஜயகுமார் தனது ஆடுகள் எங்காவது விற்பனைக்கு கொண்டு வந்துள்ளார்களா? என்று ஒவ்வொரு சந்தையாக தேடிச் சென்றார். அப்போது பரதராமி சந்தைக்குச் சென்று பார்த்தபோது அங்கு அவரின் ஆடுகளை இரண்டு பேர் விற்பனைக்காக கட்டி வைத்திருந்ததை பார்த்தார். உடனே அங்கிருந்து காட்பாடி போலீசாருக்கு விஜயகுமார் தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்தார். இதையடுத்து காட்பாடி போலீசார் விரைந்து சென்று பரதராமி சந்தையில் விஜயகுமாருக்குச் சொந்தமான ஆடுகளை கடத்திச் சென்று விற்பனைக்கு தயார் நிலையில் வைத்திருந்த கோபி (23), சுரேஷ் (40) ஆகிய இரண்டு பேரையும் கைது செய்தனர். பின்னர் காட்பாடி காவல் நிலையத்திற்கு கொண்டு வந்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் விஜயகுமாருக்கு சொந்தமான ஆடுகளை திருடி விற்பனை செய்ததை ஒப்புக்கொண்டனர். இந்த ஆடுகளை திருடுவதற்காக பயன்படுத்தப்பட்ட காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து இவர்கள் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர் காட்பாடி போலீசார்.

காட்பாடி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் பணியாளருக்கு பணி நிறைவு: ஓய்வுபெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர் நலச்சங்கம் பாராட்டு!வேலூர், மே 2-காட்பாடி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் சமூக அறிவியல் பட்டதாரி ஆசிரியராக பணியாற்றி பணிநிறைவு பெற்ற ஆர்.ஜீவா, ஆய்வக உதவியாளராக பணிநிறைவு பெற்ற டி.மணி ஆகிய இருவருக்கும் பள்ளி வளாகத்தில் பாராட்டு விழா நடைபெற்றது.விழாவிற்கு பள்ளி தலைமையாசிரியை கோ.சரளா தலைமை தாங்கினார். பள்ளி உதவித்தலைமையாசிரியர் எம்.மாரிமுத்து வரவேற்று பேசினார். ஓய்வுபெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர் நலச்சங்க மாவட்ட தலைவர் முனைவர். செ.நா.ஜனார்த்தனன், அ.கலைச்செல்வன், உயர்நிலை உதவி தலைமையாசிரியர் பி.கணேசன், இடைநிலை உதவி தலைமையாசிரியை பி.ரோசலின் பொன்னி உள்ளிட்டோர் சால்வை அணிவித்து நினைவுப் பரிசு வழங்கி பாராட்டி பேசினர்.ஆசிரியர்கள் சுகந்தி, திலகலட்சுமி, எஸ்.வெங்கடேசன், நிவேதிதா, ஆகியோர் வாழ்த்தி பேசினர்.அறிவியல் ஆசிரியர் பி.பாலச்சந்தர் நன்றி கூறினார்.

தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தல் 2026 வேலூர் மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையத்தில் தபால் வாக்குகளை எண்ணும் பணியில் ஈடுபட உள்ள அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் வே.ரா. சுப்புலட்சுமி தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் நடந்தது. இப் பயிற்சியில் கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் மா. சிவசுப்பிரமணியன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் குணசேகரன் (பொது) ,பாஸ்கரன் (தேர்தல்), அருண் (நிலம்) தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மாறன் (காட்பாடி) ஏ. செந்தில்குமார் (வேலூர்), ஆர். குணசேகரன் (அணைக்கட்டு), எஸ். சரவணன் (கே. வி. குப்பம்), செல்வி எஸ். சுபலட்சுமி (குடியாத்தம்), தேர்தல் வட்டாட்சியர் ரமேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.