அவலூர்பேட்டை அடுத்த மங்களம் கிராமத்தில் தமிழகத்தில் 25 ஆண்டுகளாக புஞ்சை நிலத்தின்சாகுபடி பரப்பளவு 40 சதவீதமாக குறைந்தது: விவசாயிகள் சூரியனுக்கு படையலிட்டு போராட்டம் !

செய்யாறு, அக். 21 –
தமிழகத்தில் கடந்த 25 ஆண்டுகளாக புஞ்சை நிலத்தின் சாகுபடி பரப்பளவு 40 சதவீதமாக குறைந்ததை, கண்டிக்கும் வகையில் செய்யாறில் விவசாய சங்க பொறுப்பாளர்கள் சூரியனுக்கு படையலிட்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் புஞ்சை – நஞ்சை விளை நிலங்கள் தேவைக்கு அதிகளவில் உள்ளது என, புள்ளி விவரங்கள் கூறுகின்றன. ஆனால், நில உரிமையாளர்கள், விவசாயிகள், குத்தகைதாரர்கள் மேற்கண்ட நிலங்களில் தொடர்ந்து பயிர் செய்வதை படிப்படியாக குறைத்து விட்டனர். போதிய லாபம் இல்லை, நிலத்தடி நீர் வேகமாக குறைந்துவிட்டது, பருவ மழை பொய்த்துப் போகிறது, தமிழக அரசு விவசாயிகளைப் பற்றி கண்டு கொள்வதில்லை, என விவசாயிகள் தங்களது குறைகளை அடுக்கி வைக்கின்றனர்.
இதனால், தமிழகத்தில் கடந்த 25 ஆண்டுகளாக புஞ்சை நிலங்களின் சாகுபடி செய்யும் பரப்பளவு 100 சதவீதத்தில் இருந்து 40 சதவீதமாக குறைந்து விட்டது என, வேளாண்மை துறை அதிகாரிகளே அரசுக்கு புள்ளி விவரத்தை வழங்கி உள்ளனர்.
தமிழகத்தில் ஆட்சியாளர்கள் மாறி மாறி வந்தாலும், விவசாயம் படிப்படியாக தேய்ந்து கொண்டே வருவது தான் உண்மை. விவசாயிகள் பற்றி ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் கண்டு கொள்வதில்லை. இதை கண்டிக்கும் வகையில் செய்யாறு விவசாய சங்கத் தலைவர் வாக்கடை புருஷோத்தமன் தலைமையில் 50க்கும் மேற்பட்ட விவசாய சங்க பொறுப்பாளர்கள், விவசாயிகள், உறுப்பினர்கள் என, ஒன்றிணைந்து அவலூர்பேட்டை அடுத்த மங்களம் கிராமத்தில் உள்ள வேளாண்மை விரிவாக்க மைய நுழைவு வாயிலில் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விவசாயிகளாகிய எங்களை, சூரிய பகவானாகிய நீங்கள் தான் காப்பாற்ற வேண்டும் என கூறி சூரியனுக்கு படையலிட்டு வழிபட்டனர். இதனால் மங்களம் கிராமம் நேற்று பரபரப்புடன் காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.