புதுப்பாளையத்தில் ஆபத்தான நிலையில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி : அப்புறப்படுத்த வி .தி.லீடர்ஸ் பொறுப்பாளர்கள்செய்யாறு ஆர்.டி.ஓ.,விடம் மனு!

செய்யாறு, அக்.16 –
புதுப்பாளையம் ஊராட்சியில் ஆபத்தான நிலையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை அகற்றக் கோரி வி. தி. லீடர்ஸ் பொறுப்பாளர்கள் செய்யாறு செய்யாறு வருவாய் கோட்ட அலுவலர் சிவாவிடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளனர்.
செய்யாறு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்டது புதுப்பாளையம் ஊராட்சி. இங்கு கடந்த 40 ஆண்டுகளாக கிராம மக்களுக்கு குடிநீர் வழங்கி வந்த மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தற்போது பழுதடைந்த நிலையில் உள்ளது. சில ஆண்டுகளாக இந்த மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிக்கு தண்ணீர் ஏற்றுவது நிறுத்தப்பட்டது..
ஆபத்தான நிலையில் உள்ள இந்த தொட்டியை இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என, புதுப்பாளையம் கிராம மக்கள், பல முறை வெம்பாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு கொடுத்துள்ளனர். கிராம சபை கூட்டங்களிலும் தீர்மானமும் நிறைவேற்றப் பட்டுள்ளது. ஆனால், இது தொடர்பாக அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ள வில்லை.
இந்நிலையில் புதுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த வாலிபர்கள், செய்யாறு வி. தி. லீடர்ஸ் கட்சியின் பொறுப்பாளர் ஆ.சரவணன், சக்தி நாராயணன், வெங்கடேசன், அன்பு, அருள், அன்பழகன், கோவிந்தன் ஆகியோரை சந்தித்து மேற்கண்ட விவரங்களை தெரிவித்தனர்.
இதையடுத்து மேற்கண்ட பொறுப்பாளர்கள் ஒன்றிணைந்து செய்யாறு வருவாய் கோட்ட அலுவலர் சிவாவை சந்தித்து, புதுப்பாளையம் கிராமத்தில் ஆபத்தான நிலையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை அப்புறப்படுத்த வேண்டும் என, புகார் மனுவை கொடுத்தனர். மனுவைப் பெற்றுக் கொண்ட வருவாய் கோட்டாட்சியர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.