அரியலூர் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், உணவுப் பாதுகாப்புத் துறையின் சார்பில் சுகாதாரமான மற்றும் தரமான உணவுப்பொருட்கள் பொதுமக்களுக்கு தொடர்ந்து வழங்கப்படுவதை உறுதிப்படுத்துவது தொடர்பான ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ந.மிருணாளினி, தலைமையில் இன்று (31/07/2026) நடைபெற்றது.

பின்னர், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:

தமிழ்நாடு அரசின் உத்தரவிற்கிணங்க அரியலூர் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு பாதுகாப்பான, தரமான மற்றும் சுகாதாரமான உணவுப் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்யும் நோக்கில் பல்வேறு முன்னெடுப்புகள், ஆய்வுகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்றையதினம் உணவுப் பாதுகாப்பு தொடர்பான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்டம் முழுவதும் மேற்கொள்ளப்பட்ட உணவுப் பாதுகாப்பு ஆய்வு குறித்தும், உணவுப்பொருள் தொடர்பாக பெறப்பட்ட புகார்கள், அவற்றின் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் எதிர்கால கண்காணிப்பு பணிகள் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும், அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வு நடவடிக்கைகள், காலை உணவுத் திட்டம் மற்றும் மதிய உணவுத் திட்டத்தின் உணவுப்பொருட்கள் தரம் குறித்தும் விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.