மேட்டுப்பாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கான அறிமுகப் பயிற்சி நிறைவு விழா

மேட்டுப்பாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்காக நடைபெற்ற ஒருவார கால அறிமுகப் பயிற்சி வகுப்புகளின் நிறைவு விழா புதன்கிழமை நடைபெற்றது.
கணினி அறிவியல் துறை சார்பில் நடைபெற்ற முற்பகல் அமர்வில், “நான் யார்?” என்ற தலைப்பில் உளவியல் வழிகாட்டுதல் மற்றும் மனநல ஆலோசனைப் பயிற்சி வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு முனைவர் எஸ். சசிகலா தேவி வரவேற்புரையாற்றினார். கல்லூரி பொறுப்பு முதல்வர் முனைவர் G.A. ஜெயசங்கர் தலைமை வகித்து மாணவர்களை வாழ்த்திப் பேசினார்.
சிறப்பு விருந்தினராக போதி அகாடமிக் கன்சல்டிங் நிறுவனத்தின் நிறுவனரும் முதன்மைச் செயல் அதிகாரியுமான மகேஷ் துளசி கலந்து கொண்டு, மாணவர்கள் தங்களின் தனித்திறமைகளை கண்டறிவது, மனஅழுத்தங்களை சமாளிப்பது, நேர்மறை சிந்தனையுடன் இலக்குகளை நோக்கி முன்னேறுவது குறித்து உளவியல் ஆலோசனைகளையும் நடைமுறைப் பயிற்சிகளையும் வழங்கினார். கணினி அறிவியல் துறை கௌரவ விரிவுரையாளர் எம். விக்னேஸ்வரன் நன்றியுரை வழங்கினார்.
மதியத்திற்குப் பிறகு நடைபெற்ற அமர்வில் கல்லூரியில் செயல்பட்டு வரும் பல்வேறு மாணவர் அமைப்புகளின் செயல்பாடுகள் குறித்து பேராசிரியர்கள் விளக்கமளித்தனர்.
முனைவர் மோ. செந்தில்குமார் நுண்கலை மற்றும் தமிழ் இலக்கிய மன்றங்களின் செயல்பாடுகள் குறித்து எடுத்துரைத்தார். கல்லூரி நூலகர் பொ. ராஜ்குமார் “நூலகம் ஒரு போதிமரம்” என்ற தலைப்பில் பேசி, வாசிப்புப் பழக்கத்தின் அவசியம் மற்றும் நூலகப் பயன்பாட்டின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
முனைவர் சி. பாண்டியராஜன் இளைஞர் செஞ்சிலுவைச் சங்கத்தின் சமூகப் பணிகள் மற்றும் மாணவர்களின் நற்பண்பு மேம்பாடு குறித்து விளக்கமளித்தார். முனைவர் ஜே. அபிராமி பெண்கள் மேம்பாட்டுக் குழுவின் செயல்பாடுகள், மாணவிகளின் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் குறித்து பேசினார். முனைவர் T. பபிதா மாணவர் வழிகாட்டுதல் மையத்தின் சேவைகள் மற்றும் மனநல ஆலோசனையின் அவசியம் குறித்து எடுத்துரைத்தார்.
விழாவின் நிறைவில் ஒருவார கால அறிமுகப் பயிற்சி குறித்து மாணவர்களிடமிருந்து கருத்துகள் பெறப்பட்டன. கணினி அறிவியல் துறை கௌரவ விரிவுரையாளர் முனைவர் கே. கனிமொழி நன்றி கூறினார். நாட்டுப்பண்ணுடன் நிகழ்ச்சி நிறைவடைந்தது.