
நிதியமைச்சரின் உத்தரவுக்கு மாறாக பணித்திட்டம்: தணிக்கையாளர்கள் ஜூலை 1 முதல் ஒட்டுமொத்த விடுப்பு போராட்டம்!
வேலூர், ஜூன் 30-
நிதித் துறையின் ஓர் அங்கமாக செயல்படும் உள்ளாட்சி நிதித் தணிக்கைத் துறை மற்றும் மாநில அரசு தணிக்கைத் துறைகளில் CAMS எனப்படும் ஆன்லைன் பணித்திட்டம் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அமலுக்கு வந்தது. இதன்படி தணிக்கையாளர்கள் யாரும் தாங்கள் பணியமர்த்தப்பட்ட இடத்தில் பணிசெய்யக் கூடாது என்று தலைமைத் தணிக்கை இயக்குநர் உத்தரவிட்டார்.
இதனால் தாங்கள் பணியமர்த்தப்பட்ட இடங்களிலிருந்து 100 முதல் 150 கி.மீ.,வரை தினசரி தணிக்கைப் பணிக்கு சென்று வர நேர்ந்த தணிக்கையாளர்கள் குறிப்பாக பெண் தணிக்கையாளர்கள் அப்போது இருந்த திமுக அரசிடம் முறையிட்டனர். ஆனாலும் தீர்வு கிடைக்கவில்லை. பிறகு தங்களது எதிர்ப்பை பதிவு செய்யும் விதமாக கருப்பு பட்டை அணிந்து பணி செய்யும் போராட்டம் நடத்தினர். அப்போதும் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனிடையே சட்டமன்றத் தேர்தல் முடிந்து தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு தற்போதைய நிதியமைச்சர் மாண்புமிகு மரியவில்சனிடம் சென்று இருப்பிடத்துக்கு அருகிலேயே தணிக்கைப் பணி வழங்கவேண்டும் என்று பெண்கள் பலரும் கோரிக்கை வைத்தனர். உடனடியாக நிதித்துறை செயலாளர உள்ளிட்ட அனைத்து தணிக்கைத் துறை இயக்குநர்கள் கூட்டத்தை நடத்திய நிதியமைச்சர் பெண் தணிக்கையாளர்களுக்கு இருப்பிடத்திலிருந்து அதிகபட்சம் 50 கி.மீ.,க்கு உள்ளும் மற்ற தணிக்கையாளர்களுக்கு 50 முதல் 100 கி.மீ.,க்குள் பணித்திட்டம் வகுத்திடவும் உத்தரவிட்டார்.
ஆனால் தற்போது வெளியிடப்பட்டுள்ள ஜூலை – செப்டம்பர் காலாண்டு பணித்திட்டத்தில் நிதியமைச்சரின் உத்தரவுகளை மீறி பெண் தணிக்கையாளர்களுக்கு 100 கி.மீ.,தொலைவில் தணிக்கைப் பணி ஒதுக்கீடு வரப் பெற்றுள்ளதால் தலைமைத் தணிக்கை இயக்குநர் மற்றும் சிறப்பு இயக்குநர் மீது கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
தலைமைத் தணிக்கை இயக்குநரின் பணித்திட்டத்தால் ஆண்களும் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில் அவர்கள் அனைவரும் இன்று (29ம் தேதி) வேலூரில் கூடி வசிப்பிடங்களுக்கு அருகில் பணித்திட்டம் வேண்டும் என்று கோரிக்கை மனுவினை நிதியமைச்சர், நிதித்துறை செயலாளர் மற்றும் இயக்குநருக்கு
அனுப்பியதோடு, திருத்திய பணித்திட்டம் வரும் வரை வேலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்ட தணிக்கையாளர்கள் அனைவரும் தணிக்கைப் பணி செய்யாமல் ஒட்டுமொத்தமாக ஜூலை 1 முதல் விடுப்பில் செல்ல முடிவெடுத்துள்ளனர். இத்தகவலை தணிக்கைத் துறை ஊழியர் சங்கத்தினர் தெரிவித்தனர். இதனால் திடீர் பரபரப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தவெக அமைச்சர் இதற்கு என்ன நடவடிக்கை எடுக்கிறார் என்றும் அரசு தணிக்கை துறை ஊழியர்களை காப்பாற்ற முன் வருவாரா? என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.










Leave a Reply