மேட்டுப்பாளையம் அரசு கலைக் கல்லூரியில் இரண்டாம் கட்ட மாணவர் சேர்க்கை கலந்தாய்வு 18ம் தேதி தொடக்கம்

மேட்டுப்பாளையம், ஜூன் 16:
மேட்டுப்பாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2026–2027 கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை பணிகள் தமிழ்நாடு உயர்கல்வித்துறையின் வழிகாட்டுதலின்படி தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இக்கல்லூரியில் ஆங்கில இலக்கியம், பொருளியல், வணிகவியல், வணிகவியல் கணினிப் பயன்பாட்டியல், கணிதம், இயற்பியல், வேதியியல், கணினி அறிவியல் மற்றும் சுற்றுலா மற்றும் பயண மேலாண்மை உள்ளிட்ட ஒன்பது இளநிலைப் பட்டப்படிப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இணையவழியில் விண்ணப்பித்த இரண்டாம் கட்ட மாணவர்களின் விவரங்கள் இன்று (16.06.2026) பெறப்பட்டு, தரவரிசைப் பட்டியல் கல்லூரி அறிவிப்புப் பலகையிலும் கல்லூரி இணையதளத்திலும் வெளியிடப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, மேற்கண்ட பாடப்பிரிவுகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு வரும் ஜூன் 18ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது. விண்ணப்பதாரர்களுக்கு வாட்ஸ்ஆப், மின்னஞ்சல் மற்றும் அலைபேசி வாயிலாக அழைப்புக் கடிதங்கள் மற்றும் கலந்தாய்வு தொடர்பான தகவல்கள் அனுப்பப்பட்டு வருகின்றன.
மாணவர்கள் தங்களது அனைத்து அசல் கல்விச் சான்றிதழ்களுடன் கலந்தாய்வில் பங்கேற்று, தகுதி மற்றும் இனச்சுழற்சி அடிப்படையில் காலியாக உள்ள இடங்களில் சேர்க்கை பெற்றுக்கொள்ளுமாறு கல்லூரி நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும், அடுத்தடுத்த நாட்களில் நடைபெறும் கலந்தாய்வுகளிலும் காலியாக உள்ள இடங்களின் அடிப்படையில் தகுதியான மாணவர்களுக்கு சேர்க்கை வழங்கப்படும். முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் ஜூலை 1ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளதாக கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார்