வாணியம்பாடி அருகே 75 ஆண்டுகளாக மின்சாரம் இல்லாமல் வாழும் கிராம மக்கள்; முதல்வர் விஜய்க்கு கோரிக்கை!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி தொகுதிக்குட்பட்ட ஆண்டியப்பனூர் ஊராட்சியின் ஐங்கொல்லை மலை அடிவார கிராமத்தில் 20-க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் கடந்த 50 ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். ஜவ்வாது மலைப்பகுதியில் இருந்து குடிபெயர்ந்து வந்த இவர்கள், சுமார் 25 ஏக்கர் நிலங்களை வாங்கி விவசாயம் செய்து வாழ்ந்து வருகின்றனர். ஆனால், இன்றுவரை இக்கிராமத்திற்கு மின்சார வசதி வழங்கப்படாததால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மாணவர்கள் தினமும் 5 கிலோமீட்டர் தூரம் வனப்பகுதி வழியாக 2 ஆறுகளை கடந்து பள்ளிக்கு சென்று வருகின்றனர். மழைக்காலங்களில் ஆற்றில் வெள்ளம் வந்தால் பள்ளிக்குச் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. மின்சாரம் இல்லாததால் மகளிர் சுயஉதவிக் குழு மூலம் வழங்கப்பட்ட பேட்டரி விளக்குகளை பயன்படுத்தி மாணவர்கள் படித்து வருகின்றனர். ஒரு மணி நேரம் மட்டுமே ஒளிரும் அந்த விளக்குகளின் உதவியுடன் சமீபத்தில் 10ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் தேர்ச்சி பெற்றுள்ளார். இருப்பினும், தற்போதைய மாணவர்கள் இரவு நேரங்களில் படிப்பதில் பெரும் சிரமம் இருப்பதாக பெற்றோர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். விவசாயத்திற்கும் மின்சாரம் இல்லாததால் டீசல் மோட்டார்களை மட்டுமே பயன்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. டீசல் விலை உயர்வால் விவசாய செலவுகள் அதிகரித்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கிராம மக்கள் கூறுகின்றனர். கடந்த 2005-06ஆம் ஆண்டு ஏற்பட்ட தீ விபத்தில் பல வீடுகள் எரிந்ததை தொடர்ந்து, இந்திரா குடியிருப்பு திட்டத்தின் கீழ் அரசு 10-க்கும் மேற்பட்ட வீடுகளை கட்டிக் கொடுத்தது. ஆனால் அந்த வீடுகளுக்கும் இதுவரை மின்சார இணைப்பு வழங்கப்படவில்லை. சில ஆண்டுகளுக்கு முன்பு பொருத்தப்பட்ட சோலார் மின் விளக்குகளும் தற்போது பழுதடைந்த நிலையில் உள்ளன. வனத்துறைக்கு சொந்தமான பகுதியில் சுமார் 2 கி.மீ தூரம் மின் கம்பங்களை அமைக்க வேண்டியிருப்பதால், மத்திய அரசின் அனுமதி கிடைக்காத காரணத்தால் மின்சார வசதி வழங்கப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தேர்தல் நேரங்களில் மட்டும் அரசியல்வாதிகள் வந்து வாக்குறுதிகள் அளித்து செல்வதாகவும், பல ஆண்டுகளாக தங்களது கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்கவில்லை என்றும் வேதனை தெரிவிக்கும் ஐங்கொல்லை கிராம மக்கள், தங்கள் கிராமத்திற்கு உடனடியாக மின்சார வசதி ஏற்படுத்தித் தருமாறு புதிய முதல்வருக்கு உருக்கமான கோரிக்கை விடுத்துள்ளனர்.