அரசு நிலத்தை தனியாருக்கு தாரை வார்த்த அணைக்கட்டு முன்னாள் வட்டாட்சியர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப் பதிவு!வேலூர்,ஜூன் 2-வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுகா, வேப்பங்குப்பம் பகுதியில் சுமார் ரூ.20 லட்சம் மதிப்பிலான 1700 சதுர அடி இடத்தை கடந்த 2023/24 ஆம் ஆண்டில் தனிநபர் ஒருவரின் பெயரில் அப்போதைய அணைக்கட்டு வட்டாட்சியராக இருந்த வேண்டா, வேப்பங்குப்பம் கிராம நிர்வாக அலுவலர் சுரேஷ் ஆகியோர் பட்டா வழங்கியுள்ளனர்.இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் அரசு நிலத்தை தனிநபர் ஒருவருக்கு முறைகேடாக பட்டா வழங்கியது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து வட்டாட்சியர் வேண்டா, கிராம நிர்வாக அலுவலர் சுரேஷ் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து லஞ்ச ஒழிப்புதுறை போலீசார் விசாரித்து வருகின்றனர் .இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டதிலிருந்து வட்டாட்சியர் வேண்டா தற்போது மாவட்ட வருவாய் அலுவலர் அலுவலகத்தில் நில எடுப்பு பிரிவில் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கூறியதாவது: அணைக்கட்டு அடுத்த வேப்பங்குப்பம் கிராமத்தில் 1700 சதுர அடி இடத்தை போலீஸ் குடியிருப்பு கட்ட ஊராட்சி மன்ற தலைவர் சுகன்யாவின் கணவர் உமாபதி என்பவர் கடந்த 2023 ஆம் ஆண்டு பட்டா கேட்டு விண்ணப்பித்துள்ளார். இதை தொடர்ந்து கடந்த 2023 ஆம் ஆண்டு நா.கா.எண்: A1/2521 /2023ன் படி மேற்கண்ட சர்வே எண்களில் இருந்து சர்வே எண்கள் 130/ 3B மற்றும் 130/ 93B என்ற அங்கீகரிக்கப்படாத உட்பிரிவுகளை உருவாக்கி உமாபதி என்பவருக்கு சுமார் ரூ. 20 லட்சம் மதிப்பிலான 1700 சதுர அடிக்கு நத்தம் பட்டா வழங்கப்பட்டது. முதல் கட்ட விசாரணையில் வழங்கப்பட்ட பட்டாவிற்கு ஒரு தனி கோப்பு எண்ணை உருவாக்கி கிராம நிர்வாக அலுவலக பதிவேடுகளில் நத்தம் நிலவரித் திட்ட தூய அடங்கல் பதிவேடு மற்றும் களப்பதிவேட்டில் பதிவுகளை செய்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. இந்நிலையில் இது குறித்து வேலூர் கோட்டாட்சியர் விசாரணை நடத்தி கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வட்டாட்சியர் வேண்டா வழங்கிய பட்டாவை ரத்து செய்து உத்தரவிட்டார். மேலும் உமாபதி இலவச பட்டா பெற தகுதியற்றவர் என்பதும், அணைக்கட்டு வட்டாட்சியர் வேண்டா, கிராம நிர்வாக அலுவலர் சுரேஷ் ஆகியோர் பதவியை தவறாக பயன்படுத்தி தனிநபருக்கு அரசு நிலம் தொடர்பாக பட்டா வழங்கியது தெள்ளத் தெளிவாக தெரியவந்துள்ளது. இதையடுத்து வட்டாட்சியர் வேண்டா, கிராம நிர்வாக அலுவலர் சுரேஷ் ஆகியோர் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறோம். இவ்வாறு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தெரிவித்துள்ளனர். இது குறித்து சமூக ஆர்வலர் ஒருவர் கூறும்போது, அணைக்கட்டு வட்டாட்சியராக இருந்தபோது அப்போதைய திமுக ஆளுங்கட்சி முக்கிய பிரமுகர்களுடன் சேர்ந்து கொண்டு இது போன்று பல்வேறு முறைகேடுகளில் வட்டாட்சியர் வேண்டா ஈடுபட்டு வந்ததாகவும் தெரிவித்தார். இதனால் அவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்து இருப்பதாகவும், எனவே அவரது அசையும், அசையா சொத்துக்கள் மற்றும் இவரது ரத்த உறவு சம்பந்தப்பட்டவர்களின் ஆவணங்களின் அடிப்படையில் விசாரணையை துரிதப்படுத்தினால் பல்வேறு முறைகேடுகள் வெட்ட வெளிச்சத்துக்கு வரும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள். லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இதையும் கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர் தெரிவித்தார். குறிப்பாக அணைக்கட்டு தொகுதி எம்எல்ஏவாக இருந்த நந்தகுமார் வட்டாட்சியர் வேண்டாவுடன் சேர்ந்து கொண்டு பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக தெரியவந்துள்ளது என்று பொதுமக்கள் தரப்பில் கூறப்படுகிறது. இவ்வாறு பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்ட வட்டாட்சியர் வேண்டா மற்றும் கிராம நிர்வாக அலுவலர் சுரேஷ் ஆகியோர் மீது விரைந்து நடவடிக்கை எடுத்து அவர்களுக்கு தண்டனையை பெற்றுத் தர வேண்டும் என்று ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளனர். இது ஒன்றுதான் என்று இல்லை இது போன்று பல்வேறு முறைகேடுகள் அணைக்கட்டு வட்டாட்சியராக இருந்தபோது வேண்டா செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அரசு அதிகாரிகள் அரசியல்வாதிகளுடன் சேர்ந்து கொண்டு இப்படி ஆட்டம் போட்டால் இதுதான் தண்டனை என்பது அனைவருக்கும் உணர்த்தும் வகையில் வேண்டாவின் மீது அரசு எடுக்கும் நடவடிக்கை மற்றவர்களுக்கு ஒரு பாடமாக அமைய வேண்டும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள் மற்றும் அணைக்கட்டு தொகுதி பொதுமக்கள். வேண்டா மீது அரசு எடுக்கும் நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.