புதிய குடிநீர் கிணறும் – மோட்டார் அறையும் தயார்!

மின் இணைப்பு வழங்க மாவட்ட நிர்வாகம்
உத்தரவையிட

மேட்டுப்பாளையம் கிராம மக்கள் கோரிக்கை !

காஞ்சிபுரம், மே 14 –
புதிய கிணறும் வெட்டப்பட்டு – மீன் மோட்டார் அறையும் கட்டப்பட்டு தயார் நிலையில் உள்ளதால், மின் இணைப்பு வழங்க மேட்டுப்பாளையம் கிராம மக்கள், மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கையை முன் வைத்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் அடுத்துள்ளது
கம்மாளப்பூண்டி ஊராட்சி. இங்கு மேட்டுப்பாளையம், குறிஞ்சி காலனி, மேட்டுக் காலனி, கன்னிகாபுரம் ஆகிய கிராமங்கள் உள்ளன. மேட்டுப்பாளையம் கிராம மக்களுக்கு கடந்த சில ஆண்டுகளாக குடிநீர் பற்றாக்குறை நிலவி வந்தது.

இந்த கிராமத்திற்கு கடந்த நிதியாண்டில் ரூ. 17 லட்சம் மதிப்பீட்டில், இங்குள்ள கிராம எல்லையில் புதிய குடிநீர் கிணறு தோண்டப்பட்டது. இந்த கிணற்றில் சுவையான தண்ணீரும் கிடைத்துள்ளது. இதன் அருகே மின் மோட்டார் இயக்கும் வகையில் அறையும் கட்டப்பட்டுள்ளன. ஊராட்சி நிர்வாகம் சார்பில் தான் மின் இணைப்பு வழங்க வேண்டும். ஆனால், கம்மாளப்பூண்டி ஊராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது.

மேட்டுப்பாளையம் கிராம மக்கள் கோடை வெயிலில் தேவையான குடிநீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர், தங்கள் கிராமத்தில் புதியதாக தோண்டப்பட்டுள்ள குடிநீர் கிணற்றுக்கு உடனடியாக மின் இணைப்பை பெற்றுத்தர
கம்மாளப்பூண்டி ஊராட்சிக்கு, உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என, மேட்டுப்பாளையம் கிராம மக்கள் கோரிக்கையை முன் வைத்துள்ளனர்..