ஒடுகத்தூர் வனப்பகுதியில் சமூக விரோதிகள் தீ வைப்பு:

9 மணி நேரத்திற்கும் மேல் தொடர்ந்து தீயை அணைக்க முடியாமல் எரிந்த பரிதாபம்!
வேலூர், ஏப்.25 –
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு அடுத்த ஒடுகத்தூர் அருகில் உள்ள கத்தாரிகுப்பம் வனப்பகுதியில் சமூகவிரோதிகள் சிலர் தீ வைத்து விட்டு சென்று விட்டனர். இதனால் வனப்பகுதியில் உள்ள மரங்கள், செடிகள் தீப்பற்றி எரியத் தொடங்கின. இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்தும், மரக்கிளைகளை உடைத்தும் தீயை அணைக்க முயற்சித்தனர். ஆனால் சுமார் 11 மணிக்கு பற்றிய எரியத் தொடங்கிய தீ 9 மணி நேரத்திற்கும் மேலாக இடைவிடாது எரிந்தது. இதனால் பல லட்சம் மதிப்புள்ள மரங்கள், செடிகள், மூலிகைகள் எரிந்து சாம்பலாயின. அதைத் தொடர்ந்து 13 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர் தீயணைப்பு துறை வீரர்கள். இந்த சம்பவம் ஒடுகத்தூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த தீ விபத்தில் இந்த வனப் பகுதியில் இருந்த விலங்குகள் ஏதாவது உயிரிழந்தனவா? என்பது பற்றிய விவரங்கள் இதுவரை கிடைக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இதுபோன்று வனப்பகுதியில் தீ வைத்த விஷமிகளை வனத்துறையினரும், காவல்துறையினரும் வலைவீசி தேடி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.