மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் நீலகிரி மலை ரயில் தனது 153வது ஆண்டு பாரம்பரிய தினத்தை முன்னிட்டு சிறப்பான கொண்டாட்டம் நடைபெற்றது.

கோவை மாவட்ட மேட்டுப்பாளையம்
இன்று காலை 7.10 மணிக்கு மேட்டுப்பாளையத்திலிருந்து ஊட்டிக்குப் புறப்படத் தயாராக இருந்த மலை ரயிலில், “உலக பாரம்பரிய தினம்” (World Heritage Day) முன்னிட்டு கேக் வெட்டி பயணிகளுக்கு வழங்கி விழா கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வை சேலம் கோட்டத்தின் மூத்த இயந்திர பொறியாளர் DME/SA த. கோகுல்வல்லுத்தோட்டம் தலைமையில் ரயில்வே அதிகாரிகள், பணியாளர்கள் மற்றும் ரயில் நிலைய காவல்துறையினர் இணைந்து நடத்தினர்.
இந்த நிகழ்ச்சியில் மலை ரயிலில் பயணம் செய்த உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு உற்சாகமாக பாரம்பரிய தினத்தை கொண்டாடினர். ரயில்வே நிர்வாகத்தின் இந்த முயற்சிக்கு பயணிகள் பாராட்டுகளைத் தெரிவித்தனர்.
பின்னர், மேட்டுப்பாளையத்திலிருந்து ஊட்டிக்குச் செல்லும் மலை ரயில், பயணிகள் மற்றும் பொதுமக்களின் கைதட்டலுடன் உற்சாகமாக புறப்பட்டுச் சென்றது.
நீலகிரி மலை ரயில் இந்தியாவின் மிகப் பழமையான மற்றும் பாரம்பரியமிக்க மலை ரயில் சேவைகளில் ஒன்றாகும். 19ஆம் நூற்றாண்டில் தொடங்கப்பட்ட இந்த ரயில், இயற்கை அழகுகளை நெருங்கிப் பார்வையிடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேட்டுப்பாளையம் முதல் ஊட்டி வரை சுமார் 46 கிலோமீட்டர் தூரம் செல்லும் இந்த ரயில், மலைப்பாங்கான பாதைகளில் 200-க்கும் மேற்பட்ட வளைவுகள், பல பாலங்கள் மற்றும் சுரங்கப்பாதைகள் வழியாக பயணிக்கிறது.
முக்கியமாக குன்னூர், அரவங்காடு, லவ்டேல் போன்ற நிலையங்கள் வழியாக செல்லும் இந்த மலை ரயில், நீலகிரி மலைத் தொடர்களின் இயற்கை வளங்களை வெளிப்படுத்தும் தனிச்சிறப்பைக் கொண்டது. பசுமை மலைகள், நீர்வீழ்ச்சிகள், ஆழமான பள்ளத்தாக்குகள், மூடுபனியில் மூழ்கிய காட்சிகள் ஆகியவை பயணிகளுக்கு மறக்கமுடியாத அனுபவத்தை வழங்குகின்றன.
மேலும், இந்த மலை ரயில் யுனெஸ்கோ உலக பாரம்பரியச் சின்னமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக உலகம் முழுவதும் இருந்து சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்து இந்த மலை ரயில் பயணத்தை அனுபவித்து வருகின்றனர்.
இந்த ஆண்டு பாரம்பரிய தின கொண்டாட்டம், மலை ரயிலின் வரலாற்றுப் பெருமையையும், சுற்றுலா முக்கியத்துவத்தையும் மீண்டும் ஒருமுறை வெளிப்படுத்தியுள்ளது.