மாநில மரமான 50 பனை மரங்கள் சட்டவிரோதமாக வெட்டப்பட்ட விவகாரம்: குறட்டை விடும் கே. வி. குப்பம் வட்டாட்சியர் பலராமன்!

வேலூர், ஏப். 4-
வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம் வட்டம், காளம்பட்டு கிராமம், சர்வே எண்கள் 295/2C மற்றும் 9 (சிட்டா இணைக்கப்பட்டுள்ளது) ஆகிய இடங்களை   M S ஓம்லேண்ட் பிராபர்ட்டீஸ் என்பவர் வாங்கியுள்ளதாகத் தெரிகிறது.
மேற்படி சர்வே எண்களின் பட்டா எண் 2215 ஆகும். இந்த நிலத்தில் சுமார் 50-க்கும் மேற்பட்ட பனை மரங்கள் இருந்து வந்துள்ளன. தற்பொழுது அந்த இடத்தில் வீட்டுமனைப் பிரிவுகளை (Real Estate layout) அமைக்கும் பொருட்டு, எவ்வித முன்னனுமதியும் பெறாமல் அங்கிருந்த பனை மரங்களை வெட்டிச் சாய்த்துள்ளனர்.
அரசு விதிமுறைகள் மற்றும் அரசாணைகள்:
அரசாணை (நிலை) எண் 238 (12-09-2025): வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை வெளியிட்டுள்ள இந்த அரசாணையின்படி, பனை மரங்களை வெட்ட வேண்டுமானால் மாவட்ட ஆட்சித் தலைவரின் (Collector) அனுமதி பெறுவது அவசியமாகும்.
மாநில மரம் அந்தஸ்து: அரசாணை நிலை எண் 746 (வனங்கள் மற்றும் மீன்வளத்துறை நாள் 28/06/1988) இன் படி, பனை மரம் தமிழ்நாட்டின் மாநில மரமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விசாரணை விபரங்கள்:
இது சம்பந்தமாக எமது நிருபர் காளம்பட்டு கிராம நிர்வாக அலுவலரை (VAO) தொடர்பு கொண்டு கேட்டபோது, “விசாரித்து விட்டுச் சொல்கிறேன்” என்றார். மீண்டும் தொடர்பு கொண்டபோது அவர் அழைப்பை ஏற்கவில்லை.
இதனைத் தொடர்ந்து கே.வி.குப்பம் வட்டாட்சியரிடம் (Tahsildar) தொலைபேசியில் முறையிட்டபோது, “விசாரணை செய்து சொல்கிறேன்” என்று குறுஞ்செய்தி அனுப்பினார். பின்னர் மீண்டும் தொடர்பு கொண்டபோது, “மேற்படி இடம் பட்டா இடம்” என்று மட்டும் பதில் அளித்துள்ளார். எனவே இது சம்பந்தமாக குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் அவர்களிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்ட பொழுது அவருடைய கைபேசி எண் 9442999120 அழைப்பை ஏற்கவில்லை குறுஞ்செய்தி அனுப்பப்பட்டது அதற்கும் பதில் இல்லை.

பனை மரம் வெட்டுவதற்கான நடைமுறை:
தவிர்க்க முடியாத சூழ்நிலையில் பனை மரங்களை வெட்ட நேரிட்டால், அதற்கான நெறிமுறைகளை அரசு வகுத்துள்ளது:
முதலில் ‘உழவன்’ செயலியில் விண்ணப்பிக்க வேண்டும்.
வட்டார அளவிலான குழு ஆய்வு செய்து, மாவட்ட குழுவிற்கு அறிக்கை அளிக்க வேண்டும்.
மாவட்ட அளவிலான குழு (மூன்று மாதங்களுக்கு ஒருமுறை கூடும்) அந்த அறிக்கையை ஆய்வு செய்து, ஒரு மாதத்திற்குள் இறுதி முடிவை அறிவிக்கும்.
இந்த சட்டப்பூர்வமான நடைமுறைகள் எதனையும் பின்பற்றாமல், காளம்பட்டு கிராமத்தில் சுய லாபத்திற்காக 50-க்கும் மேற்பட்ட பனை மரங்கள் வெட்டப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பனை மரங்களை வளர்ப்பதை ஊக்குவிக்கும் பொருட்டு ஒரு பனை மரத்தை வெட்டினால் அதன் ஈடாக பத்து பனைமரம் கன்றுகளை 1:10. என்ற விதத்தில் நட்டு வளர்ப்பது உறுதி செய்ய வேண்டும் .