வேலூரில் மனுஜோதி ஆசிரமம் சார்பில் ஆன்மிக விழிப்புணர்வுக் கூட்டம்!

வேலூர், அக்.14-
வேலூர் பில்டர்பெட் சாலை, ஆசிரியர் இல்லக் கோட்ட அரங்கில், மனுஜோதி ஆசிரமம் சார்பில் அக்டோபர் 13 அன்று ஆன்மிக விழிப்புணர்வுக் கூட்டம் நடைபெற்றது.
திருநெல்வேலி மாவட்டம், முக்கூடல் அருகே அமைந்துள்ள மனுஜோதி ஆசிரமத்தைப் பகவான் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா கடந்த 1963-ஆம் ஆண்டு நிறுவினார். “ஒன்றே குலம்! ஒருவனே தேவன்!” என்ற கொள்கையை உலகம் முழுவதும் பரப்பி வந்தார். இந்தக் கொள்கையைப் பின்பற்றும் பக்தர்கள், சாதி, மொழி, மதம், இனம், நிறம், தேசம் என எந்தப் பாகுபாடும் இன்றி மனுஜோதி ஆசிரமத்தில் ஒன்றுகூடி வருகின்றனர். இந்த ஆசிரமத்தின் கிளைகள் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும், மாவட்டங்களிலும் “ஸ்ரீ லஹரி கிருஷ்ணா ஸ்தோத்திர தியான நிலையம்” என்ற பெயரில் செயல்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, வேலூரில் மனுஜோதி ஆசிரம நிர்வாகி லியோ பால் லாறி ஏற்பாட்டில் ஆன்மிக விழிப்புணர்வுக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் பேசிய லியோ பால் லாறி, இன்றைய அவசரமான வாழ்க்கைச் சூழலில் இறைவனை மறக்காமல் வாழ்வதற்காக மக்களிடையே ஆன்மிக விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவதாகத் தெரிவித்தார். மேலும், இறைவன் அருளிய வேதங்கள் மற்றும் புராணங்களைப் படித்து, அவற்றின் கருத்துகளை உணர்ந்து, அதன்படி வாழ்க்கையில் நடக்க வேண்டும் என்றும் கூறினார். இதுவே இறைவனைப் பற்றிக்கொண்டு ஜீவன் முக்தி அடைவதற்கான எளிய வழி என்றும் அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், உலகில் மிகப்பெரிய அழிவுகள் ஏற்படப்போவதாகவும், அவற்றிலிருந்து தப்பிக்க இறுதிக்காலத்தில் அவதரித்த ஸ்ரீமன் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவிடம் சரணடைவதே ஒரே வழி என்றும் தனது ஆன்மிக நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.
“ஒன்றே குலம்! ஒருவனே தேவன்!” என்ற கொள்கையில் நம்பிக்கை கொண்ட அனைவரையும் மனுஜோதி ஆசிரமம் எப்போதும் வரவேற்கிறது என்றும் அவர் கூறினார். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் அறுசுவை மதிய உணவு வழங்கி உபசரிக்கப்பட்டது.