வேலூர் கன்டோன்மென்ட் ரயில் நிலையத்தில் ரூ.8.6 கோடியில் மேம்படுத்தப்பட்ட பணிகளைவரும் 11ஆம் தேதி பிரதமர் மோடி காணொளி காட்சி மூலம் திறந்து வைக்கிறார்!

வேலூர், அக். 7-
வேலூர் மாவட்டம், வேலூர் தாலுகா, இன்பேன்ட்ரி சாலை, வேலூர் கன்டோன்மென்ட் ரயில் நிலையம் அமிரித் பாரத் திட்டத்தின் கீழ் ரூ.8.6 கோடி செலவில் மேம்படுத்தப்பட்டுள்ளது. இதனை வரும் 11ஆம் தேதி சென்னை ஐ.ஐ.டி.யில் இருந்து காணொளி காட்சி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்க உள்ளதாக திருச்சி கோட்ட ரயில்வே பொது மேலாளர் பாலக் ராம் நேகி தெரிவித்தார்.
வேலூர் கன்டோன்மென்ட் ரயில் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள மேம்பாட்டுப் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த அவர், தொடக்க விழாவையொட்டி முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்பதற்கான முன்னேற்பாடுகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ரயில் நிலையத்தில் வேலூர் கோட்டையை நினைவூட்டும் வகையில் முகப்பு தோற்றம், வாகன நிறுத்துமிடம், நடைமேடை, மின்தூக்கி, காத்திருப்பு அறைகள் உள்ளிட்ட பயணிகளுக்கான பல்வேறு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும், விழுப்புரம் முதல் காட்பாடி வரை 4 ரயில்வே பாலங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், மேலும் 3 புதிய பாலங்கள் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
விழுப்புரம்–காட்பாடி வழித்தடத்தில் இரண்டு வழித்தடம் தேவை என கேள்வி எழுப்பியதில் அவர் பதில் அளித்ததாவது: தற்போது பயணிகள் மற்றும் ரயில்களின் இயக்கம் குறைவாக உள்ளதால், முழு திறன் பயன்படுத்தப்படாத நிலையில் இருப்பதாகவும், இதனால் தற்போதைக்கு இரட்டை ரயில் பாதைக்கான தேவை இல்லை என்றும் தெரிவித்தார். எதிர்காலத்தில் பயணிகள் வசதிகள் மற்றும் கூடுதல் ரயில்கள் அறிமுகப்படுத்தப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் அவர் கூறினார். இந்த நிகழ்வின்போது ரயில்வே துறையின் அதிகாரிகள், அலுவலர்கள் ,பணியாளர்கள் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.