பேரணாம்பட்டு அருகே சிறுவன் நரபலி கொடுக்கப்பட்டானா? போலீஸ் தீவிர விசாரணை!வேலூர்,ஜூன்16-வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அடுத்த மேல்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ். இவரது மனைவி ஆஷா. இவர்கள் திருப்பூரில் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் தங்களுடைய ஒரே மகன் முகிலன் (6) பாட்டி வீட்டில் வளர்ந்து வந்தார். இந்நிலையில் பாட்டி விஜயா மாந்திரீக வேலைகளில் ஈடுபட்டு வருவாராம். இந்நிலையில் அமாவாசையை முன்னிட்டு தனது பேரன் முகிலன் என்பவரை நரபலி கொடுத்துவிட்டு ஆங்காங்கே பொருள்களை சிதறடித்து வைத்துள்ளார் விஜயா. சிறுவன் நரபலி கொடுக்கப்பட்ட தகவல் காவல்துறையினருக்கு தெரியவந்தது. இதையடுத்து மேல் பட்டி போலீசார் விரைந்து சென்று நரபலி கொடுக்கப்பட்ட சிறுவன் முகிலன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதைதொடர்ந்து போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் விஜயா மாந்திரீக வேலைகளில் ஈடுபட்டு வருவது உறுதியானது. இதையடுத்து உண்மையிலேயே சிறுவன் நரபலி தான் கொடுக்கப்பட்டானா? அல்லது வேறு ஏதாவது தகவல்கள் உள்ளனவா? என்று தீவிர புலன் விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுவன் நரபலி கொடுக்கப்பட்ட விஷயம் வேலூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.