வேலூர் கோட்டையில் இறந்தவர்களின் உடலை வைத்து பிரார்த்தனை செய்ய தடை கோரி இந்து முன்னணி போராட்டம்!

வேலூர், அக். 8-
வேலூர் கோட்டைக்குள் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க தேவாலயத்தில், இறந்தவர்களின் உடலை வைத்து பிரார்த்தனை செய்வது தொடர்பாக புதிய நடைமுறை உருவாகி வருவதாகக் கூறியும், அதற்கு நிரந்தரமாக தடை விதிக்கக் கோரியும் இந்து முன்னணி மற்றும் பொதுமக்கள் சார்பில் தொல்லியல் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
வேலூர் கோட்டைக்குள் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் பல்வேறு வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டடங்கள் உள்ளன. அவற்றில் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட தேவாலயமும் ஒன்றாகும். இந்த தேவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் பிரார்த்தனை நடைபெறவும், மற்ற நாட்களில் பள்ளிக்கூடமாக பயன்படுத்தவும் அக்காலத்தில் நடைமுறைகள் இருந்ததாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தரப்பில் தெரிவித்தனர்.
இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமையும், அதனைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமையும் இறந்தவர்களின் உடலை தேவாலயத்திற்குள் கொண்டு சென்று பிரார்த்தனை நடைபெற்றதாக அவர்கள் தரப்பில் தெரிவித்தனர். இதுபோன்ற நடைமுறை இந்துக்களுக்கு எதிராகவே செயல்படுவதாகவும் இந்த நிலை, தொடர்ந்து அனுமதிக்கப்பட்டால் மத நல்லிணக்கத்திற்கு பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர். எனவே, வேலூர் கோட்டைக்குள் இறந்தவர்களின் உடலை கொண்டு வந்து பிரார்த்தனை செய்வதைத் தடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர்.
இதுதொடர்பாக இந்து முன்னணி மற்றும் பொதுமக்கள் வேலூர் கோட்டைக்குள் உள்ள தொல்லியல் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, உதவி பராமரிப்பாளர் மற்றும் தொல்லியல் துறை அதிகாரி அகல்யாவிடம் தங்களது கோரிக்கைகள் குறித்து தெரிவித்ததுடன், மனுவையும் அளித்தனர்.
மனுவைப் பெற்றுக்கொண்ட அலுவலர் அகல்யா, கோரிக்கையை உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று, உரிய பரிசீலனைக்குப் பிறகு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்ததாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறினர்.
மேலும், வேலூர் கோட்டையில் உள்ள ஸ்ரீஜலகண்டேஸ்வரர் கோயிலுக்கு சுமார் ரூ.5 கோடி மதிப்பிலான தங்கத்தேர் ஒன்றை ஒருவர் தானமாக வழங்கியுள்ளதாகவும், அந்த தங்கத்தேரை பாதுகாப்பாக நிறுத்துவதற்கு உரிய இடத்தை ஒதுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
தொல்லியல் துறையின் வேலூர் பொறுப்பு அதிகாரி பணிக்கு வருவது தொடர்பாகவும், பொதுமக்கள் மற்றும் செய்தியாளர்களின் புகார்களுக்கு உரிய பதில் அளிப்பது தொடர்பாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.
இந்த மனு அளிக்கும் நிகழ்வில் இந்து முன்னணி மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் மகேஷ், நிர்வாகி பாஸ்கர், பாஜக நிர்வாகிகள் பாபு, இளங்கோ, பொதுமக்கள் சார்பில் சுரேஷ், பாஸ்கர் மற்றும் சிவாச்சாரியார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.