வேலூர் தாலுகா அளவில் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம்:மழையின்றி வறட்சியால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு வழங்க கோரிக்கை!

வேலூர், அக். 7-
வேலூர் மாவட்டம், வேலூர் தாலுகா அலுவலகத்தில் தாலுகா அளவிலான விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் தாசில்தார் உதயகுமார் தலைமையில் நடைபெற்றது. துணை தாசில்தார் சதீஷ்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை தெரிவித்தனர்.
விவசாயம் பாதிக்காத வகையில் சீரான மின்சாரம் வழங்க வேண்டும், முருங்கைக் கீரையைப் பதப்படுத்தி ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும், வேலூர் மாவட்டத்தில் மாம்பழம் பதப்படுத்தும் நிறுவனத்தை அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை விவசாயிகள் முன்வைத்தனர். மேலும், விவசாய நிலங்களில் மின்கம்பங்களை அமைப்பதால் விவசாயப் பணிகள் கடுமையாக பாதிக்கப்படுவதாகவும், விவசாயிகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் மின்கம்பங்களை ஒதுக்குப்புறமாக அமைக்க வேண்டும் என்றும் ஓட்டேரி, பாலமதி பகுதியைச் சேர்ந்த விவசாயி ஒருவர் கோரிக்கை விடுத்தார்.
அலமேலுமங்காபுரம் ஏரியில் இருந்து வண்டல் மண்ணை விவசாயப் பயன்பாட்டிற்கு எடுத்துச் செல்ல அனுமதிக்க வேண்டும். வேலூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் வழங்கப்படும் கோணிப்பைகளைத் திருப்பி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது அதற்கான தொகையை வழங்க வேண்டும். குறைந்த மின்னழுத்தப் பிரச்சனையைத் தீர்க்க வேண்டும். முருங்கைப் பொருட்களை மதிப்புக்கூட்டி விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏரி நீர்வரத்துக் கால்வாய்களைத் தூர்வார வேண்டும். ஏரிக்கரைகளில் பயன்தரும் மரக்கன்றுகளை நட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளையும் விவசாயிகள் முன்வைத்தனர்.
மேலும், மழை இல்லாததால் வறட்சியால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். இதற்கு அதிகாரிகள் பதிலளிக்கையில், பயிர் பாதிப்பு தொடர்பாகக் கணக்கெடுப்பு நடைபெற்று வருவதாகவும், விவசாயிகள் தங்கள் பகுதி வேளாண் அலுவலரை அணுகி பயிர் பாதிப்பு குறித்து தெரிவிக்கலாம் என்றும் தெரிவித்தனர்.