தமிழியக்கம் சார்பில் “ஞானம்பாடி” விருது வழங்கி கவுரவிப்பு!தமிழ் மொழியை எங்கும் விட்டு கொடுக்க வேண்டாம்:கவிஞர் வைரமுத்து வலியுறுத்தல்!வேலூர், ஆக. 16-தமிழ் மொழியை எங்கும் விட்டு கொடுக்க வேண்டாம்; படைப்பாளியைப் பார்க்காமல், படைப்புகளை பாருங்கள் என்று ஞானபீட விருதாளர் கவிஞர் வைரமுத்து பேசினார்.விஐடி பல்கலைக்கழகத்தில் தமிழியக்கம் சார்பில் ஞானபீட விருது பெற்ற கவிஞரும், திரைப்பட பாடலாசிரியருமான வைரமுத்துவுக்குப் பாராட்டு விழா நடைபெற்றது.விழாவில் தமிழியக்கம் சார்பில் கவிஞர் வைரமுத்துவுக்கு, “ஞானம்பாடி” விருதை, தமிழியக்க நிறுவனரும், விஐடி வேந்தருமான கோ.விசுவநாதன் வழங்கி சிறப்பித்தார்.ஞானபீட விருதாளர் கவிஞர் வைரமுத்து ஏற்புரையாற்றி பேசியதாவது:எனக்கு மார்ச் 14-ல் ஞானபீட விருது அறிவிக்கப்பட்டது. முதலில் வந்து பாராட்டு விழாவுக்கு அழைத்தவர் விஐடி வேந்தர் கோ.விசுவநாதன்.இந்தியாவில் அங்கீரிக்கப்பட்ட 22 மொழிகளின் எழுத்தாளர்களுக்கு ஞானபீட விருது மோட்சம்; உச்சம். இந்தியாவில் இலக்கியத்துக்கு வழங்கப்படும் நோபல் பரிசு ஞான பீட விருதாகும்.இன்றைய சூழலில் ஒரு கவிஞன், இன்னொரு கவிஞனை அங்கீகரிப்பது இல்லை.ஞானபீட விருது தேர்வுக்குழுவில் 11 பேர் வெவ்வேறு மொழிகளை சேர்ந்தவர்கள். இதுவரை தமிழர் கூட ஞானபீட உறுப்பினராக இல்லை. தமிழ் மீது வடபுலத்தில் சிறிய எதிர்ப்பு இருக்கிறது.தமிழின் ஆழம், இலக்கியம், இலக்கணம் ஆகியவற்றை அவர்கள் முற்றிலும் அறிந்திருக்கவில்லை. மகாகவி ரவீந்திரநாத் தாகூர் படத்தை நாங்கள் வைத்து இருக்கிறோம்.வடக்கிற்கும், தெற்கிற்கும் பாலமாக இருக்கும் பாரத தேசம் என்று தோள் கொட்டுவோம் என்று சொன்ன பாரதியை அறியாமல் இருக்கிறார்கள். தமிழ் படைப்பாளிகள் மூன்று ஞான பீட விருதுகளை பெற்றுள்ளனர்.தமிழ் படைப்புகளை வடபுலம் அறியவில்லை. தெலுங்கு, கன்னடம், மலையாளம், மராத்தி, வங்காளத்தில், ஸ்பெயின் மான்டரின், ரஷ்யா, பிரெஞ்ச் மொழிகளில் மொழி பெயர்த்தால் தான் , தமிழ் உலகிற்கு சென்று செல்லும்.இந்தி 12 முறையும், கன்னடம் 8 முறையும், வங்காளம், மலையாளம் 6 முறையும், உருது மொழி 5 முறையும் ஞான பீட விருதை பெற்றுள்ளன.மேலும் பல்கலைக்கழங்கள், தொண்டு நிறுவனங்கள், பேராசிரியர்கள், மொழி பெயர்ப்பாளர்கள் படைப்பாளியைப் பார்க்காமல், அவர்களின் படைப்புகளை பாருங்கள். படைப்புகளை பார்த்து மொழி பெயர்ப்பு செய்யுங்கள். படைப்பாளியைக் கழித்துவிட்டு படைப்பைப் பாருங்கள். குறைகளை களைந்து படைப்புகளின் நன்மையை மட்டும் பாருங்கள்.தமிழ் மொழியை எங்கும் விட்டு கொடுக்க வேண்டாம். தமிழ் இந்தியை விட சிறந்த மொழி. இந்த பெருமை என்னுடையது அல்ல. அது புலவர்களின் நாவில் பட்டு, உமிழ் நீர் பட்டு, எழுத்தாணி பட்டு, உச்சரிப்பில், திளைப்பில் காலம்காலமாக கடத்தப்பட்டு வந்ததே தமிழ். அது என்னுடையை பெருமை அல்ல.இங்கே எழுத்தாளர்கள், கவிஞர்கள், விமர்சர்கள் உருவாக வேண்டும்.அவர்கள் மொழியை முன்னிறுத்தி செல்ல வேண்டும்.ஜென் ஸீ தலைமுறையின் புதிய குரல் கேட்கிறது. அவர்களை வெறுக்க மாட்டேன், மறுக்க மாட்டேன். அவர்களிடம் பத்திரிகையைக் கொடுத்து தடையில்லாமல் படி என்று சொல்லி பாருங்கள். தமிழ் படிக்க தெரியாத தலைமுறைக்கு ஜென் ஸீ பெயரா? தமிழ் எழுத வராத ஒரு தலைமுறைக்கு ஜென் ஸீ பெயரா?இந்த தலைமுறையை மீட்டெடுக்க வேண்டியதும், இனிவரும் தலைமுறை தமிழை தாண்டி போகாமல் பார்த்துக் கொள்ள வேண்டியதும் இந்த பல்கலைக்கழகங்களின் பொறுப்பு என்று சொல்ல விரும்புகிறேன்.விருதுகளினால் மொழி , இனம் வளருகிறது என்பதை அளவுகோலாக பார்க்க வேண்டும்.உலகில் அதிகமாக 149 கோடி பேர் ஆங்கில மொழி பேசுகின்றனர். 118 கோடி பேர் சீன மொழி பேசுகின்றன்ர. 61 கோடி பேர் இந்தி பேசுகின்றனர். தமிழ் 24-ம் இடத்தில் உள்ளது.எந்த இனம் தாய்மொழியை சரியாகப் பேசுகிறதோ அதை வைத்து உலக மொழி தரவரிசை உருவாக்கப்படுகிறது. எனவே தமிழர்கள் குடும்ப எண்ணிக்கையைப் பெருக வேண்டும்.சீனா, ஐரோப்பிய நாடுகளில் குழந்தைகளை பெற்றெடுக்க மானியம் தரும் சூழல் உள்ளது. தமிழர்களுக்கு அப்படி ஒரு சூழல் வர கூடாது.இவ்வாறு அவர் பேசினார்.விஐடி வேந்தர் கோ.விசுவநாதன் பேசியதாவது:24 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழகத்துக்கு ஒரு மரியாதை கிடைத்திருக்கிறது. அகிலன், ஜெயகாந்தனுக்குப் பின்னர் வைரமுத்துவுக்கு ஞானபீட விருது கிடைத்துள்ளது. தமிழர்களுக்கு, தமிழ்நாட்டுக்கும் கிடைத்த பெருமையாகக் கருதுகிறேன்.வைரமுத்து குறுகிய காலத்தில் மக்களின் கவனத்தை ஈர்த்தவர். 1980-களில் திரைப்பட பாடல்கள் எழுத ஆரம்பித்து 40 ஆண்டுகளில் 7500-க்கும் மேற்பட்ட பாடல், கவிதைகளை எழுதி உள்ளார்.இவர் 7 முறை தேசிய விருதுகளை பெற்றுள்ளார். இவர் 40 நூல்களை எழுதியுள்ளார். 26 லட்சம் நூல்கள் விற்பனையாகி உள்ளன. இவரின் படைப்புகள் ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், ரஷ்ய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.பாரதிதாசன், கண்ணதாசனுக்குப் பிறகு மக்களை ஈர்த்தவர் வைரமுத்து. இந்தியா சாதி, மதம், கட்சிகளின் பெயரால் பிரிக்கப்பட்டிருக்கிற நாடு. இவை எல்லாவற்றையும் கடந்து அவரை போற்ற வேண்டும். ஞானபீட விருது பெற்ற வைரமுத்துவுக்கு நாடு முழுவதும் பாராட்டு விழாக்கள் எடுக்க வேண்டும்.தமிழ்நாட்டுக்கு இருக்கும் பெருமையே கல்வி தான். ஆனால், 17 பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள் நியமிக்கப்படவில்லை. உயர்கல்வியில் மொத்த மாணவர் சேர்க்கை விகிதத்தில் நாட்டில் முதலிடத்தில் உள்ள தமிழகம் கல்வித்தரத்தில் கீழே போய்விடுமோ என்ற அச்சம் உள்ளது.எனவே, கல்வியைப் பொருத்தவரை கட்சிகளுக்கு அப்பாற்பட்டு, பிரச்சினைகளை விட்டு மத்திய, மாநில அரசுகள் ஒன்று சேர்ந்து செயல்பட வேண்டும். வெளிநாடுகளில் இருப்பதைப் போல தமிழ்நாட்டிலும் கல்வி விவகாரத்தில் ஒன்றாக அமர்ந்து பேசி தீர்வு காண வேண்டும்” என்றார்.முதன்மை விருந்தினராக உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியும், கேரள மாநில முன்னாள் ஆளுநருமான ப.சதாசிவம் பேசுகையில், “இந்தியாவில் 15 மொழிகளில் சிறந்த எழுத்தாளர்களுக்கு ஞானபீட விருது வழங்கப்பட்டுள்ளது. 1982 வரை ஓர் எழுத்தாளரின் படைப்பை பாராட்டி ஞானபீட விருது வழங்கப்பட்டது. ஓர் எழுத்தாளரின் வாழ்நாளில் இலக்கியப் பங்களிப்பை கவுரவிக்கும் வகையில் விருது வழங்கப்பட்டுள்ளது. இதுவரை 7 பெண் கவிஞர்கள் ஞானபீட விருதைப் பெற்றுள்ளனர். கவிஞர் வைரமுத்து தனது பாடல்களால் கோடிக்கணக்கான மக்களின் இதயங்களை வென்றுள்ளார்” என்றார்.முன்னதாக தமிழியக்கத்தின் செயலாளர் மு.சுகுமார் வரவேற்றார். பொதுச் செயலாளர் அப்துல்காதர் வாழ்த்துப்பா வாசித்தார். பொருளாளர் வே.பதுமனார் மற்றும் கவிதைப்பித்தன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். வேலூர் மாவட்டம் காட்பாடி 4வது வட்டம் சார் பில் செங்குட்டை கராத்தே மாஸ்டர் அமுதா அச்சுதன் கலந்து கொண்டார். தமிழியக்கத்தின் மாவட்ட செயலாளர் பா.சம்பத்குமார் நன்றி கூறினார்.